கட்டுரைகள்

தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்-அனலை நிதிஸ் ச. குமாரன்

கோடான கோடி இதயங்களில் குடிகொண்டு மரணத்தையே வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் வேங்கைகளே மாவீரர்கள். கடந்த வருடத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் மரணித்த மாவீரர்களின் கனவு ஒருபோதும் அழிந்துவிடப்போவதில்லை. உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இவர்களை நெஞ்சில் நிறுத்தி பூசித்து வழிபட வேண்டும். தமக்காக வாழாது தமது தேசத்தின் விடியலுக்காக தமது உன்னதமான உயிர்களை துறந்த இந்த வேங்கைகள் மறக்க முடியாதவர்கள். விடுதலைப்புலிகளினால் கடந்த வருடமும் இந்த வருடமும் மாவீரர் வார நிகழ்வுகளை நடத்த முடியாது இருந்தாலும் நிச்சியம் ஒவ்வொரு தமிழனும் புலியே என்பதை உணர்ந்து நவம்பர் 21 முதல் 27 வரையான ஒருவார காலப்பகுதியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடத்தவேண்டுமென்பதே தாயக விடுதலைக்காக மரணித்தவர்களுக்கு செய்யும் மரியாதை.

தமிழீழத்திற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்கள் நாள் நவம்பர் 27-ஆம் தேதி முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த வருடம் கடைப்பிடித்து தமிழர்களை அழித்தொழிக்க கங்கணம் கட்டி செயற்படும் சிறிலங்கா அரசிற்கு தகுந்த பாடம் கற்பிக்க தமிழினம் உறுதியேற்க வேண்டும். சிங்கள அரசு வியக்குமளவு உலகத்திமிழினம் மாவீரர் நிகழ்வுகளை நடத்தி அவர்களை நினைவு கூரப்படுவதனால் தமிழர்கள் என்றென்றும் தமது போராட்டத்தை கைவிடத் தயாரில்லை என்பதை ஓங்கி ஒலிக்கச்செய்யலாம். போராட்ட வியூகங்கள் மாறலாம் ஆனால் போராட்டம் ஒருபோதும் திசை மாறாது என்று புலிகளின் தலைவர் கூறிய கூற்று மிகச் சரியானதே.

போர் ஓய்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் சிறிலங்கா அரசு தமிழர் தாயகத்தின் மீது முன்னர் எப்பொழுதுமில்லாத இனச்சுத்திகரிப்பு வேலையைச் செய்கிறது. புலிகளின் இராணுவ பலம் வெளிப்படையாக இருந்த காலப்பகுதிகளில் மறைமுகமாக செய்யப்பட்ட வேலைகளை இன்று வெளிப்படையாகவே செய்கிறார்கள். இதற்கு துணைபோகின்றார்கள் பல தமிழ்த்துரோகக் கும்பல்கள். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு கல்லறை கட்டப்பட்ட இடங்கள் இன்று தரைமட்டமாக்கப்பட்டு இராணுவ முகாம்கள் மற்றும் காவல்துறை அலுவலகங்கள் கட்டப்படும் நிலை. மாவீரரான போராளிகளையும் ஓய்வெடுக்க விடாமல் தட்டி எழுப்பிவிடுகின்றது சிங்கள இனவெறி அரசு.

மாவீரர்களின் புகழ்பாடும் வரலாறு

ஈழப்பிரதேசம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் விடுதலைக்காக மாண்ட போராளிகளை போற்றவென ஆரம்பிக்கப்பட்டதே மாவீரர் வாரம். 1989-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990-ஆம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள் எங்கள் வீரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்கப் புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூறப்பட்டது. அந்த வகையில் மாண்ட இந்தக் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே அவர்களை உறங்கவைத்து, அழகு பார்த்து அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள் நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.

வடமராட்சி கம்பர்மலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சத்தியநாதன் என்ற சங்கர் நவம்பர் 27, 1982-இல் முதல் மாவீரரானார். இவரின் ஏழு ஆண்டுகளின் மரணத்தின் பின்னரே முதன் முதலில் நவம்பர் 27, 1987-லில் இருந்தே மாவீரரை நினைவு கூரும் முகமாக புலிகளினால் கடைப்பிடிக்கப்பட்டது. ஏறத்தாள அறுநூறு புலிப்போராளிகளின் முன்னிலையில் அடர்ந்த முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் நிதிகைக்குளம் என்னும் இடத்திலேயே நினைவெழுச்சிகள் நடைபெற்று புலிகளின் தலைவர் முதன்மைச் சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தினார். ஆரம்பத்தில் முன்று தினங்களாக இருந்து பின்னர் ஏழு தினங்களாக பிரகடனப்படுத்தபட்டு வெகு சிறப்பாக நவம்பர் 27, 2008 வரை கொண்டாடப்பட்டது. புலிகளின் ஆயுதங்கள் மே 2009-இல் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு புலம்பெயர் தமிழர்களினாலும் தமிழ்நாட்டு இனமானத் தமிழர்களினாலும் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு புலம்பெயர் தமிழர்களிற்கிடையே இருக்கும் பல முரண்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாடப்படுகின்றது. ஒரு பிரபாகரனோ அல்லது பத்துப் பிரபாகரனோ சாவதால் ஈழப்போராட்டம் அழிந்துவிடப் போவதில்லை. இதனை மறந்தே சிங்கள அரசு தனது காய்நகர்த்தலை மேற்கொள்கிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரின் அரசியல் அபிலாசைகளை சமாதான வழியில் போராடிய தமிழர் தலைமைகளுடன் பேசி சுமூகமாக பிரச்சினையைத் தீர்த்திருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒரு மனிதன் இருக்கிறார் என்று உலகத்திற்கே தெரியாமல் போயிருக்கும். ஆனால், சிங்கள அரசு அதனை செய்யத்தவறியதன் காரணமே வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுத வழிப் போராட்டம். இனியேனும் அவர் வழிப் போராட்டம் மீண்டும் எழாமல் இருக்க வேண்டுமென்றால் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் நிச்சயம் ஒரு பிரபாகரனல்ல ஆயிரம் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சியம். இப்படியாக ஈழத்தமிழரின் போராட்டம் இருக்கையில் மாண்ட போராளிகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாகவே தான் பிரபாகரனால் அன்று மாவீர் நிகழ்வுகளை ஒவ்வொரு வருடமும் நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது.

துயிலும் இல்லங்களின் மகிமை

தமிழரின் விடுதலையை நெஞ்சில் சுமந்து மாண்ட மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் கட்டும் வேலைகள் 1990 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் தொடங்கினாலும் 1991-ஆம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக துயிலும் இல்லத்தினை வரைந்து மாதிரி செய்து கொண்டிருந்தார். அதன்படியே கட்டுமானப் பணிகளை போராளிகள் மக்கள் என அனைவரும் ஆரம்பித்தனர்.

இவ்வாறு அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட இல்லங்களில் ஏற்கனவே சண்டை நடந்த இடங்களில் புதைக்கப்பட்ட மாவீரர்களை அகழ்ந்தெடுத்து புதிய இல்லங்களுக்கு கொண்டுவரும் முடிவுகளும் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய இராணுவக் காலப்பகுதியில் சண்டைகளில் மாண்டுபோன, அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்ட மாவீரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கோப்பாய், வடமராட்சி, மற்றும் வன்னி ஆகிய இடங்களில் துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டனர். ஆரம்பத்தில் பிராந்தியங்களுக்கு ஒரு துயிலும் இல்லமாக இருந்து பின்னர் மாவட்டங்களுக்கு ஒன்று என விரிவாக்கபட்டது. பின்னர் மேலும் பல இல்லங்கள் பிரதேச ரீதியாக அமைக்கபட்டது.
முதன் முதலில் நடாத்தப்பட்ட மாவீரர் நிகழ்வில் அதாவது 1989-ஆம் ஆண்டு மாவீரர் நாளில் நினைவு கூரப்பட்ட 1657 மாவீரர்களது வித்துடல்களை துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரும் பணிகள் 1991-இல் தொடங்கப்பட்டாலும் 2005-ஆம் ஆண்டுவரை அவை முற்றாக இடம்பெறவில்லை என்று கூறுகின்றார்கள் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள்.

பல போராட்டங்களின் ஊடாக உருவாக்கப்பட்ட மாவீரர் இல்லங்கள் இன்று சிங்கள படைகளினால் தரைமட்டமாக்கப்படுகின்றன என்பதை கேட்டு கதறுகின்றார்கள் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள். துயிலும் இல்லங்கள் பக்கமே போக கதிகலங்கி நின்ற படையினர் இன்று புலிகள் அழிக்கப்பட்டு விட்டதென்ற மமதையில் அரக்கத்தனமான வேலைகளை செய்கின்றார்கள். எதிரியாக இருந்தாலும் இறந்தவரின் உடலை அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற உலக மரபு இருந்தும் புலிகளின் இறந்த போராளிகளின் உடல்களை தெருத்தெருவாக இழுத்துச்சென்று அசிங்கப்படுத்தி உலக மரபையே மீறினது சிங்கள அரச படைகள். இப்படிப்பட்ட படையிடமா துயிலும் இல்லங்களின் மகிமை என்னவென்று கேட்கமுடியும். கேட்பதும் மகா தவறு.

முப்பதாண்டு காலப் போராட்டத்தில் 25,000-க்கும் அதிகமான மாவீரர்களைத் தமிழீழம் இழந்திருக்கிறது. இவர்களின் இழப்பு தேசக் கட்டுமானத்துக்கான விதைப்பாகவே தமிழர்கள் கருதி வந்துள்ளார்கள். முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக இந்த மாவீரர்கள் பட்ட துன்பங்கள்,துயரங்களை எவராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாதவை. மரணத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பண்பும் மரணத்துக்குச் சவால் விட்டு இலக்கைத் தேடிய பண்பும் இவர்களுடையது.

தமிழ்மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இந்த மாவீரர்களைக் காலம் காலமாக நினைவு கூர்ந்து பூசிக்க வேண்டியது தமிழர்களாய் பிறந்த அனைவரினதும் கடமை. ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ்மக்களைப் பாதுகாத்தும் அவர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்தும் எத்தனையோ விதங்களில் அவர்கள் செய்து விட்டுப் போன பணிகளுக்காக நன்றிக் கடனைச் செலுத்தும் வாரம் தான் இந்த மாவீரர் வாரம்.

தாயகத்தில் மாவீரர்களின் எந்தவொரு அடையாளச் சின்னத்தையும் இல்லாமல் செய்து விடுவதில் சிங்களப் பேரினவாதம் வெற்றி கண்டுள்ளது. தாயகத்தில் இருந்த அத்தனை மாவீரர்களின் நினைவாலயங்களும் அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்டு விட்டன. ஈழத்தில் மாவீரர்களை நினைவு கூருவதற்கு சிங்களப் பேரினவாத அரசு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இந்தக் கட்டத்தில் மாவீரர்களை நினைவு கூரும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் மானத்தமிழ் மக்களிடம் தான் உள்ளது. மாவீரர்களின் வரலாற்றைக் கட்டிக் காப்பது தொடக்கம் மாவீரர் நாள் பாரம்பரியங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பும் இவர்களுடையதே. இதற்கு ஒன்றுபட்ட வேலைத்திட்டங்களே அவசியம்.

ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் தமிழரின் வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். தமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். தமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள். இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக தமிழரின் இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு லட்சியவாதி. ஓர் உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய விடிவுக்காகவும் விமோசனத்திற்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன் வாழ்க்கை உன்னதமானது; அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத லட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான்.எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று பிரபாகரன் பெருமிதத்துடன் கூறினார். இவரின் கூற்று பொய்யாகிவிடக் கூடாது.

எதிரியானவன் களத்தில் அரக்கத்தனமான வேலைகளை செய்யும் அதேவேளையில் புலத்திலும் பல நாசகார வேலைகளைச் செய்யும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளான். சில ஈனத் தமிழர்களும் அவனுக்கு விலைபோய் விட்டார்கள். எட்டப்பனை அடையாளம் கண்டு அவனுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடத்தை அளித்து சிங்கள அரசின் முகத்திரையை கிழிக்கும் முகமாக வேலைத்திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த வருடம் இடம்பெறும் மாவீரர் வாரத்தினூடாக எதிரியின் முகத்தில் கரியை பூசும் வண்ணமாக புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மாவீரர் வாரத்தை நடாத்தி தமிழினம் கோழையல்ல என்பதை உணர்த்த வேண்டும். தமிழினம் புலிக்கொடியை இன்றல்ல நெற்றல்ல பல நூறு ஆண்டுகளிற்கு முன்னரே ஏற்றுக்கொண்டவர்கள். தமது தன்மான புலிக்கொடியுடன் கப்பல்களில் இந்திய சமுத்திரத்தில் வலம் வந்தார்கள். கடல் வழியாகச் சென்று சில நாடுகளை ஆண்டதுடன் உலக நாடுகளுடன் வணிகம் செய்தார்கள். இப்படிப்பட்ட பாரம்பரிய நாகரிகத்தை கொண்ட இனமே தமிழினம் என்பதை உலகத்திற்கே உணர்த்த வேண்டும். வீழ்ந்த புலிக்கொடியை மீண்டும் பறக்க விட மாவீரரை நெஞ்சில் நிறுத்தி நிகழ்வுகளை செய்வதனூடாக எழுச்சிபெற வைக்க முடியும். இதனூடாக தமிழினத்தின் எதிரிகளுக்கு தக்க பாடத்தை கற்பிக்க முடியும்.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்களை கட்டுரையாளர் வரவேற்கின்றார். தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com