நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – பாகம் 10

Home » homepage » நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – பாகம் 10

குளம் ஒன்று இருந்தது. போய்ப்பார்ப்போம் என்று போனேன். தண்ணீர் இடுப்புக்குக் கீழேதான் இருந்தது. அப்படியே குளக்கட்டுக்கு மேலே ஏறிவிட்டேன். ஒரு சத்தம் கூட இல்லை. எல்லா இடமும் பார்த்தேன். குளக்கட்டுக்கு மேலே பழைய கால்த் தடங்கள் இருந்தது. அப்படியே அந்த வழியால் போய்க்கொண்டிருந்தேன். ஆமி எங்கே இருக்கிறான் என்று ஒன்றும் தெரியாது. உடனே காட்டுக்குள் இறங்கினேன்; பாதைபோல் இருந்தது. அந்தவழியால் அவதானித்துக் கொண்டு போனேன். பழைய லைனுகள் இருந்தது. ஒரு பெரிய அருவி இருந்தது. அதைக் கடந்துதான் போகவேண்டும்.

மழை பெய்ததால் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு தடியைக் கையிலெடுத்து ஊன்றி ஊன்றிப் போனேன். ஒரு மாதிரி கரைக்குப் போய்விட்டேன். அது ஒரு பெரிய பாதை. ஆந்தப் பாதையால் போக கிரவல் பாதை ஒன்று வந்தது. நடமாட்டம் எதுவும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒரு நடமாட்டத்தையும் காணவில்லை. ஆனால் மழை பெய்ததால் றோட்டு வடிவா இருந்தது. இரண்டு பக்கமும் பார்த்தேன் பிறகு அந்த றோட்டால பார்த்துப் பார்த்துப் போனேன். அது வளைந்து வளைந்து போனது. அப்படியே போய்க்கொண்டிருந்தேன். றோட்டின் வலது பக்கத்தில் கொஞ்ச உடுப்புக்கள் காயப்போட்டிருந்தது. கிட்டப் போய்ப் பார்ப்போமென்று மெதுமெதுவாகப் போனேன். நான் கொஞ்சத் தூரம் போகவே திடீரென்று இடது பக்கம் பெரிய சத்தமாக சிரித்துக் கேட்டது. நான் உடனே வலதுபக்கமிருந்த காட்டுக்குள் இறங்கிவிட்டேன். மெதுமெதுவாகப் போனேன். ஒரு பாதையொன்று போனது அதுக்குக் கிட்டப் போனேன். அப்பதான் வேலை செய்து விட்டு கொஞ்சப்பேர்(ஆமிக்காரர்) அதிலிருந்து பயறு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

நான் மறைந்திருந்து அவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தின் பின் அவர்கள் சாப்பிட்ட மிச்சப் பயறை அதில் கொட்டிப்போட்டு ஒவ்வொருத்தராக எழும்பிப்போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் போன பின்பு மெதுவாக நகர்ந்து அந்த இடத்துக்குப் போனேன். அவன் கொட்டிய மிகுதிப் பயறைக் கண்டதும் எனக்கு பெரிய சந்தோசமாக இருந்தது. உடனே அதை எடுத்துப் பொக்கற்றுக்குள் வைத்துவிட்டு சுற்றிப் பார்த்தேன். முன்னுக்கு ஒரு பொசிசன் இருந்தது. அதில் ஒருவரையும் காணவில்லை. நன்றாகப் பார்த்துவிட்டு கொஞ்சம் கிட்டப் போய் பார்த்தேன். சாப்பாடு கொழுவியிருந்தது தெரிந்தது. திரும்பவும் நன்றாகப் பார்த்தேன் பிறகு பொசிசனுக்கு கிட்டப் ‘பென்ரில்’(குனிந்து) போய் நிமிர்ந்து பார்த்தேன். முன்னுக்கு சென்றியில் ஒருத்தன் இருந்தான். அவன் நித்திரையாக இருந்திருக்க வேண்டும் நானும் போக அவனும் முழிச்சிட்டான் போலவிருக்கு. ஆனா வேற எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு எட்டு எடுத்து வைத்தால் சாப்பாட்டை எடுத்துவிடுவேன். நிமிர்ந்து நின்ற நான் அவனைக் கண்ட பின் அப்படியே ‘பென்ற்’ பண்ணினேன். அவனுக்கு கடைக்கண்ணால் என்னுடைய அசைவு தெரிந்திருக்கிறது. உடனே திரும்பிப் பார்த்தான். நான் அப்படியே நின்றேன். அவன் என்னைப் பார்த்ததும் பயந்துவிட்டான். அதிர்ச்சியில் அவன் ஒன்றுமே செய்யாமல் நின்றான். அந்தச் செக்கனுக்குள் நான் உடனே திரும்பி ‘பென்ற்’ பண்ணிக் கொண்டு வேகமாக ஓடினேன். அவன் உடனே றைபிளை எடுத்து எனது தலைக்கு ‘எயிம்’ பண்ணிச் (குறிபார்த்து) சுட்டான். அது நான் போட்டிருந்த தொப்பியில் பட்டு தொப்பி சுழன்று கொண்டு போய் எங்கேயோ விழுந்துவிட்டது. நான் நிற்காமல் ஓடினேன். அவன் சத்தம் போட பொசிசனுக்குள்ளேயிருந்த எல்லோரும் சுட வெளிக்கிட்டுவிட்டான்கள். பி.கே எல்லாம் வைத்து சுழற்றுகிறான். நான் கொஞ்சத் தூரம் வந்தபின்தான் நின்று சுற்றும் பார்த்தேன்.

றோட்டால் கதைத்துக் கொண்டு இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்கள். நான் றோட்டைக் கடந்தால் அடிக்கிறதுக்குப் போல. உடனே நான் சுற்றிப் பார்த்தேன். அருவியொன்று இருந்தது. றோட்டுக்குப் பாலம் போடப்பட்டிருந்தது. உடனே அதுக்குக் கீழால் போய் றோட்டைக் கடந்துவிட்டேன். அருவியால் போய் ஒருமாதிரி மேலே ஏறிவிட்டேன். சுரியாகக் கிடந்தது. எனவே தடயமும் விடக் கூடாது. விட்டால் தொடர்ந்து வருவான். அவதானமாகத்தான் போனேன்.

கொடிகள் போகிற என்னைப் பிடிச்சு இழுக்கும். சாப்பிடக் கூட இல்லை. தலைச்சுற்று வேறு. எல்லாத்தையும் சகித்துக் கொண்டு வந்த பக்கமே திரும்பி வந்தேன். விழுந்து எழும்பி பசிக்கு தண்ணியைக் குடித்துக் குடித்து நடந்தேன். ஒரு பெரிய அருவி ஒன்று வந்தது. நன்றாக அவதானித்துப் போட்டு அந்த அருவியில் முகத்தைக் கழுவிவிட்டு, தண்ணியும் எடுத்துக் கொண்டு மேலே ஏறி அருவிக்கு அங்கால் பக்கம் போய்விட்டேன். அவதானமாகப் போனேன். நிறையத் தூரம் நடந்த பிறகு ஒரு கம்பி வேலி வந்தது. மையின்ஸ் ஏரியா. உடனே என்னுடைய றைபிளில் இருந்த றொட்டை எடுத்து மையின்ஸ் கிளியர் செய்து செய்து ஒரு மாதிரி மையின்ஸ் ஏரியாவையும் கடந்துவிட்டேன்.

தொடரும்.

thamilkuyil@gmail.com


%d bloggers like this: