டென்மார்க் மனிதநேய நடைப்பயணம் நிறைவடைந்தது.

Home » homepage » டென்மார்க் மனிதநேய நடைப்பயணம் நிறைவடைந்தது.

திரு. மகேஸ்வரன், திரு. பார்த்தீபன், திரு. மனோகரன் ஆகியோரால் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 14-10-2010 அன்று கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் 23-10-2010 அன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரின் நகரசபை முன்றலில் நிறைவடைந்தது.

முற்பகல் பதினொரு மணியளவில் நகரசபை முன்றலை வந்தடைந்த இவர்களை டென்மார்க்கின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் அன்புடனும் எழுச்சியுடனும் மகிழ்வுடனும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஒன்றுகூடல் ஆரம்பமாகியது. தமிழர் பேரவை டென்மார்க்கினர் அனைத்து மக்களையும் வரவேற்றனர்.

தமிழர் பேரவையின் சட்டத்தரணியாகிய திரு. பியோன் (Bjørn Elmquist) அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் சிறிலங்காவில் மக்களைப் படுகொலை செய்த அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் போன்றோரைச் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் அதற்குத் தேவையான ஆதாரங்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலும் வேறு யாராவது சிறிலங்கா அரசாலோ அல்லது போராலோ பாதிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான ஆதாரங்கள் இருப்பின் அவற்றைக் கொடுக்கலாம் என்றும் கூறினார். இதன் மூலம் தமிழருக்கு நீதி கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும் எடுத்துரைத்தார்.

இவரின் உரையைத் தொடர்ந்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான திரு. சோன் (Søren Søndergaard) அவர்கள் உரையாற்றினார். இவர் தனது உரையில் ஐரோப்பாவைச் சேர்ந்த பதினொரு நாடுகள் சிறிலங்கா அரசிற்குப் பாரிய போராயுதங்களை விற்பனை செய்து பணத்தைச் சம்பாதித்துள்ளன. இவர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருந்தாலும் அதன் விளைவால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல்கள், உடைமைகள் துண்டுதுண்டாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. அதனால் அப்படுகொலைகளுக்கு ஐரோப்பிய நாடுகளும் பொறுப்பேற்று, தமிழருக்கு ஒரு நாடு கிடைத்து சுதந்திரமாக வாழ ஐரோப்பிய ஒன்றியம் வழிவகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதன்பின்பு நடைப்பயணம் மேற்கொண்ட மூவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, தங்களது நடைப்பயணத்துக்கு அனைத்து வகையிலும் உதவிபுரிந்தவர்களுக்கும் தமிழர் பேரவைக்கும் நன்றி கூறினர். இவர்கள் மூவருக்கும் தமிழர் பேரவையால் சிறிய நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

இவ்வெழுச்சி ஒன்றுகூடலில் மேலும் கவிதை, மாவீரர் நினைவுப்பாடல், உரைகள் போன்றவை இடம்பெற்றன. இறுதியாக நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் ஒலிக்கப்பட்டு இவ்வெழுச்சி ஒன்றுகூடல் நிறைவுக்கு வந்தது.

இங்கு உரையாற்றிய அனைவரும் அனைத்துத் தமிழீழ மக்களுக்கும் ஒரு வேண்டுகோளை விடுத்தனர். தாயகத்திலே சிறிலங்கா அரசாலோ அல்லது அவர்களின் படைகளாலோ நீங்கள் அல்லது உங்கள் உறவினர்கள் பாதிக்கப்பட்டிருப்பின், அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பின், யாராவது காணாமற் போயிருப்பின் அல்லது உங்கள் கிராமங்கள் அழிக்கப்பட்டிருப்பின் அவற்றை எழுத்து மூலம் எழுதி அனுப்புவதுடன் அது தொடர்பான ஆதாரங்கள் இருப்பின் அவற்றையும் சேர்த்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், நீங்கள் யாராவது அவற்றை நேரடியாகப் பார்த்திருப்பின் அது தொடர்பாக நேரடியாக சாட்சியமளிக்கலாம் என்றும் தெரிவித்துக்கொண்டனர். நீங்கள் அளிக்கும் ஆதாரங்கள், சாட்சியங்கள் அனைத்துமே இரகசியமாகப் பேணப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

எனவே உங்கள் ஆதாரங்கள், சாட்சியங்களைத் தமிழர் பேரவை டென்மார்க்கிற்கு அல்லது நடைப்பயணம் மேற்கொண்டவர்களுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இம்மனிதநேய நடைப்பயணம் நிறைவுபெற்றவுடன் டென்மார்க்கில் உள்ள டெனிஸ் ஊடகங்களில் பின்வருமாறு செய்திகள் வெளியாகியுள்ளன.

டென்மார்க் தமிழீழத் தமிழ் மக்கள் சிறிலங்காவில் தமிழர்களைப் படுகொலை செய்த ஜனாதிபதி மகிந்தராஜபட்ச அவர்கள் மீது சர்வதேசப் போர்க்குற்றவியல் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதனால் ஜனாதிபதி மகிந்தராஜபட்ச அவர்கள் இனிமேல் எல்லா நாடுகளுக்கும் தான் விரும்பிய நேரத்தில் செல்ல முடியாது.


%d bloggers like this: