அனைத்துலகம்

சிறீலங்கா அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்: அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்

சிறீலங்காவில்இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட சிறீலங்கா அதிகாரிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரி லுயிஸ் மொறினோ ஒகம்போ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐ.நாவின் ஊடக அமைப்பான InnercityPress நேற்று (07) தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதா என நாம் ஒகம்போவிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். ஆனால் சிறீலங்கா அரசு றோம் சிலை உடன்பாட்டில் கைச்சாத்திடவில்லை எனவே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை அவர்கள் மீது மேற்கொள்ளமுடியாது என அவர் பதிலளித்திருந்தார்.

ஆனால் இரட்டைக் குடியுரிமை கொண்ட சிறீலங்கா அதிகாரிகள் மீது அவர்கள் வைத்திருக்கும் மற்றைய நாட்டு குடியுரிமையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கமுடியுமா? என கேட்டபோது, அது சாத்தியமானது என அவர் பதில் தந்துள்ளார்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புள்ள பலர் இரட்டைக் குடியுரிமையை கொண்டவர்கள் எனவே அவர்கள் மீது நடவடிக்கையை மேற்கொள்ளமுடியும்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களில் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவும், முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகாவும் பிரதம குற்றவாளிகள் என அமெரிக்க தூதுவர் பற்றீசியா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கமுடியுமான என, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் கூட்டத்தொடரில் பங்குபற்றிய வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநதி றிச்சாட் டிக்கரிடம் நாம் கேள்வி எழுப்பியிருந்தோம்.

சீனாவில் இருந்து அவுஸ்திரேலியா வரையிலுமான விவகாரங்களை தான் கையாள்வதாகவும், ஆனால் சிறீலங்காவில் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் அமெரிக்காவில் இருக்குமிடத்தில் அவர்களை கைதுசெய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.