செய்திகள்

"இது சிங்கள நாடு அதனால் நான் சொல்வதை நீ கேட்கத்தான் வேண்டும் தமிழா" – மகிந்த யாழ் மண்ணில் பகிரங்க உரை

“ஆம் நாங்கள் சிங்களம். நாடும் சிங்களம்.. அதனால் கேட்டுக்கொண்டு இரு, தமிழா. தலைதெறித்து நடந்துகொள்ளாமல்….! கேட்டுக்கொண்டு இருக்க முடியாவிட்டால் போ” என சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராசபக்ச யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ் மக்களைப் பார்த்து பகிரங்கமாக திட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராசபக்ச டெலிபொம்டர் இயந்திரத்தைப் பார்த்து தமிழை உச்சரித்து வாசித்துக் கொண்டிருந்த போது, அவரது தமிழைப் புரிந்துகொள்ள முடியாத யாழ் மக்கள், கூச்சலிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராசபக்ச தமிழர்களைப் பார்த்து திட்டியுள்ளார்.

சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராசபக்ச சிங்களத்தில் திட்டியபோது அதனையும் புரிந்துகொள்ளாத தமிழ் மக்கள் தொடர்ந்தும் கூச்சலிட்டதால், மீண்டும் “நான் நிறுத்த மாட்டேன். நீங்கள் சத்தம் போடப் போட இன்னும் இன்னும் நான் தமிழில் பேசத்தான் போகிறேன்” என வீராப்பாக கூச்சலிட்டுள்ளார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் ஒலிவாங்கியை எடுத்து மக்களை அமைதிப்படுத்த முயற்சித்துள்ளார். மகிந்த இவ்வாறு தமிழ் மக்களை இன ரீதியாக திட்டிக் கொண்டிருந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனை அருகில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.