செய்திகள்

சிறிலங்கா காவல்துறையின் பெயரில் ஈபிடிபி அனுப்பிய கடிதம்.

மாணவன் கபிலநாத் படுகொலை தொடர்பாக ஈபிடிபி ஆயுததாரி மீது நீதிமன்றம் பிடியாணை விடுத்தமையையும் ஆயுததாரியின் முகாம் பொறுப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) ஈபிடிபியின் சார்பாக தென்மராட்சியில் மகிந்தவுடைய வெற்றிலைச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதையும் வெளியிட்ட ஊடகங்களுக்கு யாழ்ப்பாணம் சிறிதர் தியேட்டரில் இருந்து தயாரிக்கப்பட்ட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப்பிரிவு சிறிலங்கா காவல்துறை அத்தியட்சகர் அஜித் சமரக்கோன் பெயரில் ஒப்பமிட்டு றப்பர் ஸ்டாம்ப் பொறிக்கப்பட்டு கடிதம் ஒன்று “உதயன்” நாளிதழ் ஆசிரியருக்கு முகவரியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

“2010.03.29 ஆம் திகதி “உதயன்’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட தவறான செய்தி தொடர்பான விடயம்” என அதற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது.

அத்தோடு அதில் “மேற்படி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரோ அல்லது கைது செய்யப்படவுள்ள சந்தேக நபரோ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) தொடர்புள்ளவர்கள் என்றோ அன்றி அக் கட்சியின் பிரதிநிதிகள் என்றோ இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் இருந்து தெரியவரவில்லை. எனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஈ.பி.டி.பி. உறுப்பினர் என்ற வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதைப் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே அச் செய்தியின் பிழையை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு அதன் பிரதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்ற பிடியாணையில் கூடப்பட்டதை மறுத்து ஈ.பி.டி.பியைக் காப்பாற்றுவதற்காக இத்தகைய உண்மைக்கு முரணான விடயம் அடங்கிய கடிதத்தை ஊடகங்களுக்கு அனுப்ப வேண்டிய தேவை பொலிஸ் அத்தியட்சகருக்கு இருக்கின்றதா?. அத்தோடு இவ்வாறு மறுப்பு பிரசுரிக்கும்படி கோரும் அதிகாரமும் அவருக்கு கிடையாது. ஆகையினால் இவ் விடயம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து “உதயன்”, “சுடர்ஒளி” நாளிதழ்கள் ஆராய்ந்து வருவதாக உதயன் நிர்வாகம் தெரிவித்தும்உள்ளது.

தூய தமிழில் நல்ல கணனி தட்டச்சில் சிறிலங்கா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தின் கணனி எழுத்து அளவும், கடிதத்தின் தலைப்புக்கான எழுத்து அளவும் வகையும்  வழமையாக ஈ.பி.டி.பி.யின் சிறிதர் தியேட்டர் முகாமிலிருந்து அனுப்பப்படும் பத்திரிகை அறிக்கைகளில் உள்ளவற்றை அப்படியே ஒத்திருக்கின்றன.

அத்துடன் ஈபிடிபி தனது இணையத்தில் முதலில் பிரசும் செய்த கடிதம் police-report என்று மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருந்தது. பின் கடிதத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு police-report-final என்று பதியப்பட்டுள்ளது.