செய்திகள்

அவுசுத்திரேலிய வாழ் தமிழீழ மக்களுக்கு டென்மார்க் வாழ் தமிழீழ மக்களின் வாழ்த்து செய்தி

தமிழீழ தனியரசையை வலியுறுத்தி இன்றும் நாளையும் அவுசுத்திரேலிய வாழ் தமிழீழ மக்களால் நடாத்தப்படும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மீள் வாக்கெடுப்பிற்கு டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் சார்பாக டென்மார்க் தமிழர் பேரவை வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. செய்தியின் முழுவடிவம் வருமாறு.:

அவுசுத்திரேலிய வாழ் தமிழீழ மக்களுக்கு டென்மார்க் வாழ் தமிழீழ மக்களின் வாழ்த்துக்கள்.

கடந்த வருடம் மே மாதம் 10ம் நாள் நோர்வே வாழ் தமிழீழ மக்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குடிநாயக முறையிலான எமது அரசியல் அபிலாசையின் வலியுறுத்தலை புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது உறவுகள் தொடர்சியாக நடைமுறைப்படுத்திவருகின்றனர். இதன் அடிப்படையில் டென்மார்க்கில் வாழும் தமிழீழமக்களும் கடந்த பெப்ரவரி மாதம் 28ம் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெருவாரியாக கலந்து கொண்டு தமது அரசியல் அபிலாசையான தமிழீழ தனியரசு மீள் நிறுவுதலை ஆதரித்து 98,2 வீத மக்கள் வாக்களித்தனர்.

மீள் வாக்கெடுப்பு நடைபெற்ற அனைத்து நாடுகளிலும் பெருவாரியான தமிழீழ மக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளதை அவுசுத்திரேலிய வாழ் தமிழீழ மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது உங்களுக்கு மற்றய நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பை விட மிக முக்கிய கடமையொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வாழும் அவுசுத்திரேலிய நாட்டின் அரசாங்கம் அண்மையை நாட்களில் தமிழ் மக்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் வருந்தத்தக்கதாகவே உள்ளது. டென்மார்க அரசு கூட தமது கவலையை வெளியிட்டதாக நீங்கள் வாழும் நாட்டின் சில ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

கடந்த 8ம் நாள் சிறிலங்கா அரசால் திணிக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமது இயலாமையின் காரணமாக வெளியிட்ட கருத்தினால் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ மக்கள் வெளிப்படுத்திய அரசியல் அபிலாசையை மழுங்கடித்து,
தமிழீழ மக்கள் தமது தனியரசை மீள் நிறுவுவதற்கான கோரிக்கையை கைவிட்டுள்ளார்கள் என்று சாவதேச ஊடகங்கள் கொக்கரித்துக்கொண்டிருக்கையில் நீங்கள் இந்த வாக்கெடுப்பை நாடாத்துகின்றீர்கள்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட கருத்து பிழையானது என திறந்தவெளிச்சிறைகளில் வாழும் சந்தர்பத்திலும் எமது தாயக உறவுகள் தமது அரசியல் அபிலாசையை சிறிலங்கா அரசு திணித்த பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவுசுத்திரேலியா வாழ் எம் தமிழீழ உறவுகளே!

சர்வதேச ஊடகங்களோ அரசுகளோ வெளியிடும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் தமிழீழ மக்கள் 1977ம் ஆண்டு வழங்கிய ஆணையை எவரும் மறுதலிக்க முடியாது எனவும் வலியுறுத்தவேண்டிய கடமை உங்கள் முன் இப்பொழுது இருக்கின்றது.

வாக்கெடுப்பில் அனைத்து அவுசுத்திரேலியா வாழ் தமிழீழ மக்களும் கலந்துகொள்ள வேண்டுவதுடன் வாக்கெடுப்பு வெற்றிபெற டென்மார்க் வாழ் தமிழீழமக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.

விழ விழ எழுவோம்! விழ விழ எழுவோம்! ஒன்று விழ! ஒன்று விழ! ஒன்பதாய் எழுவோம்!

“தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்”

த.பஞ்சராசா (தலைவர்)
டென்மார்க் தமிழர் பேரவை

Press Release-Australian Tamil Referendum 2010 – Denmark Tamil Forum