கட்டுரைகள்

புலம்பெயர் நாடுகளிலும் வெற்றி பெறுகின்றதா, சிங்கள தேசியவாதம்?

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு தனது அத்தனை கவனத்தையும் புலம்பெயர் தமிழர்கள் மீது திருப்பியது. யுத்த பேரழிவுகளாலும், இராணுவ வன்முறைகளாலும் அச்சத்திற்குள் அடக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்து தற்போதைக்கு எந்த எதிர்க்குரலும் எழப் போவதில்லை என்ற நிலையில், சிறிலங்கா அரசு மீது போர்க் குற்ற விசாரணை கோரியும், ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரியும் தொடர் போராட்டங்கள் நடாத்திவரும் புலம்பெயர் தமிழர்களது பலம் சிங்கள தேசத்தை அச்சுறுத்தியதால், அதற்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிலங்கா புலனாய்வாளர்களும், ஒட்டுக் குழு உறுப்பினர்களும் களம் இறக்கப்பட்டனர்.

சிறிலங்காவின் இந்த நகர்வுகளுக்குப் பின்னணியில் இந்திய உளவு நிறுவனமும் இணைந்து செயலாற்றி வருவது குறித்த தகவல்கள் கொழும்பு ஆங்கில ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உளவு நிறுவனங்களின் புலம்பெயர் தமிழர்கள் மீதான நடவடிக்கைகள் நான்கு பிரிவுகளாகப் பிரித்து, நடைமுறைப்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டது.

1) விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களை அச்சத்தினுள் வைத்திருப்பது. இதற்காக இந்தியா அமெரிக்காவின் உதவியையும் பெற்றுக்கொண்டது. இந்த நகர்வினையடுத்தே புலம்பெயர் நாடுகளெங்கும் தமிழ்த் தேசிய பணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல்களிலும் வைக்கப்பட்டனர். கடந்த சில நாட்களின் முன்னர் பாரிஸ் நகருக்கு வந்திருந்த ஜெர்மனியில் பலம்பெயர்ந்து வாழும் சிங்கள ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். சனல் 4 இல் முதன்முதலில் வெளிவந்த தமிழ் இளைஞர்களைச் சுட்டுப் படுகொலை செய்யும் காணொளிக் காட்சிகளை அதற்கு வழங்கியவர்களும் இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

2) விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்கள் மீதான புலம்பெயர் தமிழ் மக்களது நம்பிக்கையைச் சிதறடிக்கும் நகர்வுக்கு, விடுதலைப் புலிகளின் அதிருப்தியாளர்களும், சில இணையத் தளங்களும் புலனாய்வு அமைப்புக்களால் பயன்படுத்தப்பட்டது. முள்ளிவாய்க்காலின் பின்னர் அணி பிரிந்து கருத்து மோதல்கள் பரிந்தவர்களும் நிலமையின் கொடூரம் புரியாமலேயே இந்தத் தளத்தில் இணைந்துகொண்டனர். ஆனாலும், இந்த உளவியல் போர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை. எனவே, இதற்காக உள்வாங்கப்பட்டவர்கள் மூலமாக, விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களின் பலத்தைச் சிதைப்பதற்கான முயற்சியாக, புலம்பெயர் நாடுகளில் புதிய எதிர்த் தளங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கான பெரும் நிதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

3) புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குவது. இதற்காக, நாடு கடந்த தமிழீழ அரசு குறி வைக்கப்பட்டது. கே.பி. அவர்களால் முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் கே.பி. குழுவினரே பலமான நிலையில் உள்ளார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக திரு. ருத்திரகுமாரன் அவர்கள் பதவி வகித்தாலும், அவர் கே.பி. குழுவினரின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார். இது, சிங்கள – இந்திய புலனாய்வாளாகளின் காய் நகர்த்தல்களுக்கு மிகவும் இலகுவானதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டமிட்ட வகையில் வடிவமைக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கடும்போக்காளாகள் அங்கிருந்து வெளிநகர்த்தப்பட்டார்கள். கடந்த வார இறுதியில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் இந்திய உளவுத் துறையான ‘றோ’ நெருக்கமான தொடர்புகளைப் பெணி வருவதாக கொழும்பு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினை நிராகரிக்க முடியாது.

4) தமிழ்த் தேசிய ஊடகங்கள் மீதான சிதைவு முயற்சிகள். அண்மைக் காலமாக, புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. ‘ஈழம் ஈ நியூஸ்’ என்ற தேசிய இணைய ஊடகத்தின்மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டது. பாரிசிலிருந்து வெளிவரும் ‘ஈழமுரசு’ நிர்வாகி ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் ஊடகங்கள் மீது தேசிய விரோத செய்திகள், கட்டுரைகளை முதன்மைப்படுத்திப் பிரசுரிக்கும்படியும், தமிழீழம் சார்ந்த செய்திகளை இருட்டடிப்புச் செய்யும்படியும் உத்தியோகபூர்வமற்ற வகைளில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதை அதன் வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள்.

இந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தேசியத்திற்கான பாதையில் நேர்படுத்தும் புலம்பெயர் தமிழர்களது விருப்பங்களும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமைதியான முறையில் மாற்றங்களை உருவாக்கி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழீழத்தை மீட்பதற்கான புலம்பெயர் போராட்டக் களமாக மாற்ற முற்பட்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்களது நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, இரண்டாவது அமர்விலிருந்து வெளிநடப்பு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த நிலையிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சிதைவுறுவதை விரும்பாத தமிழ்த் தேசிய உணர்வாளர்களை வெளியேற்றும் முயற்சியில் திரு. ருத்திரகுமாரன் நிர்ப்பந்திக்கப்பட்டார். இதனால், இரண்டாவது அமர்வில் விவாதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் யாப்பு மீது பதவிப் பிரமாணம் செய்யும்படி தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. இரண்டாவது அமர்வில் வெளிநடப்புச் செய்த 38 உறுப்பினர்கள் தவிர, அந்த அவையில் 45 பேரே இருந்த நிலையிலும், அங்கு அயசியல் யாப்பு மீதான பிரேரணையோ, அங்கீகாரமோ நடைபெறவில்லை என அதில் சமூகமளித்திருந்த மக்கள் பிரதிநிதிகளே தெரிவித்துள்ள நிலையில், அரசியல் யாப்பு மீதான பதவிப் பிரமாணத்தை விலியுறுத்துவதன் ஊடாக தமிழ்த் தேசியத்திற்காகப் பாடுபடும் மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றும் முயற்சியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள – இந்திய சதி வலையில் சிக்கியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை மீட்டெடுத்து, அதனை முழுமையான தமிழீழ விடுதலைக்கான தளமாக முன்னெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அணி பிரியாது ஒன்றாகச் செயற்பட்டு சிங்கள – இந்தியச் சதி வலைகளை அறுத்தெறியும் பெரும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது. இந்தப் போர்க் களத்திலும் சிங்கள தேசியம் வெல்லுமானால், தமிழீழம் என்பது கனவாகவே கலைந்துவிடும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தேசியத்தின் பெயரால் திரு. ருத்திரகுமாரனிடம் புலம்பெயர் தமிழர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும்.

1) மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் தெரிவுகளை அங்கீகரிக்க வேண்டும். அல்லது, உடனடியாக அந்தத் தேர்தல் தொகுதிகளில் மீள் வாக்களிப்பு நடாத்த வேண்டும்.

2) அச்சுறுத்தப்பட்டு அல்லது வற்புறுத்தப்பட்டு இராஜினாமா செய்ய வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மீண்டும் உள்வாங்க வேண்டும்.

3) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தேசிய பாதையில் கொண்டு நகர்த்த முற்பட்டு, முரண்பாடு காரணமாக வெளிநடப்புச் செய்த பிரதிநிதிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

4) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைக்கான 115 உறுப்பினர்களுக்கான தேர்தல்களும் நியாயமாக நடாத்தி முடிக்கப்பட்ட நிலையில், புதிதாகக் கூட்டப்படும் அமர்வில் அரசியல் யாப்பு முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

5) புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களுடன் முரண்பாடுகளையும், மோதல் போக்குக்களையும் நிறுத்தி, அனைத்துத் தளங்களுடனும் இணைந்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் போர்க் களமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

6) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்விலிருந்து முரண்பாடு, அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய கனடிய உறுப்பினர்கள் மீதான அசிங்கமான பிரச்சாரங்களையும், மிரட்டல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் முகமாக, வெளிப்படையான கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

7) நாடு கடந்த உறுப்பினர்கள் சிலர் மேற்கொள்ளும் கட்டுப்பாடுகளை மீறிய நடவடிக்கைகள் ஏனைய உறுப்பினர்களைப் புண்படுத்துவதுடன், குழு நிலைச் செயற்பாடுகள் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்மீதான மக்களது நம்பிக்கையைத் தகர்த்து வருகின்றது. அவர்களது குழுநிலைப் போக்கை நிறுத்தி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அனைத்துத் தமிழீழ மக்களுக்குமான அதியுயர் ஜனநாயக பீடமாக உருவாக்க வேண்டும்.

இரண்டாவது அமர்வில் இடம்பெறாத அரசியலமைப்பு அங்கீகாரத்தின்மீது பதவிப் பிரமாணம் நடாத்தக் கோரும் நேர்மையற்ற, முறைகேடான அச்சுறுத்தல்களை நிறுத்த, தமிழ்த் தேசிய உணர்வாளாகளையும் இணைத்து, நாடு கடந்த தமிழீழ அரசை தேசியம் நோக்கிய பாதையில் நேர்படுத்த வேண்டும்.

தமிழ்த் தேசிய தளங்களையும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் தொடர்ந்தும் நிராகரிப்பதன் மூலம், சிங்கள இனவாத தேசிய சிந்தனை புலம்பெயர் நாடுகளிலும் வெற்றி பெறுவதற்கு திரு. ருத்திரகுமாரன் அவர்களும், அவரைச் சார்ந்தவர்களும் காரணமாக இருக்கக் கூடாது என்பதை, எமது தாயகத்தின் விடுதலைக்காகத் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்கள் பெயராலும், மக்கள் பெயராலும் வேண்டுகின்றோம்.

– சுவிசிலிருந்து கதிரவன்