செய்திகள்

இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை பான் கீ மூன் திருப்பியழைத்துள்ளார் ,அலுவலகம் மூடல்

கொழும்பிலுள்ள ஐ.நா. அபிவிருத்தி முகவரத்தின் (யூ.என்.டி.பி.) பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்குத் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளார். அத்துடன் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புஹ்னேவையும் ஆலோசனைகளுக்காக நியூயோர்க்கிற்கு அவர் திருப்பி அழைத்துள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. பேச்சாளர் ஒருவர் சற்றுமுன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ஐ.நா. அலுவலகத்தின் வழக்கான செயற்பாடுகள் மீதான இடையூறுகளை இலங்கை அதிகாரிகள் தடுக்கத் தவறியமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாகவும் மேற்படி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஐ.நா. அமைப்பின் பணிகள் மேலும் இடையூறு இன்றி தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. அலுவலகத்தைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் தனது கடப்பாடுகளை நிறைவேற்றும்படியும் இலங்கை அரசாங்கத்திடம் பான் கீ மூன் கோரியுள்ளார்.