பிரபாகரனின் பிறந்த இல்லம் கற்குவியலாக காட்சியளிக்கின்றது: சிவாஜிலிங்கம் கவலை

Home » homepage » பிரபாகரனின் பிறந்த இல்லம் கற்குவியலாக காட்சியளிக்கின்றது: சிவாஜிலிங்கம் கவலை

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித்துறை பிறந்த இல்லம் தற்போது ஒரு கற்குவியலாகவே காட்சியளிக்கின்றது என முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிக்கை ஒன்றில் மேலும் அவர் கூறியுள்ளதாவது,

தலைவர் பிரபாகரன் வல்வெட்டித்துறையில் பிறந்த இல்லம் சில மாதங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த சிங்கள மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாகவும் உல்லாசப் பயணத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒரு இடமாகவும் அமைந்திருந்தது.

ஆனால் தற்போது அந்த இடம் ஒரு கற்குவியலாகவே காட்சியளிக்கின்றது. தற்போது என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.

இலங்கையில் வல்வெட்டித்துறையில் பார்வதி அம்மாளை கவனித்து அவரை பராமரிப்பதற்கு பலர் தயாராக இருந்தாலும் வெளிநாட்டில் உள்ள அவரது பிள்ளைகளும் அதை விரும்புகின்றார்கள். எனினும் கனடா போன்ற நாடுகள் அனுமதிக்காத வேளையில் இது சாத்தியமாக வாய்ப்பு இல்லை என்றார்.

தலைவர் பிரபாகரன் பிறந்த வீடு பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், அந்த புனிதமான வீடு இராணுவத்தினரால் உடைக்கப்படுவது குறித்து தான் ஜனாதிபதி ராஜபக்சேவிற்கும் வடபிராந்திய இராணுவ உயர் அதிகாரிக்கும் உடனடியாக அறிவித்ததாகவும் ஆனாலும் அவர்களின் அலச்சியப் போக்கு அந்த நினைவுச் சின்னத்தை நாசமாக்கி தற்போது அந்த இடம் ஒரு கற்குவியலாகவே காணப்படுவதாகவும் சிவாஜிலிங்கம் கவலையுடன் கூறியுள்ளார்.


%d bloggers like this: