செய்திகள்

டென்மார்க் தமிழர் பேரவை த.தே.கூட்டமைப்புக்கு கண்டனம் !

தமிழீழ தேசத்தில் எமது மக்கள் தங்கள் அபிலாசைகளை எடுத்துரைக்க முடியாத நிலையில் சிங்களத்தின் வதை முகாம்களிலும் திறந்த வெளிச் சிறைகளிலும் வாடும் நிலையில் தமிழீழ மக்களின் ஒருமித்த குரலாக, சுதந்திரமாக தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையை தமிழ் மக்களின் நிகழ்ச்சி நிரலில் எடுத்துரைத்து வரும் புலம் பெயர் தமிழீழ மக்கள் சிங்கள அரசுக்கு பெரும் சவாலாக இருந்துவருகின்றனர். இதனால் சீற்றம் கொண்டுள்ள சறிலங்கா அரசு பல நாசகார முயற்சியில் ஈடுபட்டுவருவதை நாம் அறிவோம்.

எந்தவொரு சக்தியின் நிகழ்சி நிரல்களிலும் செயல்படாது தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை தாகமாக கொண்டு செயல்பட்டு வரும் புலம் பெயர் தமிழீழ மக்கள் பல் வேறு இடையூறுகளை சந்தித்துவருகின்றனர். தமது நிகழ்சி நிரலில் செயல்பட மறுக்கும் செயல்பாட்டாளர்களை அச்சுறுத்தி பணியவைக்கவும் சில மேற்கத்தேய நாடுகள் முயற்சித்துவருகின்றனர்.

இந்த அச்சுறுத்தல்கள் கைதுகளாகவும் நடைபெறுகின்றது. ஆனால் எந்த ஒரு அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது செயலாற்றும் புலம் பெயர் தமிழீழ மக்கள், தமிழீழ மண்ணினதும் மக்களினதும் நிரந்திர பாதுகாப்பென்பது தமிழீழ தனியரசை மீள் நிறுவுவதிலேயே உறுதியாக்கிகொள்ள முடியுமென அனைத்துலகத்திற்கு இடித்துரைத்து வருகின்றனர். தமிழீழ தனியரசு என்பது முள்ளிவாய்காலுடன் முடிந்த ஒரு சொல்லல்ல, இது ஒவ்வொரு தமிழீழ மக்களின் அபிலாசை.

புலம் பெயர் தமிழீழ மக்களின் கருத்துக்களை மழுங்கடிக்கும் ஒரு செயலாக தற்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துவரும் கருத்துக்கள் அமைந்து வருகின்றன. அண்மையில் மூத்த அரசியல்வாதியென கூறப்படும் இரா.சம்பந்தன் தமிழீழ தனியரசை கைவிட்டதாக கூறிய கருத்து புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் குரல்களை நசுக்க மேற்கத்தேய நாடுகள் பயன்படுத்துகின்றனர். டென்மார்க் தேசிய வானொலியில் கடந்த 17ம் நாள் தமிழர்கள் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டனர் என்ற தலையங்கத்துடன் ஒரு ஆய்வு நிகழ்சி ஒலிபரப்பபட்டது.

சிறிலங்கா அரசு நடாத்திய சிறிலங்காவிற்கான சனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவினை தமிழீழ மக்கள் முற்றுமுழுதாக புறக்கணித்திருந்தார்கள். தமிழீழ மக்கள் 1976ம் ஆண்டு அரசியல் தலைமைகளுக்கு வழங்கிய ஆணையையே டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களுக்கு ஒரு கருத்தையும், அனைத்துலகத்திற்கு ஒரு கருத்ததையும் தெரிவித்துவருவதை காணக்கூடியதாகவும் உள்ளது. இவர்களது இந்த கருத்துக்களை எமது மக்களுக்கு மறைத்து சில ஊடகங்களும் இணையத்தளங்களும் இயங்கிவருவது மிகவும் கவலைக்குரியது.

கடந்த சனிக்கிழமை பிபிசி செய்தியும் தமிழ்மக்கள் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதாரப்படுத்தி அறிவித்திருந்தது. கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களை தமிழரின் கருத்தாக தெரிவிக்காத அனைத்துலக ஊடகங்கள் தற்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களை தமிழ் மக்களின் கருத்தாக கூறிவருவதின் கபட நோக்கத்தை புரிந்துகொள்ளவேண்டும்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் தாயகத்தில் உள்ள தமது உறவுகளுக்கு தற்போதய தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களினால் எமது இனத்திற்கு ஏற்பட போகும் ஆபத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். சிறிலங்காவின் பாராளமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை எதிர்பார்த்து தமிழ்ர் என்ற அடையாளத்தையே நாம் இழக்க வழிகோலுகின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

தமிழீழ மக்கள் 1977ம் ஆண்டு வழங்கிய ஆணையை எந்தவொரு சந்தற்ப்பத்திலும் மீளப்பெறவில்லை. சிறிலங்காவின் கடந்த சனாதிபதி தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த பிழையான முடிவை தமிழீழ மக்கள் புறக்கணித்திருந்தனர் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழீழ தனியரசு தான் தமிழ் மக்களின் நிரந்தர பாதுகாப்பு எண்ற மக்கள் ஆணையை சமீப காலங்களில் புலம்பெயர் தமிழீழமக்கள் மீள் வலியுறுத்தி வருகையிலும், தாயகத்தில் எமது உறவுகள் எந்த ஒரு கருத்துக்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலையிலும் தற்போதய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் கருத்துக்கள் புலம் பெயர் தமிழீழமக்களின் போராட்டங்களை வலுவிழக்கச்செய்வதால் புலம் பெயர் தேசங்களில் செயற்படும் அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒண்றிணைந்து தமிழ் தேசிய இனத்தின் இருப்பை உறுதிப்படுத்த செயலாற்ற வேண்டும்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

அரசியல் விவகாரக்குழு
டென்மார்க் தமிழர் பேரவை