"நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது!" – ஒரு போராளியின் சாட்சியம் – பாகம் 4

Home » homepage » "நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது!" – ஒரு போராளியின் சாட்சியம் – பாகம் 4

இடத்தையும் மேலோட்டமாக பார்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டான். நான் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஆமி மேலிடத்தோடு தொடர்பு கொண்டான். அதன் பின்பு வாகனமும்;, நிறைய ஆமிக்காரரும் வந்தார்கள். பிறகு வீட்டுக்குள் வந்து ஆட்களை எண்ணினான். எனக்கு மேலே கட்டிலில் ஒரு அண்ணா வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தார்.

கட்டிலுக்கு மேலே இருந்து அவரது குருதி (“பிளட்”) வடிந்துகொண்டேயிருந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என் கண்முன்னே அவர் துடிப்பதையும், குருதி வழிவதையும் பார்த்துக் கொண்டிருக்க, சிங்களவன் மேல் கோபம் கோபமாக வந்தது. இவங்களை சும்மாவிடக் கூடாது என எண்ணிக்கொண்டேன்.

ஆமிக் கொமாண்டர் வந்து சிங்களத்தில் ஏதோ சொன்னான். ஆமிக்காரர்கள் உடனே சிலர் எல்லாப் பக்கமும் போய் நின்று கொள்ள, சிலர் அங்கங்கே எல்லா இடமும் போய்த் தேடினாங்கள். நான் அந்த வீட்டில் கட்டிலோடு ஓரளவு கிடையாக சாத்தி வைக்கப்பட்டிருந்த தகரங்களின் உள்ளேதான் பதுங்கியிருந்தேன். ஒருத்தன் (ஆமி) மேலே இருந்த தகரங்களை ஒவ்வொன்றாக எடுத்தான். எனக்குப் பயமாக இருந்தது. அடுத்தடுத்த தகரத்தையும் எடுத்தால் சரி நான் இருப்பது தெரியும்;. நான் தகரத்தின் மேல் கையை வைச்சுப் பார்த்தேன். எடுக்கும் போது அதிரும்தானே என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்படி ஏதும் நடந்தால் அடுத்து என்ன செய்யலாம், அவனின் கையில் பிடிபடக் கூடாது என்பதற்காக குப்பியை வாயில் வைத்த வண்ணம் நடப்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன்;;. அவன் தான் எடுத்த தகரங்களை எண்ணிக்கொண்டு இருந்தான்;. ஒரு ஆமிக்காரன் ஏதோ சொல்லிப் பெரிதாகக் கத்தினான். பின்னர் “வெடித்தியாண்டேப்பா” என்று நிறையத் தரம் கத்தினான்.

உடனே எல்லோரும் அவன் நின்ற பக்கம் ஓடினார்கள். அங்கே காயப்பட்டுக்கிடந்த ஒரு அண்ணனை இழுத்துக் கொண்டு போனார்கள். அவரை வீட்டுக்கு முன்பு இழுத்துக் கொண்டு போய் விட்டுட்டு “உங்களுடைய ஆக்கள் யாரும் ஒளிந்திருந்தால் கூப்பிடு” என்று ஒரு ஆமிக்காரன் சொன்னான். அவர் பேசாமல் இருக்க, சப்பாத்துக் காலால் காயத்தில்; உழக்கி சித்திரவதை செய்தான். அவர் வேதனைக் குரலில் குழறியபடி ‘டேய் அண்ணாக்கள் ஆரும் ஒளிஞ்சிருந்தால் வாங்கோடா’ என்று கத்திக் கூப்பிட்டார். அப்போது ஒரு அண்ணா கையை உயர்த்திக் கொண்டு போனார்.

ஆமிக் கொமாண்டர் ஆ…..நல்லம் நல்லம் என்று சொல்லிக் கொண்டு இரண்டு பேரையும் வாகனத்தில் ஏற்றினான். பிறகு வீட்டுக்குள் வந்து வீரச்சாவடைந்த நாலு பேரையும் இழுத்துக் கொண்டு போய் ஓரிடத்தில் அடுக்கிப் போட்டார்கள். எனக்கு மேலே கட்டிலில் கிடந்த அண்ணனை இழுக்கும்(அவரும் வீரச்சாவடைந்துவிட்டார்) போது ஆமியின் சப்பாத்துக்கால் என்னுடைய காலுக்கு மேலே இருந்தது. (தகரத்தின் மேலே ஏறி நின்றபோது) நான் சத்தம் போடாமல் வேதனையை அடக்கிக் கொண்டிருந்தேன். பிறகு எல்லோரையும் பலமாதிரி போட்டோ எடுத்தான். ஒவ்வொருவராகப் பார்த்து ஏதேதோ சிங்களத்தில் எல்லாம் சொன்னான்.

அதன் பிறகு ஆமிக்காரர்கள் அவர்களை இழுத்துக் கொண்டு போய்ப் போட்டுவிட்டு புரட்டிப் புரட்டிப் பார்த்தாங்கள். தமிழண்ணாவின் கோல்சரை வெட்டி எடுத்து ஏதோ சொல்லிச் ‘செக்’; பண்ணிப்பார்த்தபின், எல்லோருடைய உடைகளையும் கழற்றி, அவர்களின் மீது ஏறி நின்று உழக்கியும், அடித்தும் சொல்லமுடியாத செயல்களையெல்லாம் வீரச்சாவடைந்த அவர்களுக்குச் செய்து கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கு வேதனையாக இருந்தது. அந்த நால்வரில் பெண் போராளியை (செல்வியக்காவை) வீரச்சாவடைந்த பின்னும் அவங்கள் கூடி நின்று அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியதைக் கண்ட போது எனக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. அந்த உணர்வு கோபமா அல்லது கொலை வெறியா என்று தெரியவில்லை. வித்துடல்களாக நாங்கள் மரியாதையுடன் விதைப்பவர்களை அவன் செய்த செயல்கள் எனக்குள் மாறாத வடுவாகப் பதிந்தது. அது என்றும் எனக்குள் போராட்டக் கனலை பற்றியெரிய வைத்துக் கொண்டிருக்கும்.

பின்பு வீரச்சாவடைந்த அந்த நால்வரையும் அந்த வீட்டின் முற்றத்தின் மேற்குப்பக்கத்திலே இருந்த தென்னைகளுக்கு கிட்ட இழுத்துக் கொண்டு போய் ஏதோ ஊற்றி எரித்தான். பிறகு வீட்டுக்குள் வந்து எல்லா இடமும் ‘டோச்’ அடித்துப் பார்த்துவிட்டுப் போனான். ஆமிக் கொமாண்டர் நாலுபேரைக் கூப்பிட்டு சிங்களத்தில் ஏதோ சொன்னான். பின்னர் பிடிச்ச இரண்டு பேருடனும் வாகனத்தில் ஏறிப் போய்விட்டான். அந்த நாலுபேரும் அதிலேயே ‘பொசிசன்’ போட்டு நின்றார்கள். மற்றவங்கள் அங்காலப்பக்கம் வேற எங்கட ஆட்கள் இருக்கினமோ என்று கிளியறிங் செய்து கொண்டு போனாங்கள்.

அந்த நேரத்தில் நான் உயிர் தப்பியது அவனோட ஆணவம் கலந்த அலட்சியமும், மாவீரரின் ஆசியும், என்னோட அதிஸ்டமுமாகத்தான் இருக்க வேண்டுமென நினைத்தேன். சம்பவம் நடந்தது பகல் 3.00 மணியிருக்கும். இப்போது இரவு 10.00 மணியாகிவிட்டது. ஆமியின் சத்தத்தைக் காணவில்லை. மெல்ல நேரத்தைப் பார்த்தேன். (நான் கையில் மணிக்கூடு கட்டியிருந்தேன்.) மணி 10. எனவே ஆமி இருக்கமாட்டான் என்று நினைத்தபடியே தகரத்திற்குக் கீழேயிருந்து எழும்ப முற்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஏனென்றால் பலமணி நேரமாக ஆடாமல் அசையாமல் படுத்திருந்ததால் மிகவும் கஸ்ரப்பட்டு எழும்ப முயற்சி செய்து காயப்பட்ட கையைத் தூக்கினேன்.

கை மண்ணோடு சேர்ந்து ஒட்டியிருந்தது. சரியான வருத்தமாக இருந்தது. பகல் 3.00 மணிக்கு காயப்பட்டு இன்னும் ஒன்றுமே செய்யவில்லை. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு எழும்பி வெளியே காலை வைத்தேன். உடனே சறுக்கி விழுந்துவிட்டேன். என்னவென்று பார்த்தேன். காயப்பட்ட அண்ணாக்களுடைய இரத்தம் வீடு முழுக்க பரவிக் கிடந்தது. எனக்கு அழுகையும் வந்தது. சிங்கள வெறிபிடித்த அவர்களின் மேலே பயங்கரக் கோபமும் வந்தது.
இதற்கு முதல் அவனோட ரவுண்டப்புக்குள் இருந்த போது, றைபிளை விட்டுவிட்டு ஓடி வந்த கலைமகள் அக்கா எனது பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு “என்ன செய்யிறது” என்று கேட்டா.

நான் ‘அக்கா நான் இருக்கிற இடத்திற்கு வாங்கோ’ என்று சொன்னேன். நீண்ட நேரமாகியும் அவா வரவில்லை. எனவே அவா பக்கங்களில் எங்கேயாவது ஒளிஞ்சிருப்பா என்று நினைத்துக் கூப்பிட்டுப்பார்த்தேன். ஒரு சத்தத்தையும் காணவில்லை. வீட்டைச் சுற்றி எல்லா இடமும் தேடிப்பார்த்தேன். அவவின் தொடர்பு கிடைக்கவில்லை. நான் தான் தனித்துப் போய் நின்றேன். எனவே எங்களின் அணியிலுள்ள மற்ற ஆட்களைத் தேட வேண்டுமென்று அங்கிருந்த துணியை எடுத்து கைக்காயத்துக்கு சுற்றிக் கொண்டு, எனது றைபிளையும் எடுத்துக்கொண்டு நான் காயப்பட்ட இடத்துக்கு மீண்டும் வந்தேன்.

என்னிடம் இப்ப ஒரு குண்டும், 30 ரவுண்ஸ்சும்தான் இருக்கிறது. எனவே நான் போக வேண்டிய தூரமும், தரப்பட்ட வேலையும் மனதில் வந்தது. எனவே மற்றவர்களைத் தேடிப் போகமுன், நான் காயப்படுமுன் கையிலே ஒரு குண்டு வைத்திருந்தேன். அதையும் எடுத்தால் உதவியாக இருக்கும் என்று போய்த் தடவிப்பார்த்து ஒருமாதிரி எடுத்துவிட்டேன். எடுத்துக் குண்டைப் பார்த்தால் குண்டின் பாதி ‘லிபர்’ஐக் காணவில்லை.

கிளிப்போடு ஒரு கொஞ்ச ‘லிபர்’ தான் இருந்தது. உடனே குண்டை அப்படியே வைத்துவிட்டேன். சண்டையின் போது பாதிலிபர் பறந்திருக்கிறது. கொஞ்சம் மேலே பட்டு லிபர் முழுக்க விடுபட்டிருந்தால் குண்டு வெடித்திருக்கும் என்று நினைத்துவிட்டு, மெதுவாக வெளியால் வந்து எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு எங்களுடைய மற்ற அணி இருந்த வீட்டுக்குப் போவமென்று பார்த்தேன். ஆமி எங்கே இருக்கிறான் என்று ஒன்றும் தெரியாது. எனவே ஒரு வெட்டையொன்று ( கொஞ்ச சின்னப் பற்றைகள் கொண்ட வெளி) இருந்தது. அதனூடாக நடந்து போனால் தெரியும். அப்படியென்றால் ஊர்ந்து தான் போகவேண்டும். எனவே ஒருமாதிரி றைபிளையும் தூக்கி வைச்சு, வைச்சுக் ‘குறோள்’ இழுத்துப் போனேன். இரத்தம் போய்க்கொண்டே இருந்தது. இரத்தம் வழிந்த தடயத்தைப் பார்த்தால் அவன் கண்டிடுவான் என்று மிகவும் அவதானமாகத்தான் நகர்ந்து அவர்கள் இருந்த வீட்டைப் போய்ப் பார்த்தேன். எவருமில்லை. கூப்பிட்டுப் பார்த்தேன். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

நாங்கள் இருந்த எல்லா இடங்களிலும் போய்ப்பார்த்துக் கூப்பிட்டேன். பதில் வரவில்லை. எப்படி அவர்களைத் தேடுவது என்றெண்ணிக் கொண்டு திரும்பவும் நான் இருந்த வீட்டிற்கு வந்தேன். அப்போது மூன்று ஆமிக்காரர்கள் ‘டோச்’ அடிச்சுக்கொண்டு வந்தார்கள். நான் வேகமாக வேலியைக் கடந்து ஒரு வயல் வெட்டையிலிருந்த பெரிய வாய்க்கால் ஒன்றுக்குள் படுத்துக் கொண்டேன். காயத்திற்கு ஒரு மெல்லிய துணியினால் கட்டியிருந்தேன். அது துணியையும் மிஞ்சி இரத்தம் கசிந்து கொண்டிருந்தது…….

தொடரும்…..

tamilkuyil@gmail.com


%d bloggers like this: