செய்திகள்

சன் தொலைக்காட்சியின் "அயன்" திரைப்படத்தை புறக்கணிப்போம்!

அன்பான தமிழ் மக்களே!

தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு கொடிய போரை ஏவி விட்டுள்ளது. தினமும் பல நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடிய இன அழிப்பு யுத்தத்தை இந்தியாவின் காங்கிரஸ் அரசு வழி நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் சிறிலங்காவின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை எமது மக்கள் தன்னெழுச்சியோடு முன்னெடுத்து வருகின்றார்கள். அதே வேளை சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்து யுத்தத்தை வழிநடத்தும் காங்கிரஸ் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்கும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கும் எமது எதிர்ப்புகளை நாம் தெரிவிக்க வேண்டும்

தமிழ் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் புலம்பெயர் நாடுகளிலும் தமது ஒளிபரப்பை நடத்தி வருகின்றன. இந்தத் தொலைக்காட்சிகள் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை காவி வருவதோடு, தமிழின எதிரிகளை நியாயப்படுத்தும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன.

எமது மக்களின் அவலங்களை வெளிப்படுத்த வேண்டிய கடமையுள்ள தமிழ் ஊடகங்கள் எமது மக்களை அழிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தத் தொலைக்காட்சிகளுக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

சன் தொலைக்காட்சி “சன் பிக்ஸர்” என்ற பெயரில் திரைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றது. இந்தத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுவதன் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை சன் தொலைக்காட்சி பெறுகின்றது. எமக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு, எம்மிடம் இருந்தே பெருந் தொகை வருவாயையும் பெறுகின்றது.

சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றவற்றையும் இவைகளின் சார்பில் வெளிவரும் திரைப்படங்களையும் புறக்கணித்து நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

சன் தொலைக்காட்சியின் வெளியீடாக அடுத்து வரவுள்ள “அயன்” திரைப்படத்தை புறக்கணித்து நாம் எமது எதிர்ப்பை தெரிவிப்போம். இந்தத் திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை நாம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நடவடிக்கை அயன் திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கோ, தமிழ் திரையுலகத்திற்கோ எதிரானது அன்று என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைக்கு எமக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழ் திரையுலகத்திற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ரஜனிகாந்தின் ரசிகர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கே வாக்களிப்பதாக தீர்மானித்துள்ளதையும் நாம் மிகவும் பாராட்டி அவர்களுக்கும் எமது அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

“அயன்” திரைப்படப் புறக்கணிப்பு என்பது சன் குழுமம் மற்றும் கலைஞர் குடும்பத்திற்கு எமது அதிருப்தியையும், வேதனையையும், கோபத்தையும் தெரிவிக்கும் ஒரு நடவடிக்கையே தவிர வேறு யாருக்கும் எதிரானது அன்று.

சன் மற்றும் கலைஞர் குழுமத்தின் இன்றைய நிலைப்பாட்டிற்கு எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் சன் தொலைக்காட்சியின் “அயன்” திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும்படி அனைத்து தமிழ் மக்களையும் உரிமையோடும் அன்போடும் வேண்டிக் கொள்கிறோம்.

ஒற்றுமையே வலிமை
வலிமையே வாழ்வு

தமிழர் விழிப்பு இயக்கம்
thamilarvilippuiyakkam2009@gmail.com