கட்டுரைகள்

தமிழர் தாயகத்தில் இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்பது எதனை?

இலங்கையின் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து வெற்றி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழர் தாயகத்தைப் பொறுத்தளவில் தேர்தலில் இம்முறை தேர்தலில் மக்கள் அதிகம் நாட்டம் காட்டாது தவிர்த்துள்ளமை பல்வேறு விடயங்களை உணர்த்தி நிற்பதாகவே பார்க்கப்படுகின்றது.

தமிழர் தாயகததில் 5 பிரிவுகளில் தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல (அம்பாறை), வன்னி (மன்னார், வவுனியா, முல்லைத்தீவு), யாழ்ப்பாணம் (கிளிநொச்சி உட்பட) ஆகிய 5 பிரிவுகளில் தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம்.

திருகோணமலை

தென் தமிழீழத்தைப் பொறுத்தளதில் திருகோணமலை மாவட்ட முடிவுகள் இதுவரை முழுமையாக வெளியாகாது விட்டாலும் 69,047 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக்கொண்ட சேருவில தொகுதியில் 38,067 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 85,401 பேரைக்கொண்ட மூதூர் தொகுதியில் 52,927 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். திருகோணமலை நகரப்பகுதி முடிவுகள் இதுவரை வெளியிடப்படாது வைக்கப்பட்டுள்ள போதிலும், அங்கும் மிகவும் குறைந்தளவு வாக்களர்கள் வாக்குப் பதிவில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு

மூன்று இலட்சத்து 33 ஆயிரத்து 644 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கித்த மக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 367 மட்டுமே. இதில் 14 ஆயிரத்து 749 வாக்குகள் செல்லுபடியற்றதாகிவிட்டது. ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 612 வாக்குகளே செல்லுபடியானவை.

அம்பாறை

முஸ்லீம், சிங்கள மக்களைப் பெரும்பான்மையாக மாற்றப்பட்டுள்ள திகாமடுல்ல என அழைக்கப்படும் அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியிருந்த 4 இலட்சத்து 20 ஆயிரத்து 835 வாக்காளர்களில் 2 இலட்சத்து 72 ஆயிரத்து 462 பேர் வாக்களித்து, அதில் 15ஆயிரத்து 516 வாக்குகள் செல்லுபடியற்றதாக, 2 இலட்சத்து 56 ஆயிரத்து 946 வாக்குகள் செல்லுபடியானவையாகக் கணிக்கப்பட்டுள்ளன.

வன்னி

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தளவில், தகுதி பெற்றிருந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 975 வாக்காளர்களில் வாக்களித்தவர்கள் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 185 பேர் மட்டுமே. இவர்களில் 10 ஆயிரத்து 208 பேரின் வாக்குகள் செல்லுபடியற்றதாகிப்போக ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 977 வாக்குகளே செல்லுபடியானவையாகக் கணிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்

அடுத்து நாம் யாழ்ப்பாண (கிளிநொச்சி) தேர்தல பிரிவை எடுத்து நோக்கினால், அங்கே 7 இலட்சத்து 21 ஆயிரத்து 359 வாக்காளர்கள் இருக்கின்ற போதிலும், வாக்களித்த மக்களின் எண்ணிக்கை வெறும் 18.6 வீதம் மட்டுமே. அதாவது ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 277 பேர் வாக்களித்திருந்த நிலையில், 19 ஆயிரத்து 774 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு, ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 503 வாக்குகளே செல்லுபடியானவையாகக் கணிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றைக்கொண்டு நோக்கும்போது யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் வாக்களிக்கத் தகுதியிருந்தும் 5 இலட்சத்து 53 ஆயிரத்து 82 பேர் இம்முறை வாக்களிப்பை நிராகரித்துள்ளனர். தமிழர் தாயகத்தின் ஏனைய தேர்தல் மாவட்டங்களிலும் தகுதி பெற்றோரில் அரைவாசிக்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளனர்.

தமிழர் தாயகத்தைப் பொறுத்தளவில் மேலதிக (போனஸ்) ஆசனத்தைத் தவிர்த்துப் பார்த்தால், யாழ்ப்பாணம் – 5, வன்னி – 3, மட்டக்களப்பு – 3, அம்பாறை – 1, திருகோணமலையிலும் ஒரு ஆசனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மொத்தம் 13 ஆசனங்களை மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இம்முறை பெற முடிந்தது.

2004ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 20 ஆசனங்களையும், இரண்டு மேலதிக (போனஸ்) ஆசனங்களையும் பெற்ற தமக்கு இம்முறை ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் காரணம் “பொறுப்பற்ற முறையில் சில கட்சிகள் தேர்தலுக்கு முன்னர் செயற்பட்டதும், சுயேட்சைக் குழுக்களை அரசு அதிகளவில் போட்டியிட வைத்ததுமே” என இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

பொறுப்பற்ற முறையில் செயற்பட்டது என அவர் கூறியது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரசையும், அதன் சின்னத்தில் போட்டியிட்ட “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியையுமே”. இந்த குழப்ப நிலை ஏற்பட்டிருக்காது விட்டிருந்தால், தாம் கடந்த முறை போன்று அதிக ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கலாம் எனவும் சம்பந்தன் கூறியிருக்கின்றார்.

உண்மையில் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் என சம்பந்தன் “தமிழ்த் தேசிய நலன் சார்ந்து” எண்ணியிருந்தால், கஜேந்திரன், பத்மினி போன்றவர்களை வெளியேற்றாது விட்டிருக்க வேண்டும்.கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், சிறீகாந்தா போன்றவர்களை வெளியேறாது தடுத்திருக்க வேண்டும். ஏன் அரசுடன் இணைந்து செயற்பட முனைந்த கிசோர், கனகரத்தினம், தங்கேஸ்வரி போன்றவர்களுடன்கூட பேச்சு நடத்தியிருக்கலாம். அது எதுவும் நடைபெறவில்லை.

கஜேந்திரகுமார் தலைமையிலான “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி”, “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமைகொண்ட தேசம்” என்ற கோட்பாடுகளைத் தெளிவாக முன்வைத்து தேர்தலில் குதித்த போதிலும், அவர்களுக்கான கொள்கைவிளக்க காலம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இலகுவாக மக்களைச் சென்றடையும் ஊடக பலம் தாயகத்தைப் பொறுத்தளவில் இவர்கள் பக்கம் இருக்கவில்லை, மாறாக உதயன், சுடரொளி பத்திரிகைகளின் உரிமையாளர் சரவணபவனை, த.தே.கூட்டமைப்பு தந்திரமாக உள்வாங்கியதால், அந்தப் பத்திரிகைகளை ஒருபக்க செய்திகளை மட்டும் வெளியிடும், எதிர்காலத்தில் அதன் செயற்பாடு பற்றி மக்கள் அச்சம் கொள்ளும், அந்தப் பத்திரிகைகள் மீதான நம்பகத்தை இழக்கச் செய்யும் ஊடக அதர்ம செயற்பாட்டில் ஈடுபட்டன. கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தேசியநலன் சார்ந்து தன்னுடைய கருத்துக்களை வெளியிடுவதாகத் தெரிவித்து, கருத்துரைத்த வித்தியாதரன் “பதவி விலகப் போகின்றேன்” என ஒரு கட்டுக்கதையை கட்டவிழ்த்து விட்ட போதிலும், இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியராக தொடர்ந்தும் பணியாற்றுவதை தமிழ் மக்கள் இங்கு உற்றுநோக்க வேண்டும்.

ஊடக பலமற்ற “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” ஒவ்வாரு கிராமமாக, அல்லது வீடு வீடாக முழுமையாகச் சென்று தமது பரப்புரையை மேற்கொள்ள முடியவில்லை. அதைவிட முக்கியமான விடயம் என்னவெனில் கடந்த தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என, தமிழ் மக்களின் தலைமை கேட்டதற்கிணங்க வாக்களித்த மக்கள் மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் தற்கால நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்களை முழுமையாகக் கொண்டு செல்லப்படவில்லை.

“தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” இம்முறை தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூடப் பெறவில்லை என்றாலும், தேசியக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதிலும், கடைப்பிடிக்க வைப்பதிலும் அது முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளதை நாம் அவதானிக்கலாம். அதாவது தாம் தமிழர்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்னிறுத்தி தேர்தலில் நின்றதுடன், சமஸ்டி என வழி தவறிப்போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், நாமும் “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்ற கோட்பாடுகளை (கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இது இல்லை) முன்வைத்தே தேர்தலில் நிற்கின்றோம் என மக்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவிக்க வைப்பதற்கான அழுத்தத்தையும், பயத்தையும் போதியவு இந்தக் கட்சி கொடுத்தது.

ஆக மொத்தத்தில் மக்கள் இதனைத்தான் விரும்புவார்கள் என்று தெரிந்தும், இந்தியாவின் திட்டத்திற்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் சமஸ்டி என்ற சொல்லாடலை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைத்திருந்தமை இதனூடாக அம்பலமாகின்றது.

கடந்த தேர்தலில் 8 ஆசனங்களைப் பெற்ற யாழ் மாவட்டத்தில் இம்முறை 5 ஆசனங்களை மட்டுமே பெற முடிந்தது. வன்னி, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களிலும் கடந்த முறை முறைய 5 மற்றும் 4 ஆசனங்களைப் பெற்ற போதிலும், இம்முறை தலா 3 ஆசனங்களையே பெற முடிந்தது.

இதில் முக்கிய விடயம் என்னவெனில், யாழ்ப்பாணத்தில் 7 இலட்சத்து 21 ஆயிரத்து 359 வாக்காளர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 119 ஆகும். இதில் 20 ஆயிரம் வரையிலான அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள மாவை சோனாதிராஜாவைவிட, துணைப்படைக் குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா 28 ஆயிரம் வரையிலான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளதை உற்று நோக்கலாம்.

கடந்த அதிபர் தேர்தலில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொலைகாரனுக்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மக்களை வற்புறுத்தியதும், இம்முறை தேர்தலில் இடமபெயர்ந்த மக்களிற்கு எந்தவொரு உதவியையும் கடந்த காலங்களில் செய்யாத சுரேஸ் பிரேமச்சந்திரன், இரா.சம்பந்தன் போன்றோர் பல கோடிகளைக் கொட்டி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டமை போன்ற செயற்பாடுகள், மக்கள் மனங்களில் வடுக்களை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதிலிருந்து தமிழ்த் தேசியக் கொள்கையுடன் இருக்கும் பெரும்பான்மையான மக்கள் வடக்கு கிழக்கில் இம்முறை தேர்தலில் வாக்களிக்க முன்வரவில்லை என்பதையும், கட்சி சார்ந்தோரே வாக்களிப்பில் ஈடுபட்டதையும் அவதானின் முடிகின்றது.

இதனூடாக தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கும், உலகிற்கும் பல செய்திகளைச் சொல்ல முன்வந்துள்ளனர். அவற்றை ஆழமாக உணர்ந்து தற்கால தமிழர் அரசியல் தலைமைகள் செயற்படத் தவறினால், அடுத்த தேர்தலில் அவர்கள் அதன் விளைவை அறுவடை செய்ய நேரலாம்.

“தாயகம், தேசியம், தன்னாட்சி” உரிமை என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்னெடுக்கப் போவதாக அவித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட “இராஜதந்திர நகர்வு” என்ன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நன்றி: சங்கதி இணையம்