செய்திகள் டென்மார்க்

சர்வாதிகாரி மகிந்தா மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு.

டென்மார்க்கில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களான மனோகரன் மற்றும் பார்த்தீபன் தன்னிச்சையாக மேற்கொண்ட முயற்சிகளால் வரும் வாரம் டென்மார்க்கின் பிரபல்ய சட்டவியலாளரால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலையை மேற்கொண்ட , மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் சனாதிபதி மகிந்த ராசபக்சா உட்பட அனைத்து பாதுகாப்பு படையதிகாரிகளுக்கும் எதிராக வழக்கு பதியப்படவிருக்கின்றது. இந்த இரு டென்மார்க் வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நடவடிக்கையில் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகார குழு முழுமையாக இணைந்து செயல்படுகின்றது.

கடந்த பல மாதங்களாக இவர்கள் சிறிலங்கா அரச படைகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலை, கடந்த ஆண்டு சிறிலங்கா படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து சட்டவியலாளரிடம் கையளித்திருந்தனர்.

கடந்த வருடம் டென்மார்க் தமிழர் பேரவையினர் டென்மார்க் அரசின் அனத்துலக குற்றவியல் வழக்கறிஞரிடம் சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையின் ஆதாரங்களை கையளித்திருந்தனர்.

இப்பொழுது டென்மார்க் சட்டவியலாளரால் ரோம் உடன்படிக்கையின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடரப்படவிருக்கின்றது. சிறிலங்கா அரசு இந்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டிராத போதும் இனப்படுகொலை மற்றும் மனிகுலத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ரோம் உடன்படிக்கையில் கையொப்பம் இட்ட 120 நாடுகளுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் கைதுசெய்யபடலாம். அல்லது குற்றம் இழைத்தவர்கள் இந்த நாடுகளுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் டென்மார்க் வழக்கறிஞர் தனது குறிப்பத்திரிகையின் அடிப்படையில் அவர்களை தடுத்து வைக்கவேண்டும் என குறிப்பிட்ட நாடுகளிடம் வேண்டிக்கொள்ளலாம்.

டென்மார்க் சட்டவியலாளரால் வரும் வாரம் அகைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் குற்றப்பத்திரிகையில் ரோம் உடன்படிக்கையில் கையொப்பம் இட்ட நாடுகளில் தற்பொழுது வாழும் சிறிலங்காவின் படையதிகாரிகளின் விபரங்களும் அடங்குவதாக அறியப்படுகின்றது.

டென்மார்க்கில் கடந்த வாரம் நடைபெற்ற மனிதநேய நடைப்பயணத்தின் இறுதிநாள் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட தமிழர்களின் சட்டவியலாளர் அங்கே கூடியிருந்த மக்களுக்கு வழக்கின் விபரங்களை எடுத்துக்கூறினார்.

மனிதநேய நடைப்பயணத்தில் ஈடுபட்ட மகேஸ்வரனுடன் மனோகரனும் பார்த்தீபனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் ஊடகங்கள் நேற்று பிரதான செய்தியாக இந்த விடயத்தை வெளியிட்டிருந்தனர். டென்மார்க் தமிழர்களின் இந்த நடவடிக்கையால் சிறிலங்கா சனாதிபதியின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சகல ஊடகங்களும் தெரிவித்திருந்தன.

டென்மார்க் ஊடகங்கள் பிரதான செய்தியாக டென்மார்க் தமிழர்களின் மனிதநேய நடைப்பயணம் மற்றும் அனைத்துலக நீதிமன்றில் டென்மார்க் தமிழர் பேரவை தொடரவிருக்கும் வழக்கை பிரசுரித்த பொழுதும் தமிழ் ஊடகங்கள் இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்திருந்தன. மாற்றாக பதிவு மற்றும் சங்கதி போன்ற ஊடங்கள் மட்டும் தொடர்சியாக டென்மார்க் தமிழர்களின் செய்திகளை பிரசுரம் செய்திருந்தன.

ரோம் உடன்படிக்கை