கட்டுரைகள்

நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – பாகம் 11

ஆமியின் பழைய லைன்கள் நிறைய இருந்தது. நான் முட்டினவுடனே ஆமியின் நிறைய ரீமுகள்(அணிகள்) நான் வந்த எல்லா இடங்களையும் தேடியிருக்கிறார்கள். நான் எல்லாத்திற்கும் ஆயத்தமாகவும் அவதானமுமாகத்தான் போனேன். கூடுதலாகப் பாதை வழியாகத்தான் போயிருக்கிறான். பாதையில் நிறைய ‘சூ’ தடங்களும், கண்டோஸ் சாப்பிட்டுவிட்டுப் போட்ட தடயங்களும் கிடந்தது. எல்லாத்தையும் கடந்து, மிகவும் நிதானத்துடன் போய்க் கொண்டிருந்தேன். எங்காவது ஒரு இடத்தில் பதுங்கி இருப்போம் என்று யோசித்தேன். அது பதுங்கக் கூடிய மாதிரி நெரிசலான காடு இல்லை. எனவே நடந்து கொண்டிருப்போம் மறைவிடம் வந்தால் பதுங்குவோம் என்று யோசித்துக் கொண்டே நடந்தேன்.

ஒரு இடத்தில் கிபிர் குண்டு போட்ட பெரிய பள்ளம் இருந்தது. அதுக்குப் பக்கத்தில் மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அதன் கிளைகளுக்குள்ளே போய் இருந்துவிட்டேன். பசி ஒருபக்கம், ஓடி வந்த வேகத்தில் கையில் அடிபட்டது இப்பதான் வருத்தம் தெரிந்தது. காயம் வேறு மணக்குது. என்ன செய்வது அந்த மணம் சாப்பிடாமல் இருக்க தலை சுற்றுவது போலிருந்தது. உடனே தண்ணீர் எடுத்து முகத்தைக் கழுவிப் போட்டு தண்ணீரைக் குடித்துவிட்டு, பொக்கட்டுக்குள்ளிருந்த பயறை எடுத்து, வைத்திருந்த சீனியையும் சேர்த்துச் சாப்பிட்டேன். “அப்பா எத்தனை நாள் இப்படிச் சாப்பாடு சாப்பிட்டு” கொஞ்சம் சாப்பிட்டாலும் நிறையச் சாப்பிட்டது போலவிருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் கொஞ்ச நேரம் அப்படியே இருந்துவிட்டு, காயத்தைக் கட்டுவம் என்று எல்லாத்தையும் எடுத்தேன். சரசரவென்று சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன்.

மூன்று நாய்கள் வந்தன. நாய்க்குப் பின்னால் யாரும் வருகிறார்களா என்று அவதானித்தேன். ஒருவரையும் காணவில்லை. நான் சத்தம் போடாமல் அப்படியே இருந்தேன். மூன்று நாயும் விளையாடியது. விளையாடி விளையாடி ஒரு நாய் எனக்குக் கிட்டே வந்து நின்றது. அது என்னைக் காணவில்லை. ஆனால் என்னுடைய காயத்தின் வாடையைப் பிடித்து எனக்குக் கிட்டே வந்தது. அதைக் கலைத்தேன். திடீரென்று நான் கலைக்க பயந்து போய் வேகமாக ஓட, மற்ற இரண்டு நாயும் அதுக்குப் பின்னால் ஓடிவிட்டது.

நான் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துவிட்டு காயத்தை அவிழ்த்து சுத்தம் செய்துவிட்டு, வேறு துணி வைத்துக் கட்டியபின் எல்லாத்தையும் எடுத்து பைக்குள் வைத்துவிட்டு வெளிக்கிட்டேன். விடிய எங்கே ஆரம்பித்தேனோ அங்கேயே போவோம் என்று வந்த பாதையாலே பார்த்துப் பார்த்து போய்க்………………..
தொடரும்.

thamilkuyil@gmail.com

“நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது” என்ற தொடரை முழுமையாகத் தரமுடியவில்லை. தமிழ்க்குயில் வாழ்கின்ற சூழ்நிலை காரணமாக மிகுதிக் கதையை அனுப்பமுடியாமல் உள்ளதால் இவ்வாரக் கதையைத் தரமுடியவில்லை. சற்றுக் காலதாமதம் ஆனாலும் தொடர்ந்து கதையினை தருவோம் என்பதை மக்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்க்குயில் வாழும் சூழலை எம்மக்கள் நன்கு புரிந்து கொள்வீர்கள் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு. எனவே இந்தத்தாமதத்தை பொறுமையுடன் ஏற்றக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.