செய்திகள்

பிரான்சில் தமிழீழ மக்களின் வரலாற்றுப்பதிவு மே 18 போர்க்குற்றவியலின் அதி யுச்சநாள்

09.05.2010 பிரான்சில் செவரோன் மாநிலத்தில் மாநகரசபையும், செவரோன் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழீழ மக்கள்பேரவையும் இணைந்து, சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தம்முயிரை கொடுத்த மக்கள் நினைவாகவும், கடந்த 2009 ஆண்டு தமிழின அழிப்பின் உச்ச ஆண்டாகவும், மே 12 முதல் 18 வரை உச்ச நாட்களாகவும் அதில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் நினைவாகவும் இரண்டு மரங்களும், அதன் நினைவாக நினைவுக்கல்லும் பதிக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு செவரோன் மாநில முதல்வர் Stéphane Gatignon தலைமையில் நடைபெற்றது. மாவீரன் ரூபனின் சகோதரி அவர்கள் மாவீரர்கள் நினைவாகவும், உயிர்நீத்த அனைத்து மக்கள் நினைவாக ஈகைச்சுடரினை ஏற்றிவைத்ததுடன், அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மாநகரமுதல்வரும், செவரோன் தமிழ்ச்சங்கத்தலைவரும், மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த திரு. செல்வரதன் ( அலெக்ஸ்) அவர்களும் இரண்டு மரங்களையும் நாட்டினர்.

அன்பையும், அகிம்சையும், மனிதாபிமானத்தையும் போதித்த புத்த பகவானை கடவுளாக கொண்டு வீதிக்கு வீதி கோயில் அமைத்து வழிபட்டு வரும் சிங்கள தேசமும், சிங்கள இனமும் அந்த மண்ணின் ப+ர்வீகக்குடிகளான சகோதர இனமான தமிழ்மக்கள் மீது கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடாத்திவரும் திட்டமிட்ட இன அழிப்பினையும் படுகொலைசெய்யப்பட்ட, காணாமல் போன மக்கள் நினைவாக நினைவுக்கல்லும் நாட்டப்பட்டது.

நினைவு கல்லினை மாவீரன் மாதவனின் தந்தையார் நாட்டினார்.

இவ் உணர்வுமிக்க நிகழ்வில் உரையாற்றிய மாநகரமுதல்வர் அவர்கள் தமிழீழ மண்ணுக்காக உயிர் நீத்தவர்களை எண்ணியும், அவர்களை என்றும் மறக்காமல் இருக்க இந்த மாநகரத்தில் ஒரு அழியாத அடையாளத்தை செய்வதையிட்டு தான் மகிழ்வும் பெருமையும் அடைவதாகவும் கூறியிருந்தார்.

சந்ததி சந்ததியாக இது மறக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் தமது கண்காணிப்பிலேயும், அதே நேரம் பிரபல்யம் வாய்ந்த இந்த இடத்தை தெரிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்வில் மாநகரசபையில் இருந்து பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் வெளியிடங்களில் இருந்து அதிகம் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான வரலாற்று பதிவினை கொண்ட நிகழ்வுக்கு வந்தவர் யாவரும் இந்த நிகழ்வை உளமார ஏற்றுக்கொண்டு உணர்வுகொண்டு நின்றதையும், தாயகத்தில் கொடிய சிங்கள ஆட்சியாளர்கள் மாவீரர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவு மண்டபங்களையும், மண்ணுக்காக இறந்து போன ஒருவனுக்கு மனிதாபிமானத்துடன் காட்டப்பட வேண்டிய அவர்களின் துயிலும் இல்லங்கள் கூட இன்று கனரக வாகனங்கள் கொண்டு உடைத்தும், உழுதும் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தாய்மண்ணை விட்டு புலம்பெயர்ந்து நாம் வந்த போதும் எமது மண்ணையும், மக்களையும் மறக்காமல் அந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் மீட்டுக்கொள்ள இது போன்ற நிகழ்வுகளை தாம் வாழும் இடங்களில் செய்து எமது அடுத்த சந்ததிக்கு ஒரு வலுவையும், நம்பிக்கையையும், ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகின்றது. இதனை முன்மாதிரியாக கொண்டு ஏனைய இடங்களிலும், தமிழீழ மக்கள் வாழும் நாடுகளிலும் இது போன்ற நிகழ்வினை செய்ய வேண்டும்.

இந்த நிகழ்வில் அண்மையில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசின், மற்றும் தமிழீழ மக்கள் பேரவைத் தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களும், பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் படங்கள் சங்கதி இணையத்தளம்