தமிழீழம்

"மாவீரர் தின செய்திகள் பிரசுரித்தால் உங்களை கொழுத்துவோம்" -யாழில் சிங்களப்படைகள் மிரட்டல்

நாளை 27ஆம் திகதி, தமிழீழ மாவீரர் நாளையொட்டிச் செய்திகளை வெளியிட்டு யாழ்ப்பாண மக்களைக் குழப்ப வேண்டாம் என்று நேற்றிரவு யாழ்ப்பாணப் பத்திரிகைகள் மூன்றுக்கு அனாமதேய மிரட்டல் விடுக்கப்பட்டது.

நேற்றிரவு பத்திரிகைகள் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதுகாப்பு ஊழியரிடம் இது தொடர்பான அநாமதேய மிரட்டல் கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றனர்.

அதில், “தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். இந்த நிலை யைக் குழப்ப நீங்கள் முயற்சி எடுக்க வேண்டாம்.சுயாதீனமாக மக்களுக்குச் செய்தி கொடுக்கும் நீங்கள், இப்போது இருக்கும் சமாதானச்சூழ்நிலையைக் குழப்பும் வகையில் இந்த முறை மாவீரர் நாளுக்கு இயக்கச் செய்தி எதையும் போட வேண்டாம். அப்படிப் போட்டால் உங்கள் அலுவலகம் கொளுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எழுத்துப் பிழைகளுடனும் வசனப் பிழைகளுடனும் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதம் குடாநாட்டில் வெளிவரும் 3 பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

“சந்தோசமாக வாழுகின்ற யாழ். குடாநாட்டு மக்கள்” என்ற பெயரிலேயே இந்தக் மிரட்டல் அனுப்பப்பட்டிருந்தது.

தேசியத்தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம், மாவீரர் நாள் ஆகியவைகளை முன்னிட்டு குடாநாட்டில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன. படையினர் நேற்றுப் பல இடங்களில் வீதிச் சோதனை, ரோந்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.