செய்திகள் டென்மார்க்

மனித நேய நடைப்பயணம்-டென்மார்க் இன்று ஆரம்பமாகின்றது

ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை தடுக்காமல் பாராமுகமாக இருந்த டென்மார்க் அரசிடம் நீதி கேட்டு மகேஸ்வரன் பொன்னம்பலம் , மனோகரன் மனோரஞ்சிதன் மற்றும் பார்த்தீபன் தம்பிராசா ஆகியோர் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான கேர்னிங் நகரத்தில் இருந்து டென்மார்க் தலைநகரம் நோக்கி மேற்க்கொள்ளும் மனித நேய நடைப்பயணம் இன்று ஆரம்பமாகின்றது.

கேர்னிங் நகரசபை முன்றலில் பிற்பகல் 5 மணிக்கு நடைபெறும் ஒன்றுகூடலுடன் நடைபயணம் ஆரம்பிக்கவிருப்பதாக நடைப்பயணத்திற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகாரகுழுவினர் தெரிவித்துள்ளடன் ஆரம்ப ஒன்றுகூடலில அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

டென்மார்க் தொலைக்காட்சியின் நேற்றைய மத்திய பகுதி ஒளிபரப்பில் மனிதநேய நடைப்பயணம் மேற்கொள்பவர்களுடனான செவ்வியொன்றும் சிறிலங்கா அரசால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் காணொளியும் ஒளிபரப்பபட்டது.

மனிதநேய நடைப்பணயம் தொடர்பாக அவர்கள் 11.10.2010 அன்று வெளியிட்ட ஊடக அறிக்கை:

மனித நேய நடைப்பயணம் – டென்மார்க்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான புலம்பெயர் தமிழீழ மக்களின் பங்களிப்பில் டென்மார்க் வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர். 2009ம் ஆண்டு சிறிலங்கா அரசு தமிழீழமக்கள் மீது நடாத்திய இனப்படுகொலையை நிறுத்தக்கோரி நடாத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் முழுமையாக மக்கள் கலந்துகொண்டனர். முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல, ஒரு திருப்பமே என்பதுடன் அங்கே எமது விடுதலை படையின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டனவே தவிர எமது இலட்சியம் என்றுமே மௌனிக்காது என்பதையும் உலகிற்கு எடுத்துரைத்தும் வருகின்றனர்.

தமது பெருவிருப்பை எடுத்துரைப்பதற்காக டென்மார்க் தமிழர் பேரவை எனும் சனநாயக அமைப்பை முழுமக்களினதும், அனைத்துத் தமிழ் அமைப்புக்களினதும் பங்களிப்புடன் கட்டியமைத்துமுள்ளனர்.

இறைமை கொண்ட தமிழீழ அரசை மீளமைப்பதே இலங்கைத்தீவில் தமிழ் பேசும் மக்களுக்கு பாதுகாப்பான அரண் எனபதை என்றும் வலியுறுத்தி வரும் டென்மார்க் வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள், கடந்த பெப்ரவரி மாதத்தில் தமது பெருவிருப்பை சனநாயக வழியில் வாக்கெடுப்பு ஊடாகவும் இடித்துரைத்தனர்.

பிரித்தானியாவில் இருந்து சிவந்தன் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் செனீவாவில் முடிவுற, அங்கிருந்து யெகன், தேவகி, மற்றும் வினோத் அவர்களால் எமது விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரைகுத்தி, சிறிலங்காவால் மேற்கொள்ளப்படுகின்ற தமிழீழமக்கள் மீதான இனப்படுகொலைக்கு உரம்கொடுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் முடிவடைந்தது.

குருட்டுத்தனமான மதவாத பயங்கரவாதத்திற்கும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும் ஒரு பாரம்பரிய இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டை கண்டுகொள்ள விரும்பாத ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற்ற “எழுவாய் தமிழா நெருப்பாய்” என்ற எழுச்சி நிகழ்வைத் தொடர்ந்து, சேர்மனி வாழ் தமிழ் இளையோரால் மிதிவண்டிப் பயணமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இந்தப் பயணம் 11.10.2010 அன்று பெல்ஜியம் புறூசலில் ஆரம்பிக்கப்பட்டு, இனப்படுகொலை நடாத்திய சிறிலங்கா படையதிகாரியை தனது நாட்டுக்கான தூதுவராக ஏற்றுக்கொண்டதுடன் தமிழீழ விடுதலைக்கும், இனப்படுகொலைக்குள்ளான மக்களுக்கும் உதவிய மனிதநேயப் பணியாளர்களை சிறைப்படுத்தியிருக்கும் சேர்மனியின் பேர்லின் நகரம் நோக்கி நீதி கேட்டுச் செல்கின்றனர்.

மனிதநேயப் பயணங்களை உற்று நோக்கிய டென்மார்க் வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் பலர் தாமும் இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

தமிழர்களின் பலம்வாய்ந்த விடுதலைப்போராட்டம் தனது இறுதி இலக்கை நோக்கி 2000 ஆண்டின் ஆரம்பத்தில் நகர்ந்த வேளையில், சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புப் படைகள் பின்வாங்கிக் கொண்டிருந்த வேளையிலும் தமிழர்களின் தலைமை போர் நிறுத்தத்தை அறிவித்து, தேவையற்ற மாந்தர் அழிவைத் தவிர்த்தனர்.

அனைத்தையும் அவதானித்த அனைத்துலக நாடுகள், நோர்வே ஊடாக பேச்சுவார்த்தை எனும் மாயையை தமிழ் மக்கள் மீது திணித்தனர்.

தமிழர்களின் தலைமை அனைத்துலக நாடுகளின் சதியை உணர்ந்த போதும் விடுதலைப்போராட்டங்களின் மூலம் தமது விடுதலையை பெற்ற வடதுருவ நாடுகளை மட்டும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற அனுமதித்து, சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர். போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவில் டென்மார்க் அரசும் பங்குகொண்டது.

ஆனால் சிறிலங்கா அரசோ பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமது படைகளைப் பாதுகாத்து அனைத்துலகத்தால் தடைசெய்யப்பட்ட படைக்கருவிகளையும் கொள்வனவு செய்து தமிழ்மக்கள் மீது பல நாடுகளின் உதவியுடன் போர் தொடுத்து மாபெரும் இனப்படுகொலையைச் செய்தது.

இந்த இனப்படுகொலையை தடுக்காமல் பாராமுகமாக இருந்த டென்மார்க் அரசிடம் நீதி கேட்டு திரு. மகேஸ்வரன் பொன்னம்பலம் மற்றும் திரு. பார்த்தீபன் தம்பிராசா ஆகியோர் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான கேர்னிங் நகரத்தில் இருந்து டென்மார்க் தலைநகரம் நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகாரக் குழு இந்த மனிதநேய நடைப்பயணத்திற்கான அனைத்து ஒழுங்குகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மனிதநேய நடைப்பயணம் வருகின்ற 14ம் நாள் (14.10.2010) பிற்பகல் 5 மணிக்கு கேர்னிங் நகரசபை முன்றலில் இருந்து ஆரம்பமாகி, தலைநகர் கொப்பன்காகன் நகரசபை திடலில் நிறைவுபெறும்.

இறுதி நாள் அன்று கொப்பன்காகன் நகரசபை திடலில் மாபெரும் எழுச்சி ஒன்றுகூடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டென்மார்க் தமிழீழமக்களை அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மனிதநேயப் பயணத்தை மேற்கொள்ளுவோர் கீழ்வரும் ஆறு தீர்மானங்களை வலியுறுத்துகின்றனர்.

  1. இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்வதற்கு டென்மார்க் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  2. வதைமுகாம்களில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு டென்மார்க் அரசு நடவடிக்கை மேற்;கொள்ளவேண்டும்.
  3. இனப்படுகொலையை மேற்கொண்ட சிறிலங்கா அரசு மீது சுயாதீன விசாரணை மேற்கொண்டு தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க டென்மார்க் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. சுயாதீன ஊடகங்கள் தடைகளற்று இயங்க சிறீலங்கா அரசு மீது டென்மார்க் அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
  5. தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை டென்மார்க் அரசு அங்கீகரிக்கவேண்டும்.
  6. 1977 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும், 2010 ஆம் ஆண்டு டென்மார்க் வாழ் புலம்பெயர் தமிழீழ மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும் தமிழீழமக்களுக்கான அரசியல் தீர்வு கிடைப்பதற்கு டென்மார்க் அரசு உதவவேண்டும்.

இறுதிநாள் எழுச்சிநிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

மானிடவிவகாரக்குழு
டென்மார்க் தமிழர் பேரவை
மேலதிக தொடர்புகளுக்கு: 52173671
ஊடகதொடர்புகளுக்கு: றெமூண் வாசிங்ரன்
Telefon: 61307254
E-Mail: Talsmand@dansktamilskforum.dk