இந்தியா

சீமான் மீதான வழக்கு ரத்து; நாளை விடுதலை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை சிறையிலிருந்து சீமான் விடுதலை செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பரபரப்பான அந்த சூழ்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க சீமான் வந்தபோது, போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

சீமானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சீமான் நாளை காலை விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.