சிறிலங்கா செய்திகள்

பொலிஸார் மூவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக முன்னாள் இராணுவ வீராங்கனை புகார்

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவர் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக இராணுவத்தை விட்டு தப்பியோடிய பெண்ணொருவர் புகார் தெரிவித்துள்ளார். இப்புகார் குறித்து விசாரிப்பதற்கு உயர்மட்ட பொலிஸ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தனது காதலருக்கு எதிராக முறைப்பாடொன்றைச் செய்யச் சென்றபோது புத்தல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவர் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.என்.ஜி. அம்பன்வெ நியமித்துள்ளார்.

காலி மாவட்டத்தைச் சேர்ந்த மேற்படி பெண் இராணுவத்தின் கஜபா படைப்பிரிவில் பணியாற்றியவராவார்.
அவர் இராணுவத்தை விட்டு தப்பியோடியபின் புத்தளவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பு கொண்டு அவ்விளைஞரின் உறவினர் வீட்டில் தங்கிருந்தாராம்.

கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமடைந்தபின் கருக்கலைப்பு செய்துகொள்ளுமாறு அந்த இளைஞர் கூறியதால் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து அப்பெண்ணும் இளைஞரும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனராம்.

எனினும் பின்னர் தனது காதலரான இளைஞரும் அவரின் பெற்றோர்களும் தன்னை இரவுநேரத்தில் வீட்டைவிட்டு துரத்தியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புத்தல பொலிஸ் நிலையத்தில் மீண்டும் முறைப்பாடு செய்யச் சென்றபோது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவர் தனக்கு உதவி செய்வதற்குப் பதிலாக தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திவிட்டு 2 தினங்களின் பின்னர் இராணுவத்தைவிட்டு தப்பியோடியமைக்காக தன்னை இராணுவப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அப்பெண் பின்னர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.