கட்டுரைகள்

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது.- பாகம்-3

‘ஓ பார்த்திட்டன்’ என்று சொன்னான். ஆனால் அவன் நாங்கள் இருந்த வீட்டைப் பார்க்கவில்லை. அவன் அன்று நாங்கள் இருந்த வீட்டைப் பார்த்திருந்தால் அவனுக்கு பெரிய வெள்ளி. அலட்சியம் செய்ததால் அன்று நாம் பிழைத்தோம்.
நாங்கள் தொடர்ந்து நகர்வை மேற்கொள்ள முடியாது புதுக்குடியிருப்பை நோக்கி ஆமிக்காரரை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனங்களின் தொடர் போக்கும், நவீன கருவிகளைப் பொருத்திய பெரிய வாகனங்களும் சென்றவாறே இருந்ததோடு, புதுக்குடியிருப்புப் பக்கமிருந்து பெரும் வெடிச் சத்தங்களோடு, கடும் சண்டை நடைபெறும் சத்தமும் கேட்டவாறேயிருந்தது. அப்போது நாங்கள் எங்களுக்குள்ளேயே எங்கட ஆட்கள் அடிக்கிறாங்கள் போல எனக் கதைத்துக் கொண்டோம்.

எங்கட (ரீமில்) அணியில் இப்ப ஐந்து (05) பேருக்கு சின்னமுத்து (அம்மாள் வருத்தம்) வந்திருந்தது. ஒரு அண்ணாவிற்கு உள்ளங்காலில் எல்லாம் கொப்பளம் போட்டு நடக்க முடியாது. நானும் அந்த ஐந்து பேரில் ஒருவர்தான். காய்ச்சலின் வேகம் ஒருபக்கம். உடல் முழுக்க கொப்பளம் போட்டு சரியான வேதனை. ஏதாவது செய்யலாம் என்றால் ஆமி தொடர்ந்து கிளியறிங் செய்து கொண்டு திரியிறான். சரியான உணவும் இல்லை. உடல் ஒத்துழைக்க மறுத்தாலும் தலைமை எங்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பும், அதைச் செய்து முடிக்க வேண்டுமென்ற மனவுறுதியும் தொடர்ந்து நகரவேண்டுமென்ற வேகத்தைத் தந்தது.

எம்மால் எமது உடைமைகளைக் (பைகள்) கூட தூக்க ஏலாது. நடக்க ஏலாது. எனவே அடுத்த நாளும் தொடர்ந்து போகமுடியாமல் தங்கி விட்டோம். அன்று இரவு இரண்டு அண்ணாக்கள் வேவு பார்க்கச் சென்றார்கள். பின்பு மீண்டும் வந்து ‘இன்று போக முடியாது ஏனென்றால் அருவியொன்று உள்ளது. அதில் தண்ணி நிறைய ஓடிக்கொண்டிருக்குது. தடிவிட்டுப் பார்த்தம் அது ஒரு ஆளைக்கூட தாட்டிடும். அத்தோடு இந்த ஐந்து பேரையும், காயப்பட்டு இருந்தவரையும் கொண்டுபோக ஏலாது’ என்று சொல்லி விட்டார்கள். அதாவது 4ம் மாதம் 5ம் திகதி. அன்று பகலில் எவரும் நடமாடவில்லை. இரவில்தான் எங்களின் நடமாட்டம்.

நாங்கள் இரண்டு அணியும் கிட்டத்தட்ட 50 மீற்றர் வரையான தூரங்களில் அமைந்த வீடுகளிலேயே ஆறு, ஏழு பேர்களாகத் தங்கினோம். அந்த வீடுகளிலிருந்து சற்றுத் தள்ளி அதாவது கிட்டத்தட்ட 500 மீற்றர் அளவில் பற்றைக் காடுகளும் இருந்தது. எனவே தான் நாங்கள் அவ்விடத்தை தங்குவதற்காக தெரிவு செய்திருந்தோம். நாங்கள் தங்கியிருந்த வீடுகளில் பல பெறுமதியான பொருட்கள் கிடந்தன. தொடர் இடப்பெயர்வினால் மக்கள் அவற்றையெல்லாம் விட்டு விட்டு கையில் கிடைத்த பொருட்களுடன் இடம்பெயர்ந்திருக்க வேண்டும். அவற்றோடு உணவு தாயாரிப்பதற்கான பொருட்களும் அங்கே இருந்தன.

அன்று பகல் இரண்டு ரீமும் சாப்பாடு செய்தோம். அப்பொழுது வாகனச் சத்தம் எங்களுக்கு கிட்டவாகக் கேட்டது. நாங்கள் இருந்த வீட்டுக்குப் பக்கத்தில ஒரு றோட்டு இருந்தது. உடனே எல்லோரும் அலேட்டாயிட்டு (தயார் நிலையில்) ஒளிந்து கொண்டு, (ஏற்கனவே நாங்கள் ஒழிந்து கொள்வதற்கு ஏற்றவாறு அந்த வீட்டிலிருந்த தளபாடங்களையும், பொருட்களையும் மாற்றி அமைத்திருந்தோம்.) இருவரை அவதானிப்பதற்காக விட்டிருந்தோம். அப்போது ஆமிக்காரரில் ஒரு ஆறுபேர் ஒவ்வொரு வீடுகளுக்குள்ளேயும் போய் அங்கிருந்த ரி.வி, டெக் போன்ற பல பெறுமதியான பொருட்களைப் பார்த்து எடுத்து வாகனத்தில் ஏற்றினார்கள். பின்பு நாங்கள் இருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குள் போய்ப் பார்த்திருக்கிறான்.

அங்கு ரி 81 றைபிள் வெளியாலே சாத்தி வைச்சபடி இருக்க அவன் அதை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். அந்த வீட்டுக்குள் இருந்தவ பின்பக்கத்தால எங்களுடைய வீட்டுக்குள் ஓடி வந்தா. நாங்கள் என்ன பிரச்சினை என்று கேட்டோம். ‘நான் றைபிளை சுவர்கரையில வைச்சிட்டு சமைச்சுக் கொண்டிருந்தன். ஆமி திடீரென்று வந்திட்டான். நான் அவசரத்தில் றைபிளை எடுக்காமல் ஒளிந்துவிட்டேன். அவன் வந்து றைபிளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.’ என்று சொன்னா. உடனே எல்லோரும் அலேட்டாக (தயார் நிலையில்) இருந்தோம். போன ஆமி தன்னுடன் வந்த எல்லாரையும் கூட்டிக் கொண்டு கலைமகள் அக்கா இருந்த வீட்டை சுற்றி வளைத்தான். (சுத்தி ரவுண்ஸ் அடிச்சான்). பிறகு சுற்றியிருந்த ஒவ்வொரு வீடாய்ப் போய்ப் பார்த்தான். நாங்கள் இருந்த வீட்டையும் வந்து பார்த்தான்;. அங்கிருந்த பொருட்களின் பின்னேயும், அவற்றுக்குள்ளேயும் புகுந்து ஒழித்தவாறு, ஒருத்தரும் ஆடியசையாமல் அப்படியே இருந்தோம். வீட்டைச் சும்மா பார்த்துவிட்டுப் போய்விட்டான்.

நாங்கள் அவன் போய்விட்டான் என நினைத்தோம். ஆனால் அவன் போறமாதிரிக் காட்டிவிட்டு, தன்ர ஆட்களை சத்தமின்றி மறைவாக விட்டு விட்டு ரீமை அழைத்துவரப் போயிருக்கிறான். நாங்கள் ஒழித்திருந்த இடங்களில் இருந்து எழும்பி சுத்தி அவதானித்துப் பார்க்கக் கூடியவாறான நிலையில்லை.

எப்போதுமே ஆமி வந்து போன பின்பு மற்ற அணித்தலைவர் (ரீமின்ர லீடர்) எங்களை வந்து எதுவும் பிரச்சினையோ என்று கேட்பது வழக்கம். அன்றும் அவர் எங்களைத் தேடி நாங்கள் இருந்த வீட்டை நோக்கி வந்திருக்கிறார். ஆமி மறைந்து இருந்ததைக் கவனிக்கவில்லை. இவர் வருவதை ஆமி கண்டுவிட்டு ரவுண்ஸ் அடிக்கத் தொடங்க, அவர் கையிலிருந்த குண்டைக் கழற்றி வீசிவிட்டு, ரீம் இருக்கிற வீடுகளின்ர பக்கம் ஓடாமல், ஆமிக்கு திசையைத் திருப்பி வேறுபக்கமாக ஓட, ஆமியும் அவரைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

பிறகு நானும் பரிதி என்ற அண்ணையும் ஒரு கட்டிலுக்குக் கீழ் ஆடாமல் அசையாமல் ஒரே நிலையில் ஒழிந்தோம். இரவுகளின் தொடர் நித்திரையின்மை, வருத்தம், களைப்பு. நான் அப்போது நித்திரை கொண்டேன். எனக்குக் கனவில் எங்களில் நாலு பேரை உயிரோட போட்டு எரிப்பதாகவும்;, அவர்களில் செல்வியக்காவும் (26 பேருக்குமான லீடர்) இருப்பதாகவும், நான் மாறண்ணாவிடம் போய் ‘வாருங்கள் அம்மாக்களுடன் போவோம்’(எங்கட ரீமில இருக்கிற மலர்மகளைத்தான் செல்லமாக எல்லோரும் அம்மா என்று அழைப்பது. ஏனெனில் அவ எங்களுக்குச் சமைச்சு சாப்பாடு தருவா. அன்பாகக் கவனிப்பா.) என்று சொல்வதாகவும் அந்த நொடிக்குள் கனவுகண்டு திடுக்கிட்டு எழும்பிவிட்டேன்.

கொஞ்ச நேரத்தின் பின்பு திடீரென்று ஆமி ஒருவன் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றான். அப்போது செல்வியக்காவும் ஒரு அண்ணாவும் தாங்கள் ஒழிஞ்சிருந்த இடத்தைவிட்டு எழும்பி இருந்திருக்கிறார்கள்;. ஆமி வந்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவன் உடனே இருவரையும் சுட்டுவிட்டு வெளியே ஓடிவிட்டான். உடனே எங்களோடு இருந்த மாறண்ணா (அவரும் லீடர்தான்) அந்த இடைவெளிக்குள் குண்டைக் கழற்றி எறிந்துவிட்டு ‘டேய் எல்லாரும் எழும்பி ஓடுங்கடா’ எண்டு கத்திக் கொண்டு தானும் இரண்டு பிள்ளைகளையும் (அம்மா(மலர்மகள்), சுடர்விழி) கூட்டிக் கொண்டு ஓடிவிட்டார்.

நான் உடனே எழும்ப முடியாமல் போய்விட்டது. கைகால்கள் மரத்துப் போயிருந்தது. அதனால் கட்டிலுக்கு கீழிருந்து வரத் தாமதமாகிவிட்டது. அவன் அடிக்கத் தொடங்கிவிட்டான். வாசலுக்கு எழும்பி ஓடினேன். ரவுண்ஸ் கீசியது. இடது கையில் ஒரு குண்டும், வலது கையில் றைபிளும் வச்சுக்கொண்டு முழங்காலைக் குத்திக் கொண்டு பதுங்கிப் போய் குண்டடிப்பம் என எத்தனித்த போது, எனது றைபிளுக்குக் காயம். அப்படியே மெதுவா நகர்ந்த போது ‘சடார்’ என்ற ஒரு சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் எனது இடது கைச் சுட்டுவிரல் தொங்கிக்கொண்டு இருந்தது. உடனே வீட்டுக்குள்ளே எழுந்து போனேன். எல்லோருக்கும் காயம். காயத்தின் வலியில் முனகிக்கொண்டிருந்தார்கள். என்னோடு இருந்த பரிதி அண்ணா காயத்தோடு, அவன்ர சுற்றிவளைப்புக்குள்ளேயும், ரவுண்ஸ் அடிக்கையும் றைபிளை எடுத்து சுட்டுக் கொண்டிருந்தார்.

திடீரென்று ‘நான் நல்லா காயப்பட்டுவிட்டேன். நெஞ்சிலும் காயம் என்னாலே இனி தப்ப ஏலாது’ எண்டு சொல்லி குப்பி கடித்துவிட்டார். பிறகு தமிழண்ணா ‘நானும் காயப்பட்டுவிட்டேன். ஒன்றுமே செய்யேலாது. குப்பி கடிக்கவா’ என்று கேட்டார். நான் சொன்னேன் ‘அண்ணா அவசரப்படாதீங்க, இன்னும் சண்டை பிடிச்சு உடைக்கப் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு அவரையும் கடந்து வந்தேன். ஒரு அண்ணா என்னிடம் கேட்டார் ‘என்ர குப்பி எங்கோ தவறுப்பட்டு போச்சுது. நீ இரண்டு குப்பியல்லவா வைத்திருந்தாய். ஒன்றைத்தாவன்’ என்று கேட்டார். என்னிடமும் ஒன்றுதான் இருந்தது. ‘என்னிடம் இல்லையண்ணா’ என்று சொல்லிவிட்டு ஒளிவதற்கு இடமேதும் இருக்கிறதா என்று பார்த்தேன்.

அங்கிருந்த மேசைக்கு கீழ் முதலில் புகுந்தேன். பின்னர் மெதுவாக நகர்ந்து கட்டிலுக்கு கீழே போய், அதனோடு சாத்திவைக்கப்பட்டிருந்த தகரங்களினுள் இருந்த இடைவெளிக்குள் ஒருவாறாகப் புகுந்து கொண்டு, அங்கிருந்த றபர் வாளி இரண்டை எடுத்து இடைவெளியையும், என்னையும் மறைத்துக் கொண்டு இருந்தேன். காயப்பட்ட கைக்கு ஒன்றுமே செய்யவில்லை. ‘பிளட்’ போய்க்கொண்டே இருந்தது.
சிறிது நேரத்தின் பின்பு ஒரு ஆமி உள்ளுக்குள் வந்தான். தமிழண்ணாவுக்கு தலையிலிருந்து சகல இடத்திலும் காயம். ஆனால் அவர் வீரச்சாவடையவில்லை. ஆமி பார்த்துவிட்டு அவருக்கு ரவுண்ஸ் அடிச்சான். அப்பவும் அவர் வீரச்சாவடையவில்லை. நிறைய ரவுண்சை தூர நின்று அடித்துவிட்டு கிட்டவந்து அவருடைய நெஞ்சிலே சுட்டான். அப்பதான் அவர் வீரச்சாவடைந்தார். பிறகு எல்லா இடமும் சுத்திப் பார்த்தான்.

தொடரும்…..
tamilkuyil@gmail.com