கட்டுரைகள்

பிரான்ஸ் நாடு கடந்த அரசில் குழப்பங்களும், குளறுபடிகளும் – மனம்திறக்கிறார்கள் வேட்பாளர்கள்

இன்றைய ஈழமுரசில் வெளிவந்த திரு.திருச்சோதி மற்றும் செல்வி சாளினி ஆகியோரின் செவ்வியை இங்கே பதிவு வாசகர்களுக்காக வழங்குகின்றோம்.

நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது பேரவைக் கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்போது அது நடைபெற்றுக்கொண்டோ அல்லது நடைபெற்று முடிந்தோ இருக்கக்கூடும்.

ஆனால், நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் சிலர், தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகக்கூறி சில நாடுகளில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்த் தேசியத்திற்கு ஆதாரவான கருத்துக்களைக் கொண்டவர்களும், அதற்காக உழைப்பவர்களுமே பெரும்பாலும் இவ்வாறு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

தேர்தல் முடிவடைந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை முறைகேடுகளுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு முடிவோ அல்லது மறு தேர்தலுக்கான ஏற்பாடுகளோ செய்யப்படவில்லை. இதில் குறிப்பாக பிரான்சில் அதிக மக்கள் விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளரான சாளினி, மற்றும் திருச்சோதி ஆகியோர் காரணங்கள் எதுவுமின்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

யாப்பொன்றினை உருவாக்கி அடுத்த கட்டத்திற்கு நகரும் நாடு கடந்த தமிழீழ அரசு, வெற்றிபெற்ற இந்த வேட்பாளர்களுக்கான பதில் எதனையும் வழங்காது, நாடு கடந்த தமிழீழ அரசின் முழுமையான வேட்பாளர்கள் இன்றியே தனது யாப்பினை நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அறிந்த நிலையில், இது தொடர்பாக தற்போது நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் உருத்திரகுமாரனின் பதிலை எதிர்பார்த்து கேள்விகளை அவரிடம் எழுப்பியிருந்தோம்.

ஆனால், அவர் பதில்கள் எதனையும் ஈழமுரசுக்கு வழங்காத நிலையில், இது குறித்து பிரான்சில் வெற்றி பெற்று இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேட்பாளர்களான திரு.திருச்சோதி மற்றும் செல்வி சாளினி ஆகியோருடன் தொடர்புகொண்டு இந்தத் தேர்தல் குறித்தும் அவர்களின் தற்போதைய நிலை குறித்தும் கேள்விகளை எழுப்பினோம்.

அவர்களின் பதில்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரான்ஸ் தேர்தலில் இடம்பெற்ற குழப்பங்களையும், குழறுபடிகளையும் அம்பலப்படுத்துவதாக அமைந்திருந்தது.

இனி அவர்களுடனான சந்திப்பில் இருந்து…

கேள்வி:- நாடுகடந்த அரசின் தேர்தலில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டும், உங்கள் தெரிவு செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதன் பின் உங்கள் தெரிவின் முடிவு என்ன நிலையில் உள்ளது?

சாளினி:- கூடுதலான மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி எனக்கு வாக்களித்துள்ளார்கள். வாக்களிப்பு நடைபெற்ற பொழுது பல்வேறு வாக்களிப்பு நிலையங்களுக்கு நான் சென்றிருந்தேன். அங்கு எவ்வித தேர்தல் முறைகேடுகளும் இடம்பெற்றது தெரியவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்போது குழப்பங்கள் நடந்ததாக கூறி, 93ம் மாவட்டத்திற்கான தேர்தலை இடைநிறுத்துவதாக அறிவித்தார்கள்.

அதுவும் நான் கூடுதலாக கண்காணித்த இடங்கள் இரண்டு (பொபினி, லாக்கூர்னோவ்) அந்த இரு இடங்களிலும் தான் பிரச்சினை நடந்ததாக குறிப்பிட்டார்கள். தேர்தல் நடந்து நான்கு மாதங்கள் முடிந்த நிலையிலும் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவுகளையும் அறிவிக்கவில்லை என்பதே தற்போது வரையுள்ள சூழ்நிலை. இதனால் என்ன நடந்தது, என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாமல் இருக்கிறது.

திருச்சோதி:- தேர்தல் நடத்துவதாக இருந்தால் தேர்தல் ஆணைக்குழு ஒன்று இருக்க வேண்டும். அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் தேர்தல் ஆணையமும், தேர்தல் விசாரணைக் குழுவும் அறிவிக்கப்பட்டு பிரதிநிதிகளின் விபரமும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரான்சில் அது அறிவிக்கப்படவில்லை. அப்படி இருந்தும் நாங்கள் தேர்தலில் பங்குபற்றினோம். எங்களுக்குத் தெரிய தேர்தல் ஆணையம் என்று அறிவிக்காமல் நாடு கடந்த அரசு இங்கு செயற்பட்டது.

வேலும்மயிலும் மனோகரன், சிவா சின்னப்பொடி, ஜோன்மரி யூலியா ஆகியோர் தேர்தல் ஆணையகப் பிரதிநிதிகள் எனக்கூறி தேர்தல் வேட்ப்பு மனுக்களையும், வேட்பாளர் ஒவ்வொருவரிடமும் 200 ஈரோக்களையும் பெற்றுக் கொண்டார்கள். தேர்தல் விண்ணப்ப முடிவுத் திகதி அன்று யார் யார் வேட்பாளர்கள் எனக் கேட்டபோது, பதில் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் வேட்பாளர்கள் போட்டியிட இருந்த மாநிலங்கள் மாறி அறிவிக்கப்பட்டன.

தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் குழறுபடிகள் எனக்கூறி 92 மாநிலத்தில் இடைநிறுத்தப்பட்டது. இந்த முடிவு அறிவித்த போது விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்கள். அதன் பின்னர் அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஒரு நாள் காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரெஞ்சு மொழி பேசிய நபர் ஒருவர், தாங்கள்தான் தேர்தல் விசாரணையை நடத்தப் போவதாகவும் அன்று மாலை வந்து தங்களை சந்திக்குமாறும் கோரியிருந்தார்.

அவரிடம், நீங்கள் உங்களை அறிமுகப்படுத்துமாறு கேட்டபொழுது, அவர் தன்னை அறிமுகப்படுத்தவில்லை. உதாசீனமான பதில்களை வழங்கினார். அதனால் நான் அச்சந்திப்பை தவிர்த்துக் கொண்டேன். சிறிது காலத்தில் முகவரி இல்லாத கடிதம் ஒன்று வந்தது. குறிப்பிட்ட காலத்தில் வந்து சந்திக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் எவரது விபரமும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. பின்னர் தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டார். அவரிடம் விபரத்தைக் கேட்டபோது எதுவும் கூறாமல் வருவதாய் இருந்தால் வரலாம் என்ற பாணியில் பதில் வந்தது. அதன் பின் எவ்வித தகவலும் இல்லை.

இவ் விசாரணை ஆணையத்தில் யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. இதுதான் இன்றுவரையான தேர்தல் முடிவுகள்.

கேள்வி:- தேர்தல் நடைபெற்ற தினத்தில் நீங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். பின்னர் எப்படி முடிவில் மாற்றம் வந்தது? நீங்கள் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் சந்தேகங்கள் எழுப்பப்படலாம், ஆனால் நீங்கள் மிக அதிக வாக்குகளைப் பெற்றிருந்தீர்களே?

சாளினி:- எனக்கு மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்திருந்தார்கள். தேர்தல் தினத்தன்று மே 2ம் திகதி நாள்ளிரவு வரை இருந்து எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்ட பின்பே வீட்டிற்குச் சென்றோம். ஆனால் உத்தியோகபூர்வ முடிவுகள் 5ம் திகதி எனக்கூறி, இதற்கான ஏற்பாட்டு மண்டபத்திற்கு வருமாறு என்னையும் அழைத்திருந்தார்கள்.

அங்கு சென்றபோது 93ம் பிராந்திய வாக்களிப்பு செல்லுபடியாகாது என்று கூறி, காரணம் எதுவும் கூறாமல் விட்டுவிட்டார்கள். இன்றுவரை எவ்வித பதிலும் வழங்கப்படாத நிலையில் மக்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம். பொது இடங்களில் சந்திக்கும் மக்கள் தேர்தல் முடிவு குறித்து கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை.

இங்கு தேர்தல் தவறுகள் பற்றி விசாரிக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என அவர் அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்ற பொழுது என்னால் பங்குபற்ற முடியவில்லை. இருந்த பொழுதும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் எனக்கூறப்பட்ட திரு ஜோன்மரி யூலியாவை தேர்தலின் பின்னர் சந்தித்து தேர்தல் முறைகேடுகள் குறித்து கலந்துரையாட சென்ற பொழுதுதான், அவர் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கூறினார்.

தேர்தல் ஆணையத்தில் ஒன்பது பேர் இருப்பதாக தெரிவித்தார். அதில் யார் யார் பிரதிநிதிகள் என்று கேட்டதற்கு, தனக்கே அது தெரியாது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை கூறாமல் முடித்துக் கொண்டார்.

திருச்சோதி:- தேர்தல் நடப்பதற்கு முன்னர் வேட்பாளர்களுக்கு அறிவுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் வேட்பாளர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் அப்படி நடைபெறவில்லை. பலரும் தனிப்பட்ட விமர்சனத்தில் ஈடுபட்டனர். இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மே 2ல் தேர்தல் முடிந்த பின்னர் 92ம் மாவட்டத்தில் பிரான்ஸ் பிரசைக்கு முன்னாலேயே வாக்கு எண்ணப்பட்டு நான் வெற்றி பெற்றதாக தொலைக்காட்சியிலும், ஊடகங்களிலும் அறிவிக்கப்பட்டது. பின் மே 5ம் திகதி உத்தியோகபூர்வமாக முடிவு அறிவிக்கும்போதுதான் தேர்தல் முறைகேடு எனக் கூறி முடிவு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்றுவரை காரணம் கூறப்படவில்லை.

இதனால் உருத்திரகுமாருடன் தொடர்பு கொண்டேன். ஏனெனில் இவரது தலைமையில் பத்துபேர் கொண்ட குழுவே தேர்தல் நடமுறை குறித்து கொள்கையை வரைந்தவர்கள்.

(குழறுபடிகள் அடுத்த இதழிலும் தொடரும்…)

நன்றி: ஈழமுரசு