செய்திகள்

தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான், மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி

அண்மையில் அமெரிக்காவில் கூடிய நாடு கடந்த அரசு, உருத்திரகுமாரனை தமிழீழத்தின் தேசியத் தலைவர் என அறிவித்திருந்தது.
இதற்கு முன்னாள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் நாடு கடந்த அரசில் போட்டியிட்டு பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆதரவு வழங்கியது போன்றும் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஜெயானந்தமூர்த்தி அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
‘நாடு கடந்த அரசின் தலைவராக உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு’ என்ற தலைப்பில் வெளியான செய்தியில் நான் உருத்திரகுமாரனுக்கு எதிராக போட்டியிட்டதாகவும் பின்னர் போட்டியில் இருந்து ஒதுங்கி அவரைத் தேசியத்திற்கான தலைவராக்கினேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இச்செய்தியில் உண்மைக்குப் புறம்பான சில தவறுகள் எழுதப்பட்டுள்ளன.

உருத்திரகுமாரனை அமெரிக்காவில் இருந்து சிலர் தலைவராக பிரேரித்தபோது என்னை லண்டனில் இருந்து சிலர் பிரேரித்தனர்.

ஆனால் ஒரு பதவிக்கு இருவர் போட்டியிடுவதென்றால் ஐனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அமெரிக்காவிலும் ஜெனிவாவிலும் வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

லண்டனில் மாத்திரம் மூவர் தவிர ஏனைய 11 பேர் எனக்கு ஆதவவாக வாக்களித்தனர்.

எனவே ஐனநாயக முறைப்படி இத்தலைவர் தெரிவு இடம் பெறவில்லை.

அப்படி இடம் பெறுவதென்றால் ஏனைய இரு இடங்களான அமெரிக்கா, ஜெனிவா போன்ற இடங்களிலும் லண்டனைப் போன்று உறுப்பினர்களின் வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே இத்தலைவர் பதவி என்பது உத்தேச இடைக்கால பணிக்குழுவுக்கானதே தவிர தேசியத்திற்கானதல்ல.

தேசியத்திற்கான தலைமை ஒன்றுதான் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

அது எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே.

எனவே நான் தேசியத்திற்கான தலைவராக உருத்திரகுமாரனை தெரிவு செய்தாக குறிப்பிடப்பட்டுள்ளதை நான் மறுக்கின்றேன்.

நன்றி

எஸ்.ஜெயானந்தமூர்த்தி