கட்டுரைகள் கட்டுரைகள் old

இலட்சியத்தை அடையும் பாதையில் தாயகமும் புலமும் சேர்ந்து பயணிப்போம்!

அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!

எமது நீண்ட தமிழ்த் தேசிய விடுதலைப் பயணம் இன்று மிக முக்கியமான கட்டத்தில் வந்து நிற்கின்றது. எமது தாயக நிலப்பரப்பு படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு கடந்த ஆண்டு இராணுவத்தால் முழுமையாக விழுங்கப்பட்டு நிற்கின்றது. சொல்ல முடியாத துயரங்களைச் சந்தித்த எமது மக்கள் அந்த வடுக்களும் பாதிப்புக்களும் தொடர்ந்துகொண்டுள்ள நிலையில் அடுத்தடுத்து தேர்தல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனினும் எமது அரசியல் உரிமைக்கான வேட்கையைத் தக்க வைக்கவும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் இப்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொள்வது அவசியமாகின்றது. இந்நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறப்போகும் தேர்தல் எமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் மக்களைக் குழப்பும் விதத்தில் ஏராளமான கட்சிகளும் நபர்களும் போட்டியிடுகிறார்கள்.

ஆளாளுக்கு வாக்குறுதிகளையும் கொள்கைகளையும் அள்ளி வீசுகிறார்கள். கொள்கை விளக்கத்தில் தெளிவற்ற சொல்லலங்காரங்களைக் கொண்டு மயக்கத்தை ஊட்டுகிறார்கள். இந்நிலையில்தான் எமது மக்களே நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். தேர்தல் பரப்புரைகளின் இறுதிக்கட்டத்தில் குட்டைகள் கொஞ்சமாவது தெளிந்துள்ளன. தமிழ்த் தேசியத்தில் பற்றுக்கொண்ட மக்கள் கூட்டத்திற்கு இரு தெரிவுகள் மட்டுமேயுள்ளன என்ற நிலைக்கு இன்று வந்துள்ளோம்.

ஒன்று வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு; மற்றது சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி. இவற்றுக்கிடையிலான கொள்கைகளில் வித்தியாசமில்லை என்பது போன்ற தோற்றப்பாட்டை ஒருசாரார் ஏற்படுத்தி வருகின்றபோதும், உண்மை அப்படியில்லை. அடிப்படையில் பாரிய வேறுபாடுள்ளது என்று எமது மக்கள் புரிந்திருப்பார்கள்.

அன்பான தாயகத்து மக்களே!

புலம்பெயர் தேசத்து மக்களாகிய நாம் இவ்வேளையில் உங்களுக்கு சில விளக்கங்களைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இந்த இரு தமிழ்த் தேசிய அணிகளுள் நாம் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு வரக் காரணங்கள் எவையென்பதையும் உங்களுக்கு விளக்கும் கடப்பாடு எமக்குண்டு.

எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் முக்கியமான கட்டத்தை எட்டியபோது அதன் தலைமை தனியே களத்தில் மட்டுமே செயற்படாமல் புலத்திலும் கடுமையாக உழைத்தது. புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து எமது போராட்டத் தலைமை உச்ச விளைவைப் பெற்றுக்கொண்டு போராட்டத்தை முழுவீச்சாக்கியது. தாயகத்தையும் புலத்தையும் சரியான முறையில் ஒருங்கிணைத்தே எமது போராட்டம் முன்னோக்கி நகர்ந்தது.

ஆக புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்பென்பது சரியான முறையில் உள்வாங்கப்பட வேண்டுமென்பதில் எமது போராட்டத் தலைமை உறுதியாக இருந்ததுடன் அதைச் செயற்படுத்தியும் வந்தது. இப்போதும் அதே நிலைமைதான் காணப்படுகிறது. எமது மக்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கு உலக அரங்கில் நீதி கேட்பது மட்டுமன்றி, குரல்வளை நெரிக்கப்பட்ட நிலையில், கருத்துச் சுதந்திரமின்றி நசுக்கப்படும் எமது தாயக மக்களின் குரலாக எமது இனத்தின் அரசியல் வேட்கையை உலகில் உரத்து ஒலிக்கும் பணியையும் புலம்பெயர் சமூகம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

தாயக மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு விடயங்களில் உதவுவதற்கான பொருளாதார வளத்தையும் இச்சமூகம் கொண்டுள்ளது. தாயக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் அவர்களின் அரசியற் போராட்டத்துக்கு உறுதுணையாகவும் பயணிக்க புலம்பெயர் சமூகம் எப்போதும் தயாராகவே உள்ளது.

இந்த அடிப்படையிலேயே, நாங்கள் அரசியற் செயற்பாடுகளில் பங்கெடுக்க விரும்பினோம். அவ்வகையில், புலம்பெயர் தேசத்துக்கு வருகைதரும் தமிழ் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்களைச் செய்தோம். ஆனால் ஒருகட்டத்தில் புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்புக்களும் ஈடுபாடுகளும் புறக்கணிக்கப்படத் தொடங்கின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் நாம் தனித்தனியாகத் தொடர்புகளைப் பேணியபோதும் அக்கூட்டமைப்பின் தலைமை எம்மோடு சரியான வகையில் தொடர்புகளைப் பேண முன்வரவில்லை.

அதுமட்டுமன்றி அவர்களைச் சந்தித்து உரையாடும் எமது அவாவும் புறக்கணிக்கப்பட்டது. குறிப்பாக, திரு சம்பந்தன் அவர்கள் பிரித்தானியா வந்திருந்தபோது அவரைச் சந்திக்க எமது மக்கள் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் எடுத்த முயற்சி உதாசீனப்படுத்தப்பட்டது. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தோடு தோளோடு தோள் நின்றவர்களைச் சந்தியாது வேறு நபர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிச் சென்றார்கள்.

புலம்பெயர் அமைப்புக்களுடன் கலந்துரையாடுவதை கூட்டமைப்பின் தலைமையாக இனங்காணப்பட்டவர்கள் தவிர்க்கத் தொடங்கினார்கள். அத்தோடு எமது விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து இவர்கள் வழுவிப்போய் தீர்வுத்திட்டம் தயாரிப்பது குறித்த செய்திகள் கிடைத்தபோது அவைதொடர்பில் கலந்துரையாடி எமது தரப்பு நியாயங்களைச் சொல்ல முற்பட்டபோதும் எமது கருத்துக்களை உள்வாங்கும் நிலை இருக்கவில்லை.

புலம்பெயர் தேசத்தில் எமது கொள்கைகளை மிகமிக இறுக்கமாகவும் தெளிவாகவும் வலியுறுத்தி அதைநோக்கிய போராட்டத்தை நாம் முன்னெடுக்கும்போது தாயகத்தில் எமது அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிட்டு அரைகுறையான இறுதித் தீர்வை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நகர்வது எமக்குப் பெருத்த ஏமாற்றத்தையளித்தது.

எமது போராட்டங்கள் அனைத்தும் பெறுமதியற்றதாகப் போவதுடன், எம்மால் தொடர்ந்தும் புலத்திலே உறுதியான போராட்டங்களைச் செய்ய முடியாத நிலைமை தோன்றும் அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில் எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குமிடையில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

இந்நிலையில்தான் அடிப்படைக் கொள்கைளில் இருந்து கூட்டமைப்புத் தலைமை வழுவியதால் அதிலிருந்து வெளியேறி புதிய அரசியல் முன்னணியை திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தொடக்கினார். தமிழரின் ஒன்றுபட்ட அரசியற்சக்தி சிதறுவதைப் பொறுக்க முடியவில்லையாயினும், சரியான, உறுதியான புதிய முன்னணி உருவாவது எமக்கு ஆறுதலளித்தது.

தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி உருவாகி, அவர்களின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து அவர்கள் வெளிப்படையாக அறிவித்தபோது அவர்களின் பாதையே சரியானதென்றும், தாயகத்தில் அந்தச் சக்தியின் உறுதுணையோடே நாம் எமது அரசியற் போராட்டத்தை முன்னெடுக்க முடியுமென்றும் நாம் தீர்மானித்தோம். வேறு சிலர் சொல்வது போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலம்பெயர்ந்த மக்களே உடைத்தார்கள் என்ற குற்றச்சாட்டு எந்த அடிப்படையுமற்றது என்பதுடன், கூட்டமைப்பை உடைத்த பழி அதன் தலைமையையே சாருமென்பதுதான் உண்மை.

அன்பான மக்களே!

இன்று தாயகத்தில் நிலவும் அடக்குமுறைகளுக்குள் நின்று நீங்கள் தேர்தலை எதிர்கொள்கின்றீர்கள். அதுபோலவே தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் பலவித இடர்களையும் அடக்குமுறைகளையும் சந்தித்துப் போட்டியிடுகின்றது. இவற்றுள் மிக முக்கியமானது ஊடக அடக்குமுறை. தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியுடன் தொடர்புடைய செய்திகள், அவர்களின் கருத்துக்கள் என்பன குறிப்பிட்ட பத்திரிகைகளில் முற்றாக இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.

அத்தோடு இவர்களுக்கெதிரான கடும் விமர்சனங்களும், கருத்துக்களும் ஊடக தர்மத்தையும் மீறி வைக்கப்படுகின்றன. அவற்றுக்கான எதிர்வினைகளை ஆற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. விளம்பரங்கள் மூலம் மட்டுமே தமது கருத்துக்களைச் சொல்வதற்கு அவ்வூடகங்கள் வழிசெய்கின்றன. இதனால் எமது மக்களுக்கு தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி பற்றிய போதிய தெளிவுகள் கிடைக்க முடியாமற் போகின்றது.

இதைவிட இன்னோர் அயோக்கியத்தனமும் நடைபெறுகின்றது. ஊர்பேர் தெரியாத, இதுவரை தோற்றம்பெறாத அமைப்புக்களின் பெயர்களைக் கொண்டு தமக்கு ஆதரவான அறிக்கைகளை தாமே எழுதிப் பிரசுரிக்கின்றார்கள். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது புலம்பெயர் மக்களாகிய நாமேதான். புலம்பெயர்ந்த மக்கள் தம்மை ஆதரிப்பது போன்ற மாயையை உருவாக்க இப்படியான அரூப அமைப்புக்களைக் கற்பனையில் உருவாக்கி தாயகத்திலும், புலத்தில் சில வலைத்தளங்களிலும் அறிக்கைகளை எழுதிக் கொண்டுள்ளார்கள்.

அவையனைத்தும் பொய்யென்பதைத் தெரிவிக்கும் கடமை எமக்குண்டு. எனவே புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியையே ஆதரிக்கிறோம் என்பதுடன், எமது கொள்கைகளிலிருந்து வழுவாமல் செயற்படும் அவாவோடு, வேறு வழியின்றி தவறான தலைமைத்துவத்தின் கீழ் இப்போதும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் அரவணைத்து எமக்கான விடிவை நோக்கிய பயணத்தைத் தொடர நாம் ஆவலாயுள்ளோம் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை ஆதரித்துச் செயற்படும் அமைப்புக்களாவன:

 • டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
 • டென்மார்க் தமிழர் பேரவை
 • பிரித்தானியா பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்
 • பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பு
 • ஐக்கிய தமிழர் செயற்பாட்டுக்குழு – பிரித்தானியா
 • கனடா தமிழ்ப் பட்டதாரிகள் சங்கம்
 • கனடா மக்கள் கட்டமைப்புக்கள்
 • அவுஸ்திரேலியா மக்கள் கட்டமைப்புக்கள்
 • பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு
 • பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு
 • தமிழர் ஒன்றியம் – இத்தாலி
 • சுவீடன் தமிழ்ப் பெண்கள் அமைப்பு
 • யேர்மனி மகளிர் அமைப்பு
 • நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு
 • சுவிஸ் தமிழர் பேரவை
 • பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு

மேற்குறிப்பிடப்பட்ட மக்கள் கட்டமைப்புக்கள் யாவும் பலமான அரசியற் செயற்பாட்டைக் கொண்டவை. குறிப்பாக நோர்வே மக்களவையும் டென்மார்க் தமிழர் பேரவையும், அந்தந்த நாடு முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் ஜனநாயக வழியில் வாக்கெடுப்பு நடத்தித் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவரைக் கொண்ட தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய அரசியற் கட்டமைப்புக்களாகும்.

ஆகவே தமிழர்களே!

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாம் கடந்த காலத்தைப்போன்று தொடர்ந்தும் எமது தாயக உறவுகளுடன் ஒன்றிணைந்து பயணித்து எமது அரசியல் வேட்கையை அடையப் போராடத் தயாராகவுள்ளோம். நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம் வந்துள்ளோம்.

இதன்மூலம் சீரிய ஒரு தலைமையைக் கொண்ட பலமான அரசியற்கட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் எமது விடுதலைப் பயணத்தைத் தொடரவேண்டுமென விரும்புகிறோம். யாழ்ப்பாணம், திருமலை தேர்தல் மாவட்டங்களில் வாக்களிக்கும் உரிமையுள்ள எமது தாயக மக்கள், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை ஆதரித்து அவர்களுக்கு வெற்றியீட்டிக் கொடுக்க வேண்டுமென அன்புடனும் உரிமையுடனும் வேண்டிக் கொள்கிறோம்.

யாழ் மற்றும் திருமலை தவிர்ந்த மற்றைய தமிழர் பிரதேசங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பலர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாக நாம் அறிகின்றோம் ஆதலால் குறிப்பாக அம்பாறை, வன்னி மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களில் வாக்களிக்கும் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை நாம் வரவேற்கின்றோம்.

நன்றி!

“தமிழரின் தாகத்தைத் தரணிக்குக் கூறிடுவோம்”

புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் கட்டமைப்புக்கள்