“காதைச் செவிடாக்கும் மௌனம் மற்ற நாடுகளையும் இலங்கை வழியில் செல்ல வைக்கும்”-மூத்தோர்கள் சபை

Home » homepage » “காதைச் செவிடாக்கும் மௌனம் மற்ற நாடுகளையும் இலங்கை வழியில் செல்ல வைக்கும்”-மூத்தோர்கள் சபை

மூத்தோர்கள் சபை என்ற முன்னாள் தலைவர்களின் அமைப்பான, தெ எல்டர்ஸ், என்ற அமைப்பு, இலங்கை அரசு மனித உரிமைகள் விஷயத்தில் ஒரு அவமதிக்கும் மனோபாவத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறது.

இது நெல்சன் மண்டேலாவால் ஆரம்பத்தில் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட அமைப்பு.

இலங்கை அரசு மனித உரிமைகளை புறந்தள்ளும் மனோபாவத்தையும், உள்நாட்டில் இருக்கும் விமர்சகர்களையும், மாற்றுக் கருத்து கொண்டோர்களையும் அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதைப் பற்றி சர்வதேச சமுதாயம் மேலும் கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகளின் மூத்த முன்னாள் தலைவர்கள் அமைப்பான, தெ எல்டர்ஸ் அமைப்பு கூறியிருக்கிறது.

இலங்கை நிலவரம் குறித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், இந்த அமைப்பு, சர்வதேச சமூகம் இது வரை இலங்கை குறித்து காட்டிவரும் “ காதைச் செவிடாக்கும் மௌனம்” மற்ற நாடுகளையும் இலங்கை வழியில் செல்ல வைக்கும் என்று கூறியிருக்கிறது.

நெல்சன் மண்டேலாவால் உருவாக்கப்பட்ட இந்த எல்டர்ஸ் அமைப்பில், பேராயர் டெஸ்மண்ட் ட்டு, முன்னாள் பின்லாந்து அதிபர் மார்ட்டி அஹ்திசாரி, ஐ.நா மன்ற முன்னாள் தலைமை செயலர் கோபி அன்னான், முன்னாள் ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையர் மேரி ராபின்சன், முன்னாள் ஐ.நா மன்ற தூதர் லக்தார் பிரஹிமி போன்றோர் உறுப்பினர்களாக உள்ளனர்

போருக்கு பிந்தைய இலங்கையில் சில முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடும் இந்த அமைப்பு, வடக்கில் மேலும் அதிகரித்த அளவில் பொருளாதார நடவடிக்கைகள் நிகழ்ந்திருக்கின்றன, சுமார் 26000 இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தத்தம் இடங்களுக்கு திரும்பியிருக்கிறார்கள் என்பனவற்றை உதாரணமாகக் குறிப்பிடுகிறது.

ஆனால், இந்த முன்னேற்றகரமான விஷயங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் அம்சங்களாக, கருத்து மாறுபடுவோர்களை சகித்துக் கொள்ளாமல் ஒடுக்குவது, அரசுக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிப்பது போன்றவை நிகழ்வதாக அது சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேச சமூகம் குறிப்பாக, இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கை அரசு அமலில் வைத்திருக்கும் அவசரகால சட்டங்களை விலக்கிக்கொண்டு, இனச்சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களது மனித உரிமைகளையும் பாதுகாக்க வெளிப்படையான உறுதிமொழியை வழங்கவைக்க வேண்டும் என்று இந்த அமைப்பு கோருகிறது.

தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்களை சந்திக்க செஞ்சிலுவை சங்கத்துக்கு அனுமதி வழங்குதல், ஐ.நா மன்ற தலைமைச்செயலர் உருவாக்கியிருக்கும் நிபுணர்கள் குழுவுடன் இலங்கை அரசு ஒத்துழைத்தல், நீதித்துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தன்னார்வ இயக்கங்கங்கள் இலங்கையில் தங்களது பணிகளை அச்சுறுத்தல் அல்லது தேவையற்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யும் சூழலை உருவாக்குதல், இலங்கையில் இனச்சிறுபான்மை மக்கள் நீண்ட காலமாக அரசியல் தளத்தில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நிலையை சரிசெய்யத் தேவைப்படும் அரசியல் சட்ட சீர்திருத்தங்களை கொண்டுவருவது ஆகிய விஷயங்களையும் பன்னாட்டு சமூகமும் இந்தியா, அமெரிக்கா , சீனா , ஜப்பான் போன்ற நாடுகளும் இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்று இந்த தலைவர்கள் அமைப்பு கூறியிருக்கிறது.

‘ஆணையங்களால் பலன் இல்லை’

இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள பின்லாந்து முன்னாள் அதிபர் மார்டி அஹ்திசாரி, வெளியிட்ட கருத்துக்களில், தேசிய நல்லிணக்கம் மற்றும் படிப்பினைகளுக்கான ஆணையத்திலிருந்து பெரிய அளவில் ஏதும் பலனை நாம் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். கடந்த முப்பதாண்டு வரலாற்றை நீங்கள் பார்த்தால், இது போன்ற ஆணையங்களால் எந்த பலனும் விளையவில்லை என்பது தெரியும். அந்த ஆணையங்களின் அறிக்கைகள் கூட வெளியிடப்படவில்லை. எனவே இந்த முயற்சி ஒன்றும் விரும்பும் அளவுக்கு இல்லை என்றார்.

மூத்தோர்கள் சபை ஊடக அறிக்கை


%d bloggers like this: