வணங்கா மண்ணும் வாய்ப்பனும்: இது கதையல்ல …

Home » homepage » வணங்கா மண்ணும் வாய்ப்பனும்: இது கதையல்ல …

அம்மா பசிக்குது…

அந்த பிஞ்சு குழந்தையின் பசிக்கான அழுகை சாரதாவின் நெஞ்சை பிழிந்தது. இரண்டு நாளாக தானும் சாப்பிடாமல் பிள்ளைக்கு மட்டும் ஒரு நேரம் கஞ்சி கொடுத்த அந்த திருப்தியும் காணாமல் போய் இருந்தது. அவளிடம் ஒன்றும் இல்லை. சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தை கூட வித்து சாப்பிட்டாச்சு . இனி என்னதான் செய்வாள் அந்த குழந்தை அருணனின் அழுகையை நிறுத்த…?

சர்வதேச அரசியலையும், மகிந்தவின் இனவாத போரையும், போராளிகளின் மனஉறுதி தளாராத வீரத்தையும் சொல்லி அருணனுக்கு புரியவைக்க முடியாது. காலையில் இருந்து இது எட்டாவது தடவை அவன் பசிக்காக அழுவது. அவன் அழும்போது இவளும்தான் அழுவாள் மனசுக்குள்ளே. பசிக்காக அழும் தனயனின் குரலை கேட்கவா ஆண்டவா, இன்னும் என் உயிரை எடுக்காமல் வைத்திருகிறாய் என்று தன் இயலாமையை நினைத்து, அவள் அழும் அழுகை ஆண்டவனுக்கோ அல்லது அருணனுக்கோ கேட்டிருக்க வாய்ப்பில்லை.

இந்த ஈழப்போர் தொடங்கியதுக்கு இது அவளுக்கு பதினேழாவது இடப்பெயர்வு.. இல்லை இல்லை ..சரியாக கணக்கு வைக்கவும் முடியவில்லை. ஆரம்பத்தில் மாதங்களுக்கு ஒருக்கா இடம்பெயந்து இப்போ மணித்தியாலத்துக்கு ஒருக்கா இடம்பெயர்ந்தால் சாரதாவால் என்ன , யாராலும் தான் கணக்கு வைத்திருக்க முடியாது. எல்லா கோபமும் விஜயன் மேல்தான் அவளுக்கு. தன்னை இந்த நிலையில் விட்டுவிட்டு தான் மட்டும் தனியாக போய்விட்டாரே என்று எண்ணி மனசுக்குள்ளே வைதாள்.அவள் வலைஞர்மடத்தில் இருந்தபோது.. பின்தளபணிக்காக போனவர் தான் பிணமாகதான் வீடு வந்தார்.

அன்று பெரும்பாலான ஆண்களுக்கு இருந்த ஒரே வேலை பின்தளபணிதான். …இரணைப்பாலையில் எதிரியின் எல்லை கோட்டுக்கு ஐநூறு மீற்றருக்கு பின்னால் விடுதலைப்புலிகளுக்கு பதுங்கு குழி அமைப்பதற்காக மரம் தறித்தல், முகாம்களுக்கு பதுங்குகுழி அமைத்தல் என்று வேலைக்கு போனால் தேங்காய், அரிசி, சீனி என்று புலிகள் ஏதாவது கொடுப்பார்கள். அதை வைத்துதான் அன்றைய நாளை கழிக்க வேண்டும். காலையில் வெறும் பச்சைதண்ணியை குடித்துவிட்டு கடுமையான வேலைக்கு செல்லும் விஜயனை பார்க்கும் போது சாரதாவுக்கு மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் வேறு வழியில்லை. அவர்கள் அக்கராயனில் இருந்த போது விஜயனின் தையல் கடையில் இருந்து வந்த பணம் மூன்று வேளைக்கு சாப்பிட்டு, ஒரு வீடும் கட்ட போதுமாகதான் இருந்தது. ஒரு முதலாளி மாதிரி இருந்த விஜயனை இப்படி பார்க்கும் போது, சாரதா விதியை நோவதை தவிர வேறு என்னதான் செய்துவிட முடியும்.

அன்றும் அப்படிதான் பசியால் தூங்கி கொண்டிருந்த சாரதாவை எழுப்ப மனமில்லாமல் விஜயன் போனவன்தான். தறித்த தென்னையின் குருத்தை சாப்பிட்டு பசியாற ஓடியவனை எங்கிருந்தோ வந்த எறிகணை ஒன்று பலி எடுத்தது. அன்றைக்கு இருண்ட சாரதாவின் வாழ்க்கை இன்று அவனையே நோகும் அளவுக்கு கொண்டுவந்து விட்டது.. இந்த யுத்தம்.

அம்மா பசிக்குது…மீண்டும் நினைவுலகத்துக்கு இழுத்தது அந்த குரல்..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொய் சொல்லி சமாளிச்ச சாரதாவுக்கு இன்று பொய்க்கும் பஞ்சமாகிவிட்டது. காலையில் புலிகளின் குரலில் போன செய்தியை மீட்ட அவள், தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு மீண்டும் ஒரு பொய்க்கு தயாரானாள்.

“செல்லம் கிட்ட வா எணை…” வாஞ்சையுடன் அழைத்தாள் தன்மகனை..அம்மா எதோ தர போகிறா என்ற சந்தோசத்தில் ஓடி வந்தான் அருணன்.

“என்னம்மா ”

“எண்ட அருணன் குட்டி இண்டைக்கு மட்டும் பொறுத்துக்குவானாம் ..அம்மா நாளைக்கு பிள்ளைக்கு விருப்பமான வாய்ப்பன் தருவாவாம்”

“எப்படி அம்மா வாய்ப்பன் கிடைக்கும்”

“வெளிநாட்டிலே இருக்கிற மாமாக்கள், அண்ணாக்கள், அக்காக்கள் எல்லாரும் இங்கே இருக்கிற உங்களை மாதிரி பிள்ளைகளுக்கு நல்ல பலகாரங்கள் சாப்பாடுகள் எல்லாம் செய்து வணங்கா மண் எண்டு ஒரு கப்பல்ல அனுப்பி இருகினமாம். நாளைக்கு வருமாம்”

“அம்மா நாளைக்கு கட்டாயம் வரும் தானே”

அந்த கேள்வியில் அவனது நம்பிக்கையை உணர்ந்த சாரதா “கட்டாயம் வரும் செல்லம்.. அதிலே உங்களுக்கு பிடிச்ச வாய்ப்பனும் வரும்”

அருணனுக்கு வாய்ப்பன் என்றால் உயிர். அவனது பாட்டியிடம் ஒவ்வொரு வாரமமும் சுட சொல்லி சுட சுட வாங்கி சாப்பிடும் அழகே ஒரு தனி அழகு தான். அதை வைத்த கண் விலகாமல் சாரதா பார்த்து ரசிப்பாள். அண்டைக்கு ரசித்தது இண்டைக்குதான் சாரதாவுக்கு உதவியது.

காலையில் நேரத்துடன் எழும்பிய சாரதா ..ஆண்கள் வருவதற்கு முதலே கடற்கரைக்கு சென்று காலை கடன்களை முடித்துவிட்டு திரும்பினாள். பெண்களாக பிறந்தால் நிறைய விடயங்களை இருட்டிலேயே செய்ய வேண்டிய கட்டாய சூழல் அது.திரும்பி வந்தவள் அருணனின் படுக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

அருணனை காணவில்லை…

பக்கத்து தரப்பால் கொட்டில் எல்லாம் தேடி களைச்சு போனாள். கொடும் வெறி இராணுவத்தின் எறிகணைகள் வேறு ஆங்காங்கே வெடித்து சிதறிய வண்ணம் இருந்தது. பெத்த மனம் பேதலிச்சு அலைந்தாள்..

“அம்மா …”

குரல் தேனாக ஒலித்தது.. ” அம்மா வணங்கா மண் வந்திட்டுது அம்மா வா அம்மா ஓடி போய் வாய்ப்பன் வாங்குவம்” . தாய்க்கு புரிந்தது. தன்னுடைய நேற்றைய பொய்க்காக, அருணன் கடற்கரை போய் நின்று, நோயாளரை ஏற்றி செல்ல வந்த செஞ்சிலுவை கப்பலை பார்த்துவிட்டுதான் வணங்கா மண் என்று சொல்லுகிறான் என்று. மகனுக்கு புரிய வைத்தாள்

” தம்பி அது இதை விட பெரிய்ய்ய்ய கப்பல் ..இங்கை இருக்குற எல்லாருக்குமே சாப்பாடு கொண்டு வாற கப்பல் இப்படி சின்னன் இல்லை “..

புரிந்தது போல தலையை ஆடினான் அந்த பாலகன்.

இரண்டு நாட்கள் கடலுடன் கழிந்தது அருணனுக்கு …அந்த பெரிய்ய்ய்யய கப்பல் …அதில் வரும் தனது ஆசை வாய்ப்பன் … கனவுகளுடன் கழிந்தது. பசிக்கும் போதும், கண்ணை இருட்டும் போதும் , கண்களை கசக்கி கசக்கி கடலையே விடாமல் பார்த்தான் அருணன். கடவுளுக்கும் அவன் பசிக்குரல் கேட்டிருக்கும் போல.

“நாளை காலை பத்து வயதுக்கு குறைந்த சிறார்களுக்கு, வாய்ப்பனும், தேநீரும் வழங்க இருப்பதால் சிறார்களை மட்டும் ஏழாம் குறுக்கு தெருவிற்கு அண்மையில் ஒன்று கூடுமாறு அன்பாக கேட்டு கொள்கிறோம்” …தமிழர் புனர்வாழ்வு கழக வாகனத்தின் ஒலி பெருக்கி நிறைய தாய்மாரின் வயிற்றில் பாலை வார்த்தது.

(அன்றைய காலகட்டத்தில் குடும்ப அட்டை மூலம் சிறார்களுக்கான உணவுகளை பெற்றோர்கள் பெற்றுகொள்வது நிறுத்தப்பட்டிருந்தது. குடும்ப அட்டையில் இறுதி காலங்களில் இறந்த சிறார்களின் பெயர் விபரங்கள் நீக்கபடவில்லை. சில பெற்றோர்கள் வறுமை காரணமாக சிறார்களின் உணவை பெற்று வேறு இடங்களில் விற்ற சம்பவங்களும் நடந்திருந்தன.)

அதிகாலை நாலரை மணிக்கே சிறார்கள் வரிசையாக புனர்வாழ்வுகழக வாகனத்துக்கு காத்திருந்தார்கள். அருணனும் அவர்களில் ஒருவனாக ஒரு கையில் அவனது வீட்டில் இருந்த ஒரே தேநீர் கோப்பையுடன். தூக்கம் கண்ணை சுழட்டினாலும், பசியும் வாய்ப்பன் கனவும் அவனை தூங்கவிடவில்லை.

காலை எட்டரை மணிக்கு வந்த வாகனம் ஒவ்வொரு சிறாராக வாய்பனும் தேநீரும் கொடுத்து கொண்டிருந்தார்கள். அந்த சுடு தேநீரை அவர்கள் விடுகேன்று குடிக்கும் விதத்தில் தெரிந்தது ..அவர்கள் பசி. அருணனின் முறையும் வந்தது. அவன் கனவு வாய்ப்பன் இப்போ அவன் கையில்.. கோப்பையில் தேநீரை வாங்கிய அவன்..

“மாமா …அம்மாவும் வீட்ல இரண்டு நாளாக சாப்பிடவில்லை ..இன்னொரு வாய்ப்பன் தருவீங்களா ..??”

எந்த கல் நெஞ்சகாரனையும் உருக்கும் அந்த கேள்வி.. அந்த புனர்வாழ்வு தொண்டனை உருக்கியதில் வியப்பு ஏதுமில்லை. இன்னொரு வாய்ப்பனை அந்த பிஞ்சு கையில் கொடுத்தான். அதை அம்மாவுக்காக தன்னுடைய கிழிந்த காற்சட்டையின் பொக்கற்றுக்குள் கவனமாக வைத்த அருணன், சந்தோசமாக தன்னுடைய வாய்ப்பனை வாயில் வைத்த போதுதான் ..அது நடந்தது.

காலையில் இருந்து பறந்த உளவு விமானத்தின்(வண்டு) குறி (Fix) கேட்டு, சிங்கள இனவெறி இராணுவம் ஏவிய நாற்பதுக்கும் மேற்பட்ட பல்குழல் எறிகணைகள் அந்த பாலகர் வரிசையை தாக்கியது. ஒரு கையில் கோப்பையுடன் பசி ஈடேறும் கனவுக்காக காத்திருந்த குழந்தைகள் சிதறிபோயினர்.

சத்தம் கேட்டு வாய்ப்பன் கொடுக்கும் இடம் நோக்கி பெற்றவர்கள் விழுந்தடிச்சு ஓடினர். சாரதாவும் ஓடினாள்.

அங்கே..சிதறிக்கிடந்த பிஞ்சுகளின் உடற்பாகங்களுக்கும், பாதி தின்ற வாய்ப்பன்களுக்கும், கொட்டிகிடந்த தேநீர் கோப்பைகளுக்கும் நடுவில் …

பாதி வாய்ப்பன் வாயினுள்ளும் மீதி கையிலும் கெட்டியாக பிடித்திருந்த.. கருகி போய் இருந்த அருணனின் உடலை கண்டு பிடிக்க, அவளுக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை.

அவன் தாய்க்கான அந்த வாய்ப்பன் மட்டும் கருகாமல்….

குறிப்பு : 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முதல் வாரமளவில் முள்ளிவாய்க்கால் ஏழாம் குறுக்கு தெருவுக்கு அருகில் உணவுக்காக நின்ற சிறுவர்கள் மீது சிங்கள இராணுவம் நாடாத்திய பல்குழல் எறிகணை தாக்குதலில் கொல்லபட்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட அந்த பச்சிளம் பாலகர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்.

யாழ் இணையத்தின் ஒரு உறுப்பினர் எழுதிய கட்டுரை


%d bloggers like this: