பிரித்தானிய தமிழ் ஊடகவியலாளர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது

Home » homepage » பிரித்தானிய தமிழ் ஊடகவியலாளர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது

இலண்டனிலிருந்து செயற்படும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தனது குடும்பத்தினரைப் பார்வையிடுவதற்காக நாடு திரும்பிய வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இனந்தெரியாத இடமொன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கதிரேசு திரிலோகசந்தர் என்ற 37 வயதான ஊடகவியலாளரே நேற்று முன்தினம் (புதன்கிழமை) விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய கடவுச்சீட்டை வைத்துள்ள இவர் எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என ஐரோப்பாவிலிருந்து செயற்படும் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்திருக்கின்றது.

திருலோகசுந்தர் முன்னர் இலண்டனைத் தளமாகக் கொண்ட தீபம் தொலைக்காட்சி, ஜி.ரி.வி. என்பவற்றில் பணிபுரிந்தவர். தற்போது இலண்டனிலிருந்து செயற்படும் ஐ.பி.சி. வானொலியில் ஒரு முழுநேர ஊடகவியலாளராகப் பணிபுரிபவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னரும் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இவர், கடும் சுகவீனமடைந்திருக்கும் தன்னுடைய தாயாரைப் பார்வையிடுவதற்காக செல்லும் போதே விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இவரை விடுதலை செய்வதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


%d bloggers like this: