சிறிலங்கா

கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது சிங்களக் கைதிகள் தாக்குதல்

கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற கலவரத்தின் போது மூன்று தமிழ்க் கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கையில் கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதி ஒருவரை வேறு பிரிவுக்குச் சிறைச்சாலை அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர். குறிப்பிட்ட சிங்களக் கைதியின் மாற்றத்துக்குத் தமிழ்க் கைதிகளே காரணம் என்று கூறி ஆத்திரமடைந்த ஏனைய சிங்களக் கைதிகள் அங்கிருந்த தமிழ்க் கைதிகள் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக மூன்று தமிழ்க் கைதிகள் பலத்த காயத்துக்கு இலக்காகினர். இதனையடுத்து அனைத்துத் தமிழ்க் கைதிகளும் தற்போது கொழும்பு, விளக்க மறியற்சாலையின் ஐ. ஈ. பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது