பிளேக்கிடம் பொல்லைக் கொடுத்து அடி வாங்கினார் டக்ளஸ்.

Home » homepage » பிளேக்கிடம் பொல்லைக் கொடுத்து அடி வாங்கினார் டக்ளஸ்.

வடக்கில் துணை ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார்.

மூன்று நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து தான் கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிளேக், துணை ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் அதிகளவில் தமிழ் காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் நீண்டகாலத்துக்கு சிறிலங்கா படைகளை அங்கு நிலை கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் ஈபிடிபி பலமான துணைஆயுதக்குழுவை வைத்திருப்பதாகவும் பிளேக் குறிப்பிட்டதுடன், துணை ஆயுதக்குழுக்கள் பொதுமக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி தனது பலத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களைத் தான் சந்திப்பதை தடுத்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் பிளேக் கூறியுள்ளார்.

மிகக் குறைந்தளவு அவசரகாலச்சட்டவிதிகளே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும் நடைமுறையில் இருப்பதால் அவசரகாலச்சட்ட நீக்கத்தின் பலனை மக்களால் அனுபவிக்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பாகவும் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் சிறிலங்கா அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுக்களை மீளத் தொடங்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அறிக்கை வர முன்னரே அதுபற்றி முன்கூட்டியே கருத்து வெளியிட முடியாது என்று கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமெரிக்கா எதிர்பார்த்திருப்பதாகவும் ,அதில் என்ன உள்ளது, என்ன பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது என்பது பற்றி அது வெளியான பின்னர் முடிவுக்கு வருவோம் என்றும் பிளேக் தெரிவித்துள்ளார்.

அதைச் செய்யும் சில பொறிமுறைகளை உறுதி செய்வதற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்றும், ஆனாலும், அத்தகைய அழுத்தங்கள் தேவைப்படும் என்று தாம் நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நண்பர்களை மிரட்டுவது தமது வேலை அல்ல என்று கூறியுள்ள பிளேக், அனைத்துலக மனிதாபிமானச் சட்டமீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு நம்பகமானதொரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலக சமூகத்துடன் சிறிலங்காஇணங்கிச் செயற்பட வேண்டும் என்றும்,குறிப்பாக ஐ.நாவுடன் சிறிலங்கா சாதகமானமுறையில் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா அரசகுழு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் பற்றிய தகவலை வெளியிடும் என்று நம்புவதாகவும் பிளேக் கூறியுள்ளார்.

புதிய மட்டத்தில் பாதுகாப்பை அதிகரிக்க காரணமாகியுள்ள கிறீஸ் பேய்களின் பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிளேக், ஊடகவிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.


%d bloggers like this: