கட்டுரைகள்

நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – பாகம் 9

நித்திரை கொள்ளவே விடாது தூவாணம் அடித்தது. வீடு முழுக்க ஒரே ஒழுக்கு. என்ன செய்வது சமாளிக்கத்தான் வேண்டும் என்று நினைத்தவாறே அப்படியே தரையில் படுத்து நித்திரை கொண்டேன். திடீரென்று ஏதோ எனது காலை நக்கிறமாதிரியிருந்தது. கண்ணைத்திறந்து பார்த்தேன். ஒரு நாய்க்குட்டி. எனக்கு மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அந்த நாய்க்குட்டியையும் தூக்கிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நித்திரை கொண்டேன். அதுவும் எனக்குப் பக்கத்தில் படுத்துவிட்டது. வாய் பேசாத ஜீவன் என்றாலும் அந்த நேரத்தில் ஒரு துணையைப் போல உணர்ந்தேன்.

விடியப் போகுது பகலில் நடமாடவே முடியாது ஒரு மறைப்பும் இல்லை. வேறொரு வீட்டுக்குள் போய் இருந்தேன். அந்த வீட்டுக்குள் இருந்தால் அப்படியே ஆள் இருப்பது தெரியும். என்ன செய்வது அதற்குள்தான் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அவதானிக்கலாம். எனவே அங்கிருந்த கட்டிலுக்கு கீழே பையையும் றைபிளையும் ஒளித்து வைத்தேன். ஜி.பி.எஸ்சும், கொம்பாசும் எப்பவுமே என்னுடைய கழுத்திலும்;, குண்டு எப்பவுமே இடுப்பிலும் கொளுவியபடியே இருக்கும்.

மாங்காயும், கடலைப்பருப்பும் தான் சாப்பாடு. ஒரு வீட்டில் சின்னப்பிள்ளைகள் சாப்பிடுகிற மா இருந்தது. எடுத்தேன்; அதில் நாய்க்கும் கொஞ்சம் கொடுத்தேன். அது என்னைவிட்டுவிட்டுப் போகவேயில்லை. ஆமி கிட்ட வரும் சத்தங்கள் கேட்டால் நன்றாக மறைந்து இருப்பேன், இல்லாவிடில் அவதானித்துக் கொண்டு இருப்பேன்.

நேரமும் போகுது இருட்டுப்பட்டதும் வெளிக்கிடவேணும் என நினைச்சுக் கொண்டு இருந்தேன். நிலவும் மறைய கடவுளை வேண்டிக் கொண்டு வெளிக்கிட்டேன். அப்படியே கரையைப் பிடிச்சுப் போனேன். ஒரு றோட்டு வந்தது. அது பழைய றோட்டு போக்குவரத்து எதுவுமே இல்லை. அங்கால் பக்கம் வயல் வெளி. வரம்பால் போய்க் கொண்டிருந்தேன். இருட்டுக்குள் எதுவுமே தெரியவில்லை. திடீரென்று தூரத்திலே வானத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. எனக்கு உடனே விளங்கீற்று. ஆமி அடிச்ச பரா என்று. உடனே கொம்பாசை எடுத்து பாகையைப் பார்த்தன்;;. 315. அந்தப் பாகையில் போனால் வழி தவறாமல் போகலாமென்று அடிக்கடி பாகையைச் செக்பண்ணிக் கொண்டுதான் போவன். நடந்து கொண்டே இருந்தேன்.

ஒரு சின்ன ஊர்மனை அதைக்கடந்து அங்கால் பக்கம் வயல் வெட்டை. அடுத்து, அருவியில் இடுப்பளவு தண்ணீர். ஒருமாதிரி அதைக்கடந்து போனேன். ஒரு பெரிய தென்னந்தோட்டம். பேருக்குத்தான் அது தென்னைந்தோட்டம் ஆனால் ஒரு தென்னையிலும் உயிர் இல்லை. மனிதர்கள் நடைபிணமாவது போல இதுவும் நன்றாக நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் உயிர்தான் இல்லை. செல்ப்பீஸ் படாத மரமே இல்லை. ஓலை எல்லாம் காய்ந்துபோயிருந்தது. அப்படியே எல்லாத்தையும் பார்த்;துக் கொண்டு போய்க் கொண்டே இருந்தேன். ரக்ரர் வரும் சத்தம் கேட்டது. நான் கடந்து வந்த இடங்களிலும் ரக்ரர் தடங்கள் இருந்தது. நாயும் குலைத்துக் கொண்டேயிருந்தது.

அருவிகள் தண்ணீர் இல்லாமல் மணலாக இருந்தால் அப்படியே பின்பக்கமாகத் திரும்பி நடந்து போவன். தடம் இருந்தாலும் நான் போகும்பக்கம் வரமாட்டான். எல்லாத்தையும் கவனித்துக் கொண்டுதான் நகருவேன். பாதையொன்று இருந்தது. தடவிப் பார்த்தால் தடங்கள் எல்லாம் புதிதாய் இருந்தது. றோட்டுக்கு அங்கால்பக்கம் இருக்கிற வீட்டில்தான் நாய் குரைக்கிறது. நான் றோட்டைக் கடக்கிறது என்றால் அந்த வீட்டுக்கு நேரேதான் கடக்க வேண்டும்;. என்ன செய்வது கடக்கத்தான் வேண்டும். வேலிக்கு கிட்டே வந்தேன். நாய் என்னுடைய பக்கம் பார்த்துதான் குரைத்தது. குரைக்கட்டும் என்று மெதுவாக நடந்தால் ‘டாக்கட்’ தெரியும். வேகமாய் கடந்திட்டால் தெரியாது. எனவே வேகமாக நடந்து அடுத்த வாசல் வழியாக ஒரு காணிக்குள் போனேன்.

நாய் கூடுதலாக குரைக்கத் தொடங்கியது. நான் தாமதிக்காமல் அடுத்த வேலிக்குக் கிட்டப் போனேன். வேலி சரியான நெருக்கமாக இருந்தது. வேர்களும் கொடிகளும் வேலிக்கு மேலே படர்ந்திருந்தது. தடவிப் பார்த்தேன். சின்ன இடைவெளி இருந்தது. அதனூடாக கடந்து ஒரு மாதிரி மறு காணிக்குள் போய்விட்டேன். அப்படியே அடுத்த காணியையும் தாண்ட, ஒரு றோட்டு. பள்ளமான இடமென்பதால் றோட்டு முழுக்க தண்ணீர் நின்றது. அதுக்கு அடுத்த காணியில்தான் ஆமியின் சத்தம் கேட்டது. மோட்டர்(எஞ்சின்) சத்தமும் கேட்டது. நான் கடந்து போகப் போவது வெட்டை. மெதுமெதுவாகப் பாதையைக் கடந்து வெட்டையில் நின்ற ஒரு பற்றைக்குள் போய் இருந்துவிட்டேன். நிறைய நேரம் நடந்துவிட்டேன். காலெல்லாம் ஒரே வலித்தது. கை வேறு வருத்தமாக இருந்தது. நுளம்பும் கடித்தது. தண்ணீரில் நனைந்தது, குளிர் எல்லாமாகச் சேர்ந்து வதைக்கத் தொடங்கியது.

அப்படியே றைபிளைக் கழற்றி வைத்துவிட்டு வரம்பில் சாய்ந்து படுத்தேன். ஆனால் நித்திரை கொள்ளவில்லை. பக்கத்தில் ஆமி. கொஞ்ச நேரம் அப்படியே படுத்துவிட்டேன். திடீரென்று ஆமி கதைக்கிற சத்தம் பக்கத்தில் கேட்டது. வேகமாக எல்லாத்தையும் எடுத்தேன். சிலவேளை நான் வந்ததைப் பார்த்துவிட்டானோ தெரியாது என்று நினைத்துக் கொண்டு வேகமாக எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு, நிறையப் பற்றைகள் இருந்தது இருந்தது. அதனூடாக மறைந்து மறைந்து போய்க் கொண்டு இருந்தேன்.

இடப்பக்கம் ஊர்மனை வலப்பக்கம் காடு. காட்டுக்கு அருகில் ஒரு மறைப்பாக பார்த்து அப்படியே படுத்துவிட்டேன். விடியப் போகிறது. கொஞ்சநேரம் நித்திரை கொண்டேன். விடிந்த பிறகு எழும்பிப் பார்த்தேன் நான் போற பக்கம் ஒரு ஒற்றையடிப் பாதை ஒன்று போய்க் கொண்டிருந்தது. கொஞ்சத் தூரம் போய்ப் பார்த்தேன். பிறகு திரும்பி வந்து எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போவம் என்று நினைத்தேன். காடுதானே பகல் நகருவோம் என்று வெளிக்கிட்டுப் போனேன். கட்டிடம் ஒன்று வந்தது. அது பழைய கிச்சின். அப்படியே அந்தப் பாதையால் போய்க் கொண்டிருந்தேன். கிரவல் போட்ட பாதை வந்தது. அதால போய்க்கொண்டிருந்தேன்.

அடிக்கடி பாகையைப் பார்த்துப் பார்த்துதான் போவேன். நிறையக் கட்டிடங்கள் தள்ளித் தள்ளி இருந்தன. பெரிய பேஸ் போல இருக்கு. பேசின்ர நடுமையத்திற்கு வந்துவிட்டேன். அந்தக் கட்டிடத்துக்குள் போய்ப் பார்த்தேன். நிறைய வெடிமருந்துகள் செய்கின்ற இடம். அப்பாவின் (தேசியத்தலைவரின்) படம் இருந்தது. எல்லாத்தையும் பார்த்து விட்டு (பிக்ஸ்) ஜி.பி.எஸ் ஐப் பயன்படுத்திக் கொண்டு வெளிக்கிட்டேன். பெரிய காடு. சருகுகளுக்கு மேலால்தான் நடந்து போனேன். ஏனெனில் பாதை மணலாக இருந்தது. தடயம் விடக்கூடாது.

எப்பவுமே தலையில் ஒரு தொப்பி போடுவேன். பேஸ் முடிவு. தடை(பறியல்) இருந்தது. மைன்ஸ்சுக்கான கம்பிகளும் இருந்தது. பாகையைப் பிடிச்சுப் பார்த்தேன். விலத்திவிட்டேன். உடனே பாகையைப் பிடித்துக் கொண்டு போனேன். ஆமியின் பழைய பொசிசன்கள் நிறைய இருந்தது. போய் ஒரு கட்டத்தில் பார்த்தால் முன்னுக்கு பெரிய……….

தொடரும்….

thamilkuyil@gmail.com