நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – பாகம் 8

Home » homepage » நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – பாகம் 8

பசிக்கத் தொடங்கிவிட்டது. சாப்பிட மாங்காய் மட்டும்தான் இருந்தது. மாங்காயை எடுத்துக் கடித்துக் கொண்டு நடந்தேன். நிலம் தண்ணீரும், சேறும், சுரியுமாக இருந்தது. நிறையத் தூரம் நடந்துவிட்டேன். அப்படியே ஒரு பெரிய வரம்பில் கொஞ்ச நேரம் இருந்தேன்.
நித்திரையும் வந்தது. அலட்சியமாக நித்திரை கொண்டால் விடிந்துவிடும் என்று நினைத்து, உடனே எழுந்து நடந்தேன். கண்ணெதிரே நடந்த ஒவ்வொரு விடயத்தையும் நினைத்துப் பார்க்கும் போது, வேகத்தைக் கூட்டியது.

ஒருமுறை அம்பகாமத்தில் எங்களது லைனுக்கு முன்னுக்கு, எனது தலைமையில் மூன்று பேர் வேவுபார்க்கப் போனோம். மூன்றாம் நாள் பகல், ஆமி ஒரு பொசிசனை உடைத்து முன்னேற முயற்சி செய்தான். எங்களுடைய போராளிகளின் மன உறுதியினாலும், கடுமையான எதிர்ப்பினாலும் அவனால் முன்னேற முடியவில்லை. ஆமிக்கு சரியான இழப்பு. உடனே தங்களுடன் வந்து, செத்தவர்களை அதிலேயே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துப்போட்டுத் தப்பி ஓடிவிட்டான்.

எல்லாத்தையும் நினைத்துக் கொண்டு நடந்தேன். ஒரு றோட்டு இருந்தது. அந்த றோட்டைக் கடந்து, பெரிய வாய்க்கால் ஒன்றையும் கடந்து வீட்டுக் காணிக்குள் போனேன். உடையார்கட்டில் எமது லைன் இருந்த போது எங்களுடைய அணி (சோதியா படையணி) துர்க்கா அக்காவுடைய மெயின் இருந்த இடத்தைப் பார்க்க மனச்சுமை கூடியது. அந்த இடத்தை அவன் இப்போது தனது பாவனைக்கான தளமாக வைத்திருந்தான். நான் நன்றாக மறைந்து கொண்டு அவனது நடவடிக்கையைக் கண்காணித்தபடியேயிருந்தேன். அங்கேயிருந்த மாமரத்தின் கீழ் கைகள் பின்னுக்கு கட்டப்பட்டவாறு உடைகளின்றி, மண்டியிட்டபடி ஆண்கள் இருப்பது தெரிந்தது. அந்த வீட்டின் மறுபகுதியில் பெண்களும் உடைகளின்றி இருப்பதைக் காணக்கூடியதாகவிருந்தது. சில பெண்களைக் கொண்டு தமக்குத் தேவையான வேலைகளைச் செய்யச் சொல்லி செய்வித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முகங்களைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் எமது அப்பாவிப் பெண்களை இழிநிலையில் அவன் வைத்திருப்பதைப் பார்க்க எனக்கு கடுஞ்சினமாகவும், அவனை அடித்து அடித்தே கொல்லவேண்டும் போலவிருந்தது. எங்களை இழிபடுத்திய அவனுக்கு கட்டாயம் வாழ்க்கையில் மறக்க முடியாத முறையான பாடம் படிப்பிக்கவேண்டுமென உறுதியெடுத்துக் கொண்டேன்.

நான் அங்கிருந்து மெதுவாக வளவுகளுக்குள்ளால் அவதானித்தபடி நகர்ந்து சென்றேன். எங்களுடைய கணனிப்பிரிவுக்காரருடைய முகாம் (பேஸ்) இருந்தது. அதில்தான் வேவு அணியினர் (ரீம்) முதலில் தங்கியிருந்தோம். அப்போது இருந்த நிலையையும் இப்போது அது இருக்கும் நிலையையும் பார்க்க கவலையாக இருந்தது. அந்தக் கட்டிடத்திற்குள்ளிருந்த எமது அப்பாவின் படம்(தேசியத் தலைவரின்) இப்போதும் அப்படியே இருந்தது. கட்டிடமெல்லாம் எறிகணையால் சேதமடைந்திருந்தது. ஆனால் எமது அப்பாவின் படம் மட்டும் எந்தச் சேதமும் இன்றி அப்படியே இருந்தது. அந்த முகத்தைப் பார்த்த உடனேயே மனசில் இருந்த சுமையெல்லாம் வெயில் கண்ட பனிபோல கரைந்து போய்விட்டது. அந்த இடத்தை விட்டுப் போகவே மனமில்லாமல் இருந்தது.

படத்தைப் பார்த்ததும் எனக்குள் உறுதியும் நம்பிக்கையும் கூடியது. புத்துணர்வுடன் எனது பயணத்தைத் தொடர்ந்தேன். அப்படியே போய்க் கொண்டிருந்தேன். ஒரு றோட்டு வந்தது. எனக்கு ஒரு பழக்கமிருக்கு, பாதைகள் அல்லது றோட்டுகள் எதையும் கண்டால் நடமாட்டங்கள் இருக்காவென்று தடவிப் பார்ப்பேன். அதேபோல இதையும் தடவிப் பார்த்தேன். வாகன நடமாட்டம் இருந்தது. அதையும் கடந்து அடுத்த காணிக்குள் போனேன். ஒரு வீடுதான் இருந்தது. அங்கால் பக்கம் பெரிய குளம் இருந்தது. சரியான களைப்பாக இருந்தது. அந்த வீட்டுக்குள்ளேயே படுத்துவிட்டேன். மழை பெய்து கொண்டிருந்தது. என்னையறியாமலே நித்திரை கொண்டேன்.

விடியப் போகுது என எழும்பி, சுற்றி அவதானித்தேன். குளத்தைத் தாண்டி அங்காலக் கரையில் ஒரே வாகனப் போக்குவரத்தாக இருந்தது. விடிந்துவிட்டது வாகனச் சத்தம் கேட்டது. ரக்ரர் ஒன்று கொஞ்ச ஆமிக்காரரை ஏற்றியபடி போனது. பிறகு மோட்டர் சைக்கிள், லான்ஸ்மாஸ்ரர் என்று அடிக்கடி போனது. போற வாகனங்களில் அவன் எங்களுடைய மக்களை கைகளைக் கட்டியவாறு ஏற்றிக் கொண்டு போவது தெரிந்தது. எனவே அவதானித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

குளத்துக்கு அருகில் ஒரு வீடுதான். பின்னால் வெட்டை. ஏதும் ஆபத்து என்றால் ஓடவும் இயலாது. உடனே நான் இரவு வந்த பக்கம் றோட்டை அவதானித்துப் போட்டு கடந்து, ஒரு வீட்டு வளவிற்குள் போனேன். மாமரத்திலிருந்து மாங்காய் விழுந்து கிடந்தது. அதையும் எடுத்துக் கொண்டு அடுத்த றோட்டையும் கடந்து ஒரு வீட்டுக்குள்ளே போயிருந்தேன். ஆமியின் நடமாட்டம் இங்கேயும் இருந்தது. அந்த வீட்டுக்குள்ளேயிருந்த மேசைக்கு கீழே போய் ஒளிந்திருந்தேன். மதியம் போல் எழும்பி பக்கத்து வீட்டுக்குப் போனேன்.

அங்கே ஒரு சவலோன் போத்தலும், வடை சுடுகிற பருப்பும் இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டு நிற்க, மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. அப்படியே படுத்துவிட்டேன். ஆமி போனதன் பிறகு எழும்பி, நான் இருந்த வீட்டுக்குப் போனேன். அது ஒரு ஜி.எஸ்சின் வீடு. அவரின் ‘நோட் புக்’; ஒன்று இருந்தது. அதை எடுத்தேன். வெறுங்கையோடை போகாமல் ஏதாவது பிரயோசனமாய் செய்யலாம் என்று நினைத்து, எங்களுக்கு நடந்த விடயத்திலிருந்து ஒன்றும் விடாமல் அதில் எழுதினேன்.

என்னுடைய கையில் ஜி.பி.எஸ்சும், கொம்பாசும்(திசையறி கருவி) இருந்தது. தேவையான சகல இடத்திலேயும் ஜி.பி.எஸ்சைப் பயன்படுத்தினேன். (பிக்ஸ் அடிச்சன்) பாகை, தூரம் எல்லாவற்றையும் எடுத்தேன். (அவனுடைய சகல பொசிசன்கள் இருந்த இடங்களையெல்லாம் சரியாக எடுத்துக் குறித்தேன்.) அதைவிட எமக்குத் தேவையான சில தகவல்களையும் எடுத்தேன். ஒவ்வொரு நாளும் இரவு தங்கிற இடத்தில் கட்டாயம் பிக்ஸ் அடிக்கிறனான். எல்லாத்தையும் எழுதிவிட்டு இருட்டும் வரை இருந்தேன்.

ஒரு வீட்டில் ‘மினரல் வோட்டர்’ இருந்தது. அதையும் எடுத்து பைக்குள் வைத்தேன். சிலவேளை தண்ணீர் இல்லாமல் போனால் உதவும். இருட்டுப்பட எழும்பி குளத்துக்குப் பக்கத்தில் இருந்த வீட்டுக்குப் போனேன். நிலவு மறையும் வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தேன். இருட்டாகிப் போனபின்பு எல்லாத்தையும் எடுத்துக் கொண்டுவெளிக்கிட்டேன். பகல் முழுக்க அவதானிக்கவில்லை. எங்கே என்ன இருக்குதென்று தெரியாது. குளக்கரையால் நடந்து போக தண்ணீரின் அளவு போகப் போகக் கூடியது. வலப்பக்கமும் போய்ப்பார்த்தேன் அதுவும் அப்படியேதான் இருந்தது. கரைக்கு ஏறினேன். கெலி மேலே பறந்து வர உடனே ஓடிப்போய் ஒரு பற்றைக்குள் ஒளிந்துவிட்டேன். கெலி போன பிறகு யோசித்தேன் நாளைக்குப் பகலில் நன்றாக அவதானித்துப் போட்டுப் போவமென்று ஒரு பாழடைந்த வீட்டுக்குள் போனேன். மழையும் அடித்து ஊற்றியது. அப்படியே அந்த வீட்டுக்குள் படுத்துவிட்டேன். பக்கத்தில் நாய் கிடந்தது. என்னைக் கண்டு குரைக்க வெளிக்கிட்டுவிட்டது.

தொடரும்.
thamilkuyil@gmail.com


%d bloggers like this: