டென்மார்க்

தமிழ் அரசியல் கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்குமாறு தமிழர் நடுவம் டென்மார்க் கோரிக்கை.

நீண்ட காலமாக தமிழ் அரசியல் கைதிகள் சிறிலங்கா தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் எதிர்நோக்கும் உரிமை மீறல்கள் மற்றும் சித்தரவதைகளுக்கும் எதிராக குரல் கொடுக்குமாறு சித்தரவதைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் டென்மார்க்கில் உள்ள Rehabiliterings og forsknings Centret for Torturofre என்ற அமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான அதிகாரியுடன் சந்திப்பொன்றை நேற்று மேற்கொண்ட தமிழர் நடுவம் டென்மார்க்கின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். RCT அமைப்பு ஆசிய மனித உரிமை அமைப்புடன் இணைந்து செயற்படும் ஓர் அமைப்பாகும். இவர்கள் சித்தரவதைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதுடன் சித்தரவதைக்குட்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு தொடர்பாகவும் செயலாற்றுகின்றனர்.

வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த போதும் படுகொலைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் சி.புலித்தேவன் மற்றும் பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் ஆகியோர் டென்மார்க் வந்திருந்த போது சுஊவு அமைப்புடனும் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்ததை நேற்றைய சந்திப்பில் RCT அதிகாரிகளும் தமிழர் நடுவம் டென்மார்க்கின் பிரதிநிதிகளும் நினைவுகூர்ந்துகொண்டனர்.

2009 ம் ஆண்டு சிறிலங்கா படைகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருந் தொகையான தமிழ் அரசியல் கைதிகள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக உறவினர்கள் கொண்டிருக்கும் அச்சம் தொடர்பாகவும் உரையாடியதுடன் எழுத்து மூலமான கோரிக்கைகளும் கையளிக்கப்பட்டது.

கையளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் 2009 மே மாதம் கைது செய்யப்பட்ட போராளிகள் தொடர்சியாக சிறிலங்கா நீதி மன்றாலேயே எதுவித விசாரனைகளோ தீர்ப்போ அல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும், இதேவேளை சிறிலங்கா படைத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டு விரைவாக விசாரனைகளை நடாத்தி தண்டனை வழங்கப்பட்டு இப்பொழுது சிறிலங்கா சனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வானது தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கைத்தீவில் எவ்வாறு பாகுபாட்டுடன் நடாத்தப்படுகின்றனர் என்பதை கோடிட்டுகாட்டுகின்றது என்பதையும் தமிழர் நடுவத்தின் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினர்.

83ம் ஆண்டு 50ற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட அதே வெலிக்கடை சிறையிலும் அதிகளவான தமிழ் அரசியல் கைதிகள் மிகுந்த அச்சத்துடன் இப்பொழுதும் இருக்கின்றனர். என்பதுடன் 1983 ம் ஆண்டு யூலை மாதம் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசின் உடந்தையுடன் சிங்கள காடையர்களால் வன்முறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவடைந்த மாதமாக வரும் யூலை மாதம் வருகின்றது என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.

தற்போதைய சூழ்நிலைக்கேற்ப தமிழ்தேசிய இனத்தின் தனித்துவத்தைப் பேணி டென்மர்க்கில் வாழும் தமிழீழ மக்களை ஒருங்கிணைத்து செயற்பட வைப்பதற்கான பொதுத்தன்மையான ஒரு பலமான தமிழர் கட்டமைப்பாக தமிழர் நடுவம் உருவாகியுள்ள ஆரம்ப வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழர் நடுவம் டென்மார்க்