இலங்கைக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டுவரும் இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசிரியரான என். ராம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்
மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிகைகளான “பிஸினஸ் லைன்’, “பிரண்ட் லைன்’, “ஸ்போர்ட்ஸ் டார்’ ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இந்து குழுமத்தை நடத்தி வரும் “கஸ்தூரி அன்ட் சன்ஸ்” நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து இந்து நாளிதழின் புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் “கஸ்தூரி அன்ட்’ குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல.
இவர் எதிர்வரும் வாரம் வியாழக்கிழமை இந்தப் பதவியை பொறுப்பேற்கவுள்ளார். அதேநேரத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக என். ராம் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக அருண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் “யு.டிவி நியூஸ்” மற்றும் டைம்ஸ் ஒவ் இந்தியா’ பத்திகையை நடத்தி வரும் பென்னட், கோஸ்மேன் அன்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார்.
கஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களிடையே பத்திரிகையை நடத்துவதிலும், யார் ஆசிரியராக இருப்பது என்பதிலும் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களை ஆசிரியராகவும், செயல் இயக்குனராகவும் நியமிக்கும் முடிவுக்கு இந்த நிறுவனம் வந்துள்ளதாக தெரிகிறது.
என்.ராம், கடந்த 8 ஆண்டுகளாக இந்து பத்திகையின் ஆசிரியராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Du skal logge ind for at skrive en kommentar.