செய்திகள் தமிழீழம்

தந்தை செல்வா நினைவுத் தூபி சிங்கள “சுற்றுலாப் பயணி”களினால் சேதமாக்கப்பட்டுள்ளது

யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது அங்கு அலங்கரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் யாவும் வெட்டி எறியப்பட்டுள்ளன. முற்றுமுழுதான உச்ச பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பல தரப்பிலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே யாழ் பொதுசன நூலகத்திற்கு சென்றிருந்த சிங்கள சுற்றுலாப்பயணிகள் பொதுசன நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தமை தெரிந்தண்து. சம்பவத்தின் போது நூலகத்தின் புத்தகங்கள் பலவும் எடுத்து வீசப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அமைந்திருந்த அலங்கார மரங்கள் யாவும் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன. சிங்கள “சுற்றுலாப் பயணிகள்” கும்பலே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையில் இருந்து யாழ் செல்கின்ற சிங்கள “சுற்றுலாப் பயணிகள்” தங்குவதற்கு போதிய தங்குமிட வசதிகள் இன்மையால் துரையப்பா விளையாட்டரங்கப் பகுதிகளில் தங்க வைப்பட்டுள்ளனர். அதேபோன்று நாவற்குழியிலுள்ள அரச களஞ்சியத்திலும் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இரண்டு அரச கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்று அதிகாலை அந்த நினைவுத் தூபிப்பகுதியிலுள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. நீண்டகால யுத்த நடவடிக்கைகளின் போது பெரும் அழிவுகளை எதனையும் சந்தித்திராத தந்தை செல்வா நினைவுத் தூபிப்பகுதி தொடர்ச்சியாக தமிழ் மக்களால் மதிக்கப்படுகின்ற ஒரு பகுதியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.