செய்திகள்

யேர்மனி பேர்லினில் மாபெரும் பேரணி

20.04.2010அன்று பேர்லின் மாநகரில் எம் இன மக்களுக்காக புலம்பெயர்வாழ் தமிழ்மக்களால் பேரணி முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட எம் ஆயிரமாயிரம் மக்களையும் அவர்களை காப்பதற்காய் தம் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் இறுதி கணங்களையும் தீயாய் நெஞ்சங்களில் சுமந்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இவ் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

நமது மக்கள் தத்தம் வாழ்விடங்களில் வாழக்கூடிய இயல்பான நிலமை உடனடியாகத் தோற்றுவிக்கப்படவேண்டும்!

தடுப்புமுகாம்களில் எந்தவொரு விசாரணையுமின்றி தடுத்து-வைக்கப்பட்டுள்ளவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான மேற்பார்வைக்குள் கொண்டுவரப்பட்டு, தத்தம் குடும்பங்களுடன் வாழ அனுமதிக்கப்படவேண்டும்!

சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ்மக்கள்மீது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் ஐ.நா. பொதுமன்றில் விசாரிக்கப்படவேண்டும்!

இலங்கைத்தீவிலே தமிழ்மக்களின் இன உரிமைகள் மதிக்கப்பட்டு, கௌரவமான வாழ்க்கையினை வாழ்வதற்கு ஏதுவாக தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு அமைவான தீர்வு எட்டப்படவேண்டும்!

ஆயிரமாயிரம் அப்பாவி தமிழ்மக்களை படுகொலைசெய்த யேர்மன் இலங்கைக்கான துணைத்தூதுவராக பணிபுரியும் ஜெகத் டியாஸை உடனடியாக யேர்மன் நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும் என்றும் மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப்பெரணியின் முடிவில் யேர்மன் பாராளுமன்ற மனித உரிமைகளின் ஆணைக்குழுவின் பிரதிநிதி Jürgen Klimke கலந்துக்கொண்டு தனது கருத்தை தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில் யேர்மன் அரசாங்கத்தினூடாக தாங்கள் இலங்கைக்கான அபிவிருத்தி நிதி உதவியை கடந்த ஆண்டிலிருந்து நிறுத்திவைத்திருப்பதாகவும் அத்தோடு இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படல் வேண்டும் என்றும் தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டும் என்றும் அடுத்து இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொய்யான பரப்புரை நிறுத்தப்படவேண்டும் என்றும் அத்தோடு அனைத்துலக ஊடகங்கள் தமிழ்மக்களின் நிலைமைகளை நேர்மையாகவும் நீதியாகவும் அனைத்துலக நாடுகளுக்கு அறிவிக்கவேண்டும் என்றும் தான் விரும்புவதாக அறிவித்தார்.

இறுதியாக தாம் தொடர்ந்தும் தம் நாட்டு இலங்கை சுற்றுலா பயணிகளுககு எச்சரிக்கையை தெரிவிப்பதாகவும் அடுத்து ஜெகத் டியாஸின் ஏனைய நிருபிக்கக்கூடிய தகவல்கலை பெற்று அவருக்கான விசாரனைகளை முன்னெடுப்பார்கள் என்றும் தொடர்ந்து ஈழத்து மக்களுக்காக தொடர்ச்சியாக பாடுபடுவார் என்றும் தெரிவித்தார்.