இந்தியா

தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் – பழ. கருப்பையா

கணினிப் பயன்பாட்டில் தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்த “TAMIL ALL CHARACTER ENCODING 16″ மென்பொருளில் ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை முதலில் கவனிக்காமல் இருந்துவிட்டு, அப்புறம் ஏன் இப்போது பின்வாங்குகிறார் முதல்வர்

கருணாநிதி” என்று கேட்கிறது ஒரு குரல்!

ஆகா…! முதல்வர் காலம் க்டந்தாவது தமிழ் குறித்து நல்லறிவு பெற்று, எதிர்க்கவேண்டிய வட மொழி எழுத்துகளை எதிர்திருக்கிறாரே என்று களிப்பேருவகை அடைந்தோம்!

கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய மடல் ஏகெனவே தமிழ் ஒருங்குறியில் உள்ள, ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் ஐந்து எழுத்துகள் குறித்தவை அல்லவாம். இவைபோல் இன்னும் 26 கிரந்த எழுத்துக்களைத் தமிழ் ஒருங்குறியில் சேர்க்கவேண்டும் என்கிறார்களாம் டெல்லியில். அது குறித்துத்தான் கருணாநிதி, அதுவும் “யோசித்து முடிவெடுக்கலாம்” என்று தயவாகத்தான் எழுதி இருக்கிறாராம்!.

ஜ, ஷ போன்ற ஏந்து கிரந்த எழுத்துகள் ஏற்கெனவே இருந்து வருபவை என்பதால், கருணாநிதியும் அவர் வைத்திருக்கிற தாள வாத்தியத் தமிழறிஞர்களும் அதை எதிர்க்காமல் மறந்திருப்பார்கள் போல.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழி எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை ஏற்றவன் தொல்காப்பியன்!

இந்த எழுத்துகள் எந்தக் காலத்திலும் தமிழால் ஏற்கப்படவில்லை. பல்லுக்குள் மாட்டிக்கொண்டுவிட்ட தேவையற்ற சக்கைகளை நாக்குத் துழாவி வெளியே தள்ளிவிடுவது போல, தமிழ் இந்த வட மொழி வல்லோசைகளைக் காலங்காலமாக வெளியே தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது! ஆனால், வடமொழி வழக்கிழந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அதனுடைய ஆக்கிரமிப்பு முயற்சி மட்டும் ஓயவில்லை!

ஜ, ஷ, க்ஷ், ஸ, ஹ போன்ற ஓசைகள் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு வருபவை! அப்படி அடிவயிற்றில் இருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசுவதற்குத் தமிழன் உடன்படவில்லை.

மூச்சை இழுப்பதும் விடுவதும் எப்படி எந்த முயற்சியுமின்றி இயல்பாக நடக்கிறதோ, அப்படியே பேசுவதற்கும் எந்தப் பாடும் கூடாது என்று கருதியே மொழியை வடிவமைத்தான் தமிழன்!

ஜ, க்ஷ என்பன போன்ற எழுத்துகளின் மீது நமக்கு உள்ள பகைக்குக் காரணமே, அந்த ஓசைகளோடு நம்முடைய மொழிக்கு உள்ள பொருந்தாமைதான். அந்த ஓசை தமிழின் அடிப்படைக்கு மாறானது என்னும்போது, அந்த எழுத்துகள் தமிழுக்கு எதற்கு?

ஒருவேளை தவிர்க்க இயலாமல் வட சொற்கள் தமிழுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டால், செருப்பைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வருவதுபோல, வடமொழி தனக்குரிய ஓசையை களைந்துவிட்டுத் தமிழோசையை ஏற்றுக்கொண்டுதான் தமிழுக்குள் நுழையவேண்டும் என்று கட்டளை விதித்தான் தொல்காப்பியன்! “வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ” என்பது அவனுடைய கட்டளை நூற்பா!

கம்பன் கையைக் கட்டிக்கொண்டு தொல்காப்பியனுக்கு கட்டுப்பட்டானே! விபீஷணனை வீடணன் என்றும் லக்ஷ்மணனை இலக்குவன் என்றும் மாற்றிவிட்டானே!

என்னுடைய தாயார் “ஜனங்கள்” என்று சொல்ல மாட்டார்கள்…”சனங்கள்” என்றுதான் சொல்லுவார்கள். “பஸ் ஸ்டாண்டு” என்று சொல்ல வராது; “காரடி” என்பார்கள்.

ஒரு நாள் தாயாரிடம் கேட்டேன்: “ஏன் ஆத்தா! காரடியை எப்படி கண்டுபிடித்தாய்?” “தேர் நிற்கிற இடம் தேரடி என்றால், கார் நிற்கிற இடம் காரடிதானே?” என்றார். அவர் 78 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஜ, க்ஷ, ஷ-வை எல்லாம் அவர்களின் நாக்கு உச்சரித்தது இல்லை. எல்லாத் தாய்மார்களும் இப்படித்தான்! அப்படியானால், யாரின் தேவையை நிறைவு செய்ய இந்த ஐந்து கிரந்த எழுத்துகளையும் எதிர்க்காமல் முதல்வர் கருணாநிதி விட்டுவிட்டார்? “அவை பழகிவிட்டன; முன்பே உள்ளன” என்கிறார்.

தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத் துணை வேந்தர் இராசேந்திரன்! யாருக்கு பழகிவிட்டது? தொல்காப்பியனுக்கா? வீதியிலே கீரை விற்றுக்கொண்டு போகிறாளே முனியம்மா… அவளுக்கா?

“தொல்காப்பியப் பூங்கா” என்னும் நூலைக் கருணாநிதிதானே எழுதினார்? தமிழுக்கு அவன் போட்ட சட்டங்கள் கருணாநிதிக்குப் பிடிபடாதவையா?

ஜ, க்ஷ போன்ற ஐந்து கிரந்த எழுத்துகளையே வெளியே தள்ளு என்றால், மேற்கொண்டு 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்கிறதே ஒரு கூட்டம்! இது எவ்வளவு பெரிய சதி?!

தமிழுக்கே உரித்தான எ, ஒ, ழ, ற, ன ஆகிய எழுத்துக்கள் வேறு எந்த மொழிக்கும் இல்லாத காரணத்தால், இந்த எழுத்துகளை மட்டும் கிரந்தத்தில் அப்படியே சேர்த்துக்கொண்டு, மீதி தமிழை ஒழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள்!

தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும், தேவநாகரி எழுத்தில் எழுதினால் என்ன என்று கேட்டவர்களை எதிர்கொள்ள என்று அண்ணா இருந்தார்! அந்த முயற்சி தோற்றுவிட்டது. இன்று தெய்வத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தையும் கிரந்த எழுத்துக்களில் எழுத, அடுத்த சதி தொடங்கிவிட்டது! சமக்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய செம்மொழிகள் அனைத்தும் செத்துவிட்டன…தமிழ் மட்டும் வாழ்வதா என்று பொறாமைக்காரர்கள் நினைக்கிறார்கள்! ஐந்து கிரந்த எழுத்துகளான ஜ, க்ஷ உள்ளிட்டவற்றை முதலில் ஒழிக்கவேண்டும். அடிப்படையைத் தகர்த்துவிட்டால், அதற்கு மேல் முயற்சி எடுக்க மாட்டார்கள் அல்லவா!

தொடக்கப் பள்ளி தொடங்கி ஒருங்குறி மென்பொருள் வரை அனைத்திலும் தொல்காப்பியம் சுட்டாத எழுத்துகளைச் சுட்டுவிட வேண்டும்.

அதிகாரம் என்பது எதற்கு? குடும்பத்துக்கு வேண்டியதைச் சேர்த்து, பல தலைமுறைக்குப் பாதுகாப்பு உண்டாக்க மட்டும்தானா?

நன்றி: சூனியர் விகடன்