செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் வைகோ கண்ணீர்

தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாளை சென்னை விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பிய அனுப்பியதை தடுக்க முடியாமல் தவித்த மதிமுக பொதுச் செயலாளர் கண்ணீர் விட்டு அழுதார்.

மலேசியாவில் வசித்து வரும் 72 வயதான பார்வதி அம்மாள் பக்கவாத நேயால் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற நேற்றிரவு தனது உதவியாளர் விஜயலட்சுமியுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தார்.ஆனால் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அவருக்கு அனுமதி மறுத்தனர்.

சென்னையில் நீங்கள் தரை இறங்குவதற்கு அனுமதியில்லை என்று கூறி விமானத்தை விட்டு கீழே இறங்குவதற்கு கூட பார்வதி அம்மாளை அனுமதிக்கவில்லை. இதைக் கண்டு அவரை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர்.

பார்வையாளர்கள் பகுதியை தாண்டி உள்ளே செல்ல வைகோ முயன்றார். அவரை துணை கமிஷனர் வரதராஜூலு மற்றும் போலீசார் தடுத்துவிட்டனர். இதனால் வைகோ போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் வந்த விமானத்திலேயே மலேசியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

இரவு 11.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 15 நிமிடம் தாமதமாக 12 மணிக்கு பார்வதி அம்மாளுடன் புறப்பட்டு சென்றது.ஆனாலும் அதிர்ச்சி நீங்காதவராக வைகோ விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்லாமல் நள்ளிரவு 1.45 மணி வரையிலும் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருந்தார்.