தமிழீழம்

த.தே.கூட்டமைப்பு மேற்கொள்ளும் பேச்சுக்கள் சிறிலங்கா அரசை காப்பாற்றவே வழிவகுக்கும் – கிருபாகரன்

எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் பேச்சுக்கள் பயனற்றவை. அது சிறீலங்கா அரசை காப்பாற்றவே வழிவகுக்கும் என பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் எஸ். வி கிருபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் லிபிய விவகாரம் முக்கிய இடத்தை பிடிப்பதால் சிறீலங்கா அரசு தப்பிப்பிழைக்கும் சாத்தியங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் கடந்த 28 ஆம் நாள் ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 16 ஆவது அமர்வில் லிபியா தொடர்பில் தான் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.

பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டன் உட்பட பல மேற்குலக இரஜதந்திரிகள் லிபியா தொடர்பில் தான் அதிக கவனம் எடுத்துள்ளனர்.

ஆனால் உலகில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் கிளிங்டன் உறுதியாக உள்ளதை காணமுடிகின்றது.

தற்போதைய அமர்வுகளில் சிறீலங்கா தொடர்பில் கடுமையான தீர்மானம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லிபிய விவகாரம் அதனை மழுங்கடித்துவிடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

மேலும் நேற்று முனத்தினம் உரையாற்றிய சிறீலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இரண்டு சுற்று பேச்சுக்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அனைத்துலக சமூகத்தை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.

அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசு தான் தப்பிப்பிழைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசை காப்பாற்றும் இந்த நிகழ்வு துன்பமானது. எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட்டமைப்பு மேற்கொள்ளும் பேச்சுக்கள் பயனற்றவை. அது சிறீலங்கா அரசை காப்பாற்றவே வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.