புலம்பெயர் தேசத்துப் போர்க்களம் தோற்கடிக்கப்படாமல் தடுக்க வேண்டிய கடமை அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ளது! பாரீஸ் ஈழநாடு.

Home » homepage » புலம்பெயர் தேசத்துப் போர்க்களம் தோற்கடிக்கப்படாமல் தடுக்க வேண்டிய கடமை அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ளது! பாரீஸ் ஈழநாடு.

முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்படுத்திய அவலமும் அதிர்ச்சியும் தமிமீழத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் தொடர் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. விடுதலைப் புலிகள் கள முனையில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழீழ மக்களின் அரசியல் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தைக் கைப்பற்றுவதற்கு பல தரப்பினரும் பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்கள் ஈழத் தமிழர்களது தோல்விக்குள் தமது வெற்றியை நிர்ணயித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

தமிழீழ மக்களது அரசியல் தலைமைக்குத் தாமே உருத்துடையவர்கள் என்ற கோதாவில் இந்தியப் பின்னணியுடன் களம் இறங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழ்த் தேசியத்தைச் சிதைந்து போக விடாமல் காக்கும் பொருட்டு, தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியும், தமிழ் மக்கள் மீதான வெற்றிப் பேரிகையுடன் சிங்கள தேசத்தின் அரசியல் கட்சிகளும், சில பல சுயேச்சைக் குழுக்களும் களம் இறங்கியுள்ளனர். சிங்கள – இந்திய அரசுகளின் சதிகளுக்குத் தமிழீழ மக்கள் பகடைக் காய்களாக்கப்படுவது தொடர்ந்து வரும் நிலையில் புலம்பெயர் சமூகத்திலும் பிளவுகள் உருவாகிவிடுமோ? என்ற சந்தேகம் தமிழ்த் தேசியவாதிகளை அச்சமுறச் செய்து வருகின்றது.

முள்ளிவாய்காகல் பேரவலத்தின்போது புலம்பெயர் நாடுகளில் உருவான போர்க் களங்கள் மக்கள் பேரவைகளாகப் பிரசவிக்கப்பட்டு, ஜனநாயக வழிமுறைகளிலான போராட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்த மேற்குலகு, புலம்பெயர் தமிழர்களின் இந்த மாற்றங்களையும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களையும் அங்கீகரித்து அதனை ஊக்குவித்தும் வருகின்றது. மக்கள் பேரவைகளால் புலம்பெயர் தேசங்கள் தோறும் நடாத்தப்பட்ட ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான மீள் வாக்கெடுப்பும், அதற்கான புலம்பெயர் தமிழர்களின் ஏகோபித்த வாக்குப் பதிவுகளும் மேற்குலகின் அரசியல்ப் போக்கில் பெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளதுடன் சிங்கள அரசு மீதான மேற்குலகின் அழுத்தங்களையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் சட்டத்தரணியும், தமிழீழ விடுதலைக் களத்தில் மிகவும் அறியப்பட்டவருமான திரு. விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களை இணைப்பாளராகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த அறிவிப்பு வெளியாகியது. அந்த அறிவிப்பை மக்கள் பேரவைகளும் வரவேற்றன. பாரிஸ் புறநகர்ப் பகுதியான கிறித்தேல் நகரில் இடம்பெற்ற அகைத்து நாடுகளின் மக்கள் பேரவைகள் இணைந்து உருவாக்கிய உலகத் தமிழர் பேரவை இங்குரார்ப்பண நிகழ்வில் கணனி ஒளித் தொடர்பு மூலம் கலந்து கொண்ட திரு. உருத்திரகுமாரன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசும், உலகத் தமிழர் பேரவையும் சிங்கள இனவாதத்திற்கெதிரான இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகச் செயற்படும் என்று உறுதிபடத் தெரிவித்தார். திரு. உருத்திரகுமாரன் விடுதலைப் புலிகளுடனும், தேசியத் தலைவர் அவர்களுடனும் நெருக்கமாக இணைந்து தேசிய விடுதலைக்காக உழைத்தவர். அவரது சிந்தனைகளில், செயல்களில் தூய்மையும், நேர்மையும் இருக்கும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அதில், எமக்கும் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

புலம்பெயர் தமிழீழ மக்களைப் பெறுத்தவரை, ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கும் இந்த இரு அமைப்புக்களும் பொது இணக்கப்பட்டுடன் செயல்படுவதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும் என்றே நம்புகின்றார்கள். அதில், இந்த அமைப்புக்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும் தெளிவாகவே உள்ளார்கள் என்பது பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய உணர்வாளர்களைப் பொறுத்த வரையில், முள்ளிவாய்க்கால்வரை சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகக் களமாடிய தமிழர் படைக் கட்டுமானங்களின் பல்வேறு அணிகள் போலஇ புலம்பெயர் தேசங்களின் ஜனநாயகத் தளங்கள் ஊடாகப் பயணிக்க முற்படும் இந்த இரு அமைப்புக்களும் தமிழீழ விடுதலையை இலக்காகக் கொண்ட இரு படையணிகளாகச் செயற்பட வேண்டும் என்பதே தமிழீழ மக்களின் பெருவிருப்பாக உள்ளது.

இரண்டு அணிகளின் தலைமைகளும் தமிழீழ இலக்கு நோக்கிப் பரிசுத்தமான பயணத்தை மேற்கொண்டாலும்இ அவற்றின் இரண்டாம், மூன்றாம் நிலைச் செயற்பாட்டாளர்களாக இயங்குபவர்களது இலக்குகள் வேறானவையாகவே அவதானிக்கப்படுகின்றது. பதவிகளைக் குறியாகக் கொண்டு செயற்படும் இவர்களால், இந்த அமைப்புக்களின் இலக்குகள் தடம் புரண்டுவிடுமோ என்ற அச்சங்களை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, நாடு கடந்த தமிழீழ அரசு சார்பாகச் செயற்படும் செயற்பாட்டாளர்கள் தற்போது சிங்கள அரசின் பிடியில் சிக்கியுள்ள கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் அவர்களது தேசியத் தலைவர் குறித்த அறிவிப்பை முன்நிறுத்துவதில் இன்றுவரை குறியாகச் செயற்படுவது புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஆதரவைப் பெறுவதில் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. தேசியத் தலைவர் அவர்கள் மீண்டும் வருவார் என்ற காத்திருப்போடு உள்ள தமிழீழ மக்கள் மத்தியில் இவர்களது இந்த எதிர்க் கருத்துருவாக்கம் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஆதரவுத் தளத்தையும் பாதிப்பிற்குள்ளாக்கி வருகின்றது. பிரான்சில், ஏற்கனவே பிரான்சில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் அறிமுக நிகழ்விலும் இந்தக் கருத்துருவாக்கம் முன்நிலைப் படுத்தப்பட்டது. இறுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் குறித்த கலந்துரையாடலின்போதும் இதே கருத்து முன் வைக்கப்பட்டது.

பிரித்தானியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்களிப்பின்போது பொது இணக்கப்பட்டின் அடிப்படையில் தமிழர் பேரவையுடன் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடாளர்கள் இணைந்து செயற்பட்டு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். இதன் பின்னர், சுவிசில் இடம்பெற்ற மக்களவைத் தேர்தலில் நிலமை முற்றாக மாற்றம் பெற்று, நாடு கடந்த தமிழீழ அரசு இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்களால் மக்கள் பேரவைகளின் கருத்துக்களை நிராகரிக்கும் அறிக்கை ஒன்றை விடவேண்டிய அளவிற்கு முரண்பாடுகள் வலுப்பெற்றது. இந்த முரண்பாடுகள் தமிழீழ விடுதலை நோக்கிய நகர்வுக்கு ஆரோக்கியமானதாகத் தோன்றவில்லை. ஈழத் தமிழர்கள் மீதான இன வன்முறைக்கும், இன அழிப்பிற்கும் சிங்கள தேசத்தின் அனைத்துக் கட்சிகளும் அணி திரண்டு நிற்கும் நிலையில், அந்த இனவாதத்திற்கெதிராகப் போராட முன்வந்துள்ள இரு அமைப்புக்களும் தமக்குள் முரண்படுவது வேதனைக்குரிய விடயமாகவே உள்ளது.

இந்த நிலையில், பிரான்சிலும் இந்த முரண்பாடுகள் மேன் மேலும் இறுக்கம் பெற்றே வருகின்றது. இந்த முரண்பாடுகளை அகற்றி, ஒன்றுபடுத்தும் முயற்சியில் பல தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் முயற்சிக்கின்ற போதும், இன்றுவரை எதுவித உடன்பாட்டையும் எட்ட முடியாமலேயே உள்ளது. இதனால், இந்த விடயங்களை இரு அமைப்புக்களின் தலைமைக்கும் தெரியப்படுத்த வேண்டிய கடமையும், உரிமையும் தமிழ்த் தேசிய ஊடகங்களுக்கு உண்டு என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.

எதிர்வரும் ஏப்ரல் 24, 25 ஆகிய திகதிகளில் மக்கள் பேரவைகளுக்கான தேசிய அவைத் தேர்தலும், மே 2 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலும் நடாத்தப்பட உள்ளது. ஒரு வார இடைவெளியில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களும் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களை மிகுந்த சிரமத்திற்கும், குழப்பத்திற்கும் உள்ளாக்கக்கூடியதாகவே உள்ளது. இந்த இரு தேர்தல்களையும் ஒரே திகதியில் நடாத்தும் இணக்கப்பாடு ஒன்று எட்டத் தவறும் பட்சத்தில் பெரும்பான்மையான தமிழர்கள் இந்த இரு தேர்தல்களையும் புறக்கணிக்கக்கூடிய அபாயகர நிலமையும் உருவாகக் கூடும். வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பில் 35,000 தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமது தமிழீழ இலட்சிய தாகத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், எதிர்வரும் தேர்தல்களில் அதற்கு நிகராக மக்கள் கலந்து கொண்டு வாக்குப் பதிவை மேற்கொள்ளத் தவறினால், இந்தத் தேர்தல்கள் கேலிக்குரியதாகவே மாறிவிடும்.

நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரனது விருப்பங்களுக்கு மாறாகஇ குறிப்பிட்ட சிலர் போட்டிகளைத் தவிர்த்து அதில் நுழைவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் தற்போது வெளிக்கிளம்பியுள்ளது. ‘நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் யாரும் வேட்பாளராகக் களம் இறங்கலாம்’ என்ற அதன் இணைப்பாளரான திரு. உருத்திரகுமாரன் அவர்களது ஜனநாயக அணுகுமுறை பிரான்சிலுள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா? என்பதில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது. பிரான்சில் கே.பி. அவர்களின் ஆதரவாளர்கள் என்று பிரிந்து நிற்கும் சிலர், நாடு கடந்த தமிழீழ அரசுக்கு சொந்தம் கொண்டாடும் முயற்சியில் இறங்குவது தடுக்கப்பட்டு, அதை ஒட்டு மொத்த தமிழீழ மக்களுக்கான விடுதலை அமைப்பாக நிலைநிறுத்த திரு. உருத்திரகுமாரன் அவர்கள் முயற்சிக்க வேண்டும். அவாவாறான ஜனநாயக உரிமை மக்களுக்கு மறுக்கப்பட்டால், அது ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்ற உயரிய சிந்தனை அதன் அர்த்தத்தை இழந்துவிடும். அத்துடன், உலக நாடுகளின் ஆதரவினை வென்றெடுப்பதற்கான தகைமையையும் இழந்துவிடும் என்பதையும் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் ஏற்கனவே செயற்படு திறனைக் கொண்டுள்ள அனைத்து அமைப்புக்களையும் இணைத்து, நீதியானதும், நியாயமானதுமான தேர்தல் மூலம் மக்களது விருப்பங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்படும் களமாக இந்தத் தேர்தல் அமையவேண்டும். இதன்மூலம் தெரிவாகும் உறுப்பினர்களால் அமைக்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசே உலக தளத்தில் அங்கீகாரம் பெறத் தகுதியானதாகக் கருதப்படும். குறிப்பிட்ட சிலரது விருப்பங்களை நிறைவேற்றும் முகமாக, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் வெளிப்படைத் தன்மை இல்லாத தந்திரோபாயம் மேற்கொள்ளப்படுமானால், நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அற்புதமான போராட்ட வடிவம் கட்டாய கருக் கலைப்புக்குள்ளாக்கப்பட்ட பரிதாபகர நிலையை அடைந்துவிடும்.

தற்போதைய குழப்பமான நிலமைகளை திரு. உருத்திரகுமாரன் அவர்கள் மக்கள் பேரவைகளுடனான திறந்த பேச்சுக்களினூடாகச் சீர் செய்யவேண்டும். மக்கள் பேரவைகள் திரு. உருத்திரகுமாரன் அவர்களது இலட்சியப் பயணத்தின் பங்குதாரர்களாக மாறவேண்டும். அதற்கான கதவுகள் அகலத் திறக்கப்பட வேண்டும். இலக்கு ஒன்றாக இருக்கும்போது களத்தில் ஒன்றாகப் பயணிப்பதில் தயக்கமோஇ முரண்பாடோ அவசியமற்றது. இந்த இரு அமைப்புக்களும் இணைந்து உருவாக்கும் உயர் பீடமாகவே நாடு கடந்த தமிழீழ அரசு அமைய வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களது அவாவாக உள்ளது.

நான் பெரிது, நீ பெரிது என்பதை விடவும் தமிழீழ இலட்சியம் மிகப் பெரியது. அந்த இலட்சியத்திற்காக ஐம்பதாயிரம் மறவர்களும், ஒன்றரை இலட்சம் தமிழர்களும் தமது இன்னுயிரை ஈகம் செய்துள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை முன்னகர்த்த முயற்சிப்பவர்கள் மக்களை முழுமையாக நம்ப வேண்டும். மக்களது விருப்பங்களைச் சரியாக அறிந்து கொண்டு, அவர்களையும் இணைத்துக்கொண்டு களத்தில் முன்னேற வேண்டும். இதில், சுய விருப்பங்கள் புறக்கணிக்கப்பட்டு, தமிழீழம் என்ற பொது விருப்பு முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக மக்கள் பேரவைகளும், நாடு கடந்த தமிழீழ அரசும் தங்களை சுயபரிசீலனை செய்ய வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் இரு அமைப்புக்களும் தேர்தல்களுக்கு முன்பாகப் பொது இணக்கப்பட்டுக்கு வர வேண்டும் எனபதே புலம்பெயர் தமிழர்களின் விருப்பமாக உள்ளது. அதற்கான கடமைகளிலிருந்து இரு அமைப்புக்களும் தவற முடியாது. அப்படித் தவறும் தரப்பினர் தமிழீழம் தவிர்ந்த வேறு ஒரு நிகழ்ச்சிநிரலில் செயல்படுவதாகவே சந்தேகப்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும். புலம்பெயர் தேசத்துப் போர்க்களம் தோற்கடிக்கப்படாமல் தடுக்க வேண்டிய கடமை அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ளது. அதற்கான அழுத்தங்களை அனைவரும் இரு அமைப்புக்களின்மீதும் பிரயோகிக்க வேண்டும்.


%d bloggers like this: