புலம்பெயர்

ஆர்ப்பாட்டத்தில் ஜயலத் ஜயவர்த்தன கலந்து கொண்டதாக தகவல் வழங்கிய பிரித்தானிய வாழ் தமிழ் பெண்மணி

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டனுக்கு விஜயம் செய்திருந்த போது Heathrow விமான நிலையத்தில் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கலந்து கொண்டதாக இலண்டனில் வாழ்கின்ற  ராஜேஸ்வரி என்ற தமிழ் பெண்ணே தெரிவித்ததாக கொழும்பு வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகத்தில் கடந்த 2ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில் தமிழின் முன்னணி எழுத்தாளர் எனவும், பெண்ணிலைவாதி எனவும் தன்னைத் தானே கூறிக் கொள்ளும் இப் பெண்மணியும் விசேட அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளார்.

வன்னி போருக்குப் பின் சிறிலங்கா படைத்துறை அமைச்சுடன் தற்போது மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ள இப் பெண்மணி, தான் பரிந்துரைப்பவரை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கும்படி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கவையும் இக் கூட்டத்தின் முடிவில் தனிப்பட்ட முறையில் கேட்டதாகவும் தெரிய வருகின்றது.

சிறிலங்கா படைத்துறை அமைச்சின் அழைப்பின் பேரில் அடிக்கடி கொழும்பு சென்று வருகின்ற இப் பெண்மணி, சிறிலங்கா அரசாங்கத்திற்கு தகவல் வழங்குபவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டனுக்கு விஜயம் செய்திருந்த போது தமிழ் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கலந்து கொள்ளத நிலையில், அவர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக இப் பெண்மணி தகவல் வழங்கியதின் பின்னணி குறித்து இவ் வட்டாரங்கள் பலந்த சங்தேகங்களை வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டனுக்கு விஜயம் செய்த போது ஜயலத் ஜயவர்த்தன இலண்டனில் தங்கியிருக்கவில்லை என்பதை அவரது கடவுச்சீட்டு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன பிரித்தானியாவுக்கு அடிக்கடி விஜயம் செய்வதும், பிரித்தானியாவில் இடம்பெறுகின்ற கருத்தரங்குகள் மற்றும் ஆய்வரங்கங்களில் பங்குபற்றுபவர் என்பதும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.