டென்மார்க் புலம்பெயர்

டென்மார்க் தமிழர்களின் முறைப்பாட்டை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பதிவுசெய்துள்ளது.

திரு பார்த்தீபன் தம்பிராஜா மற்றும் மனோகரன் மனோரஞ்சிதன் உடன் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற பிரதம வழங்க்கறிஞர் Luis Moreno-Ocampo (படம்: TamilVoice Danmark )

தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரியும் சிறிலங்கா அரசு மீது விசாரனை செய்யுமாறு வேண்டி கடந்த ஒக்ரோபர் மாதம் தொடக்கம் தமது வழக்கறிஞரால்; அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பதில் எதுவும் கிடைக்காததால் டென்மார்க்கில் இருந்து திரு பார்த்தீபனும் திரு. மனோகரனும் 17 நாட்கள் மிதிவண்டியில் பயணித்து அனைத்துலக நீதிமன்றத்திடம் தமது முறைப்பாட்டை போர்க்குற்றவியல் நாளன்று நேரடியாக கையளித்திருந்தனர்.

தபால் முலம் வழக்கறிஞரால் அனுப்பப்பட்ட முறைப்பாடுகளுக்கு எதுவித பதிலும் அனுப்பாத அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற பிரதமவழக்கறிஞர் அலுவலகம் இப்பொழுது டென்மார்க் தமிழர்களின் முறைப்பாட்டை தாம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன். ரோம் உடன்படிக்கைக்கு அமைய முறைப்பாட்டை ஆராய்ந்து பதில் அனுப்புவதாகவும் டென்மார்க் தமிழர்களின் வழக்கறிஞருக்கு மே 23ம் நாள் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக திரு பார்த்தீபன் தம்பிராஜாவும் மனோகரன் மனோரஞ்சிதனும் எமக்கு தெரிவித்துள்ளனர்.

அண்மையில் அய்னா பாதுகாப்பு சபையால் பரிந்துரைக்காமல் லிபியா நாட்டு தலைவர்கள் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற பிரதம வழங்க்கறிஞர் வழக்கு தொடர்ந்தமையை திரு மனோகரனும் பார்த்தீபனும் தம்மை சந்தித்த அதே அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற பிரதம வழங்க்கறிஞரிடம் எடுத்துக்காட்டியிருந்தனர்.

தமது வழக்கறிஞருடன் கலந்தாலோசித்ததும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பான மேலதிக விபரங்களையும் இனப்படுகொலை புரிந்த சிறிலங்காவிற்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமனறில் பதியப்பட்டுள்ள முறைப்பாட்டின் பதிவிலக்கத்தையும் தாம் ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனப்படுகொலையின் ஆதாரங்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் அனைவரும் வழங்கக்கூடிய வழிமுறைகளையும் விரைவில் தமது வழக்கறிஞருடன் கலந்தாலோசித்ததும் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

மே 18ம் நாள் தாம் வழங்கிய தமது 3வது முறைப்பாட்டை உடனடியாக பதிவு செய்து கடிதம் அனுப்பியமையானது போர்க்குற்றவியல் நாளன்று அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் கூடிய அனைத்து மக்களினதும் பலம் தான் என கூறிய திரு பார்த்தீபனும் மனோகரனும் தமது நீதிக்கான மிதிவண்டிப்பயணத்தின் போது ஆதரவளித்த அமைப்புக்களிற்கும் மக்களிற்கும் தமது நீண்ட மிதிவண்டிப்பயணித்தின் போது தம்முடன் தொடர்புகொண்டு அதரவும் ஊக்கமும் அளித்த தமிழ்நாட்டு உறவுகளுக்கும் அமைப்புக்களுக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

1948ம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட இனப்பபடுகொலை புரிந்த சிறலங்கா அரசுகளையும் அதற்கு உதவிபுரிந்த ஒட்டுக்குழுக்களையும் நீதியின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்ட எமது இனத்திற்கு நியாயம் கிட்டும் வரை தமது போராட்டங்கள் தொடரும் எனவும் தமது அடுத்த நீதிக்கான போராட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.