கட்டுரைகள்

பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட ராஜதந்திரமும் தேசியக்கொடியும்-பாகம்.2- ஜனகன்

எங்களுக்கும் சர்வதேசத்துக்குமான தொடர்பாடலிலும்,ராஜதந்திர நகர்வுகளிலும் தேசியக்கொடி ஒரு முட்டுக்கட்டையாகவும்,தடையாகவும் இருப்பதுபோலவே எங்களில் சிலர் எண்ணத்தலைப்பட்டுவிட்டனர். எங்களுக்குள் நாங்கள் அறியாமலேயே உள்புகுந்திருக்கும் அதிகாரவர்க்கத்துடன் எதிராடும் தன்மையற்ற நிலைமை என்பது வெறுமனே இன்றோ நேற்றோ தோன்றியதல்ல. நானூறுஆண்டுகால காலனித்துவ ஆட்சிக்குக்கீழ் வாழ்ந்த தலைமுறைகளின் தொடர்ச்சிதான் நாம். வளைந்து கொடுப்பதுதான் உயரிய அரசியல்தரம் அல்லது உச்சஅரசியல்வழிமுறை என்ற எண்ணங்கள் எமது திசுக்களினுள்ளும், மூளைமடிப்புகளினுள்ளும் பலநூற்றாண்டுகளாக கொஞ்சம்கொஞ்சமாக ஏற்றப்பட்டுள்ளது. அதனால்தான் இன்னமும் எமது தேசியக்கொடிக்கான எமது உரிமையை, பிறப்புரிமை என்று சாசனங்கள் கூறும் அந்த உன்னத உரிமையை நிலைநாட்டாமல் கொடியை பிடிப்பதா? வேண்டாமா? என்ற வெட்டித்தனங்களிலும், திண்ணைவிவாதங்களிலும் காலங்களித்துக்கொண்டு இருக்கின்றோம்.

முதலில் இந்த புலிக்கொடி எமது தேசியக்கொடியாக ஏதோ ஒரு அமைப்பின் தோற்றத்துடனோ, அதன் பிரகடனத்துடனோ தோன்றியது அல்ல. இது தேசியக்கொடியாக நாம் முழுதாக ஏற்றுக்கொண்டதன் பிண்ணணியில் ஈழத்தமிழினம் சிறீலங்காவின் சிங்கக்கொடியை முழுதாக நிராகரித்து வந்த நீண்டவரலாறு நிற்கிறது. பொதுவாகவே இந்த காலனி ஆட்சிக்காலங்களின் போதே ஆசியாவில் நாடுகளின் எல்லைகளும், வரையறைகளும் அதற்கான கொடிகளும் தோற்றம் பெற்றன. இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொள்ள இருந்த சமயத்தில் கூட தமிழர் தரப்பு தமக்கான கொடியாக நந்திக்கொடியை பிரித்தானியரிடம் கோரிய வரலாற்று சான்றுகள் உள்ளன. அதன் அர்த்தம் தமிழர்கள் பிரித்தானியர் வெளியேறும் போது கூட அவர்களிடம் சிங்கக்கொடியை தாம் முழுதாக ஏற்கமுடியாது என்பதை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் இந்த கோரிக்கைகள் எதையும் ஏற்க மறுத்த
காலனி ஆட்சியாளர்கள் சிங்களவர்களின் கொடியாக கருதப்பட்ட சிங்கக்கொடியினுள் சிறுபான்மையினருக்கு என்று இரண்டு வர்ணங்களை ஏற்படுத்தி ஒரு முழு இலங்கை மக்களையும் அடையாளப்படுத்தும் கொடியாக தாம்கருதி உருவாக்கினர். ஆனால் சிங்களம் தனது ஆழ்மனத்தினுள் புதைந்திருந்த தமிழர் விரோத கருத்துருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவே தமது சிங்கக்கொடியை வடிவமைத்திருந்தனர். தமிழினத்துக்கு எதிரான வன்மமும், விரோதமும் சிங்களத்தின்
ஆழ்நம்பிக்கைகளுக்குள் புதைந்து கிடக்கிறது. அந்த ஆழ்நம்பிக்கைகளே சிங்களத்தின் கொடியாகவும், அதன் அடக்குமுறையாகவும், உச்சமான இனப்படுகொலையாகவும் வெளிப்படுகிறது.

இலங்கை முழுவதுக்குமான தேசியக்(?)கொடியாக சிங்கக்கொடி பிரகடனப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாததோடு, அதனை நிராகரிப்பதாக காட்டும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டே வந்துள்ளார்கள். சிங்கக்கொடியை நிராகரித்தல் என்பது தமிழர்களின் விடுதலைக்கான தேடலின் ஒரு முதல் அடையாளமாகவே நிறுவப்பட்டது. தேசியத்தலைவரின் முதலாவது செயற்பாடாக ஈஸ்வரலிங்கம் என்பவரின் வீடடில் கட்டப்பட்டிருந்த சிங்கக்கொடியை
அகற்றிய நிகழ்வே இருந்திருக்கிறது. அதைப்போலவே தமிழினத்தின் மிகப்பெரிய வீரனும், தளபதியுமான சீலன் சிங்கள ஆட்சியை நிராகரிக்கும் முதல் செயற்பாடாக அவன் கல்விகற்ற திருமலை பாடசாலையில் ஏற்றப்பட்ட சிங்கக்கொடியை எரித்த வரலாறே நிமிர்கிறது. இத்தகைய உதாரணங்கள் ஒரு தினசரி நிகழ்வாக காலகாலமாக தமிழர்நிலம் எங்கும் சிங்கக்கொடிக்கு எதிர்ப்பாகவலுத்தது.

சிங்களத்தின் அடக்குமுறைகளும், இனப்பாகுபாடுகளும், இனப்படுகொலைகளும் தொடரத்தொடர தமிழர்களின் தேசியஎழுச்சியும், தேசியவிடுதலைக்கான போராட்டமும் அதற்கூடாகவே வளர்ந்தது. தமிழர்களின் இனஎழுச்சியின் அடையாளமாகவும், விடுதலைக்கான ஒருமித்த மையமாகவும், தமிழர்கள் தவமிருக்கும் தாயகத்தின் கொடியாகவும், தமிழர்களின் பாரம்பரிய வீரத்தினதும், பலகாலத்துக்கு முன்னர் தமிழரின் பேரரசு ஒன்றை நிறுவி ஆட்சிசெய்த சோழகாலத்தின் கொடியாகவும் இருந்த புலியை நினைவுபடுத்தும் கொடியாக தமது தேசியக்கொடி ஒன்றை ஈழத்தமிழர்கள் பிரகடனப்படுத்திய வரலாறு இதுதான்.

இலங்கைத்தீவின் ஒடுக்குமுறைகள் நிறைந்த ஒற்றை ஆட்சிமுறைக்கு எதிரான தமிழர்களின் சுயநிர்ணயஉரிமைப் போராட்டத்தின் குறியீடான எமது தேசியக் கொடியை ஒரு பயங்கரவாதத்தின் குறியீடாக எமது எதிரியும் எதிரிக்கு முண்டு கொடுக்கும் சக்திகளும் எப்போதும் சித்தரித்தே வந்துள்ளார்கள். இனியும்அதையே தொடரவும் செய்வார்கள். ஆனால் பயங்கரவாதத்துக்கெதிரான உலகப்போர் என்று மேற்குலகமும் அதன் கூட்டுநாடுகளும் புறப்படுவதற்கு முன்னரேயே விடுதலைப்புலிகளை மேற்குலகமும், மற்றைய நாடுகளும் தடைசெய்வதற்கு முன்னரேயே 27.11.1990 அன்று தமிழீழத்தின் தேசியக்கொடியாக எமது கொடி பிரகடனப்பட்டுவிட்டது. எப்போதுமே, புரட்சிக்கான, விடுதலைக்கான ஒரு முண்ணணி அமைப்புத்தான் அந்த தேசிய கொடியை தீர்மானிக்கும். உலகவரலாறு முழுவதும் இதுவே காணப்படுகின்றது.

இதன்அடிப்படையில் 27.11.1990ல் விடுதலைப்புலிகள் அமைப்பு பிரகடனம் செய்த கொடிதான் எமது தேசியக்கொடியாக அமைகிறது. அதன்பிறகு வந்த உலக அரசியல், மாற்றங்களினால் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டபோதும் அதற்கு பத்துஆண்டுகளுக்கும் மேலாக நிறுவப்பட்டுவந்த தேசியக்கொடி தடைசெய்யப்பட எந்தவொரு காரணமும் இல்லை.

விடுதலைப்புலிகள் இந்தக்கொடியை தேசியக்கொடியாக பிரகடனம் செய்தபொழுதில் மிகத்தெளிவாக சொன்னார்கள், “விடுதலைப்புலிகளின் அமைப்புக்கொடிக்கும், அதன் ராணுவ அணிகளின் கொடிகளுக்கும் மேலாகவே இந்தக்கொடி கட்டப்பட வேண்டும்” என. இதன்மூலம் இந்தக்கொடி ஒரு அமைப்பினதோ அதன் ராணுவ கட்டமைப்பினதோ கொடி என்ற பார்வையை அப்போதே உடைத்தெறிந்தனர்.

விடுதலைப்புலிகளின் ராணுவக்கட்டமைப்பின் ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் ஒவ்வொரு தனிக்கொடிகள் உண்டு. சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு, மாலதிபடைப்பிரிவு, இம்ரான்படைப்பிரிவு, ஜெயந்தன் படைப்பிரிவு, கடற்புலிகள்அணி, கிட்டுபீரங்கிபடையணி என்று எல்லாவிதமான படைப்பிரிவுகளுக்கும் தனிக்கொடிகள் உள்ளன.

ஆனால் அவர்களால் தேசியக்கொடியாக அறிவிக்கப்பட்ட கொடியானது அவை எவற்றுடனும் தொடர்பானது அல்ல. அது தனித்தன்மை வாய்ந்தது. விடுதலைப்புலிகளின் தடையும், பயங்கரவாத பட்டடியலில் அவர்களை இணைத்ததும் அவர்களின் ராணுவக்கட்டடைப்பின் கொடிகளை வேண்டுமானால் சட்ட
விரோதமாக்க முடியலாமே தவிர தேசியக்கொடியை தடுக்கமுடியாது.

இதை எமது தேசியக்கொடியாக ஏற்றுக்கொண்டுதான் பேச்சுவார்த்தை மேசைகளில் இந்தக்கொடிக்கு சிங்கக்கொடியுடன் சம இடம் வழங்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுயநிர்வாக தலைநகராக கருதப்பட்ட கிளிநொச்சிக்கு வந்து சென்ற சர்வதேசநாடுகளின் தூதர்களும், அமைச்சர்களும், முக்கியமானவர்களும் இந்த தேசியகொடி ஏற்றப்பட்ட மண்டபங்களில்தான், இந்தத்தேசியக்கொடிக்கு முன்பாகத்தான் பேசியும்
உடன்பாடுகளும், உறுதிகளும் செய்தனர். அந்தப்பொழுதிலேயே எமது தேசியக்கொடி மௌனமாகவும், உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

எமது தேசியக்கொடியின் பிரகடனத்தில் இருக்கும்,:

“தேசியசுதந்திரத்தை வேண்டிநிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்திற்கு ஒரு தேசியக்கொடி இன்றியமையாதது ஆகும்.”

 “தேசியதனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக்கொடி சித்தரித்துக்காட்டுகிறது.”

“தேசியத்தின்மீதான ஆழமான விருப்பமாகவும் அது திகழ்கிறது”

“அரசியல் சுதந்திரத்தின் ஆணிவேரான குறியீடாகவும் தேசியக்கொடி அமைகிறது”

போன்ற வாசகங்கள் சொல்லிநிற்கும் அர்த்தங்களை மற்றவர்களும், மேற்குலகும் எவ்வளவுதூரம் புரிந்துகொள்கிறார்கள் என்பதிலும்பார்க்க அவற்றை நாம் எவ்வளவு ஆழமாக தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

2008ல் கனடாவின் ஜோர்க் பல்கலைக்கழகத்தின் பல்லின கலாச்சார நிகழ்வின் போது சிங்களவரை அடையாளப்படுத்தும் சிங்கக்கொடியுடன் தமிழீழத்தவரை அடையாளப்படுத்தும் எமது தேசியக்கொடியான புலிக்கொடியும் ஏற்றப்பட்டிருந்ததுபோல இனிவரும் காலங்களில் எமது அடையாளமாக இந்தக்கொடியே எங்கும் ஏற்றப்படும் நிகழ்வுகள் எழவேண்டும்.

நாம் சிங்கள பேரினவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போதில்லையென்ற பிரகடனத்தின் வெளிக்காட்டலாக எப்போதும் எமது தேசியக்கொடியே காட்டப்படவேண்டும்.

2007ல் அவுஸ்திரேலியாவில் உலககிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டிநடைபெற்றுக் கொண்டிருந்தபோது யாரோ ஒரு தமிழ்மகன் ஏந்திய தேசியக்கொடியுடன் நடுமைதானத்தில் இறங்கி ஓடினானே அவன் செய்ததும் நடாத்தியதும் ஒருவகையில் ராஜதந்திரம்தான்.

இதோ ஐந்து நாட்களுக்கு முன்னர் இலங்கைத்தீவு முழுவதும் சிங்கக்கொடி ஏற்றி மகிந்தாவின் பதவியேற்பை அங்கீகரித்த போது ஊர்காவற்துறையின் தம் பாட்டிப்பகுதியில் எழுந்து நின்றனவே தமிழீழதேசியகொடிகள் அவை ஏற்படுத்திய ராஜதந்திரதாக்கங்கள் நாம் மண்டபங்களினுள்ளும், வட்டமேசைகளிலும் இருந்து ஏற்படுத்தும் ராஜதந்திர கூழைக்கும்பிடுதல்களைவிடவும் மிகப்பெரிது.

தேசியக்கொடியை துறந்துவிடு நாம் எதையும் தருகிறோம் என்று எவரும் கூறிவிடவில்லை. அப்படிக்கூறவும் எவருக்கும் அருகதை இல்லை.

இந்த ஒன்றை துறப்பதும், மறைப்பதும் எல்லாவற்றையும் பறிகொடுப்பதற்கு சமம்.!

இதன் நிழலிலேயே எல்லாவித நகர்வுகளையும் செய்யப்பழகுவோம்.!

இதன்பிண்ணணியிலேயே யாருடனும் கைகுலுக்கவும், யாருடனும் பேசவும் தொடங்குவோம்.!

இதன் பெயரிலேயே எமது ஆதரவுகளையும், அதைவிட எதிர்ப்புகளையும் வெளிப்படுத்த எழுவோம்.!

(ஜனகன் எழுதிய இந்தஆக்கம் 19.11.2010 ஈழமுரசில் வெளிவந்துள்ளது)

பிழையாக விளங்கிக்கொள்ளப்பட்ட ராஜதந்திரமும் தேசியக்கொடியும்-பாகம்.1