கட்டுரைகள்

கொத்துரொட்டி : பிரித்தானியாவில் இம்முறை இரு இடங்களில்..!

புலத்தில் தொலைந்து போன அடையாளங்களை புலம் பெயர்ந்து தக்க வைக்கும் பணியில் இந்த கொத்துரொட்டிக்கு தொடர்ந்தும் ஒரு முக்கியத்துவம் இருந்தே வருகிறது. எங்கெல்லாம் ஈழத்தமிழர்கள் ஒன்று கூடுகிறார்களோ அங்கெல்லாம் தவிர்க்கமுடியால் உள்நுளைந்து கொள்கிறது இந்த கொத்துரோட்டி. கொத்து ரொட்டியின் இந்த வரலாற்று சிறப்பம்சம் ஏனைய சமூகங்களிடையே ஈழத்தமிழரின் உணவுப் பழக்கவழக்கங்களின் தனித்தன்மையை பறைசாற்ற தவறவில்லை என்பதில் எந்த ஜயமுமில்லை..!

கொத்து ரொட்டி ஒர் ஆடையாளச் சின்னமாக்கப்பட்டமைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஆற்றிய பணி அளப்பரியது. ஒருங்கிணைக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் கொத்துரொட்டியின் இருப்பை உறுதிப்படுத்த அவர்கள் தவறியிருக்கவில்லை. வருடாந்தம் நாடாத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் வெறுமனே கொத்துரொட்டியும் ஒடியற்கூழும் விற்பனை செய்யும் நிகழ்வுகளாகவேயன்றி, சர்வதேச அளவில் இடம்பெறும் விளையாட்டு போட்டிகளுக்கோ, நிகழ்வுகளுக்கோ ஈழத்தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு விளையாட்டு வீரனையாவது தயார்படுத்தம் முயற்சியில் அவை நாட்டம் காட்டவில்லை என்பதை காட்ட அவர்களது கொத்து ரொட்டி விற்பனையின் வசூல் சாதனை ஒன்றே போதுமாகும்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கலைஞர்களை கொண்டு நடாத்தப்படும் கலை நிகழ்வுகளில் எம்மவர் அம்சங்கள் இல்லாமல் போய்விடக்கூடாது எனும் குறையை தீர்த்துவைக்கும் எம்மவர் அம்சமாக கொத்துரொட்டியே என்றைக்கும் அலங்கரிக்கிறது. ஈழத்தமிழரின் கலை உணர்வுக்கு தீனி போட இந்திய கலைஞர்களால் மட்டும் முடியும் என்பது இத்தகைய நிகழ்வுகளை காலங்காலமாக ஒழுங்குபடுத்துபவர்களின் அசையாத நம்பிக்கை. எம்மவர் ஊடகங்களும் அதற்கு தூபம்போட தவறியிருக்கவில்லை.

எமது தொலைக்காட்சிகளுக்கும் ஏனைய ஊடகங்களுக்கும் பிரேம்கோபாலையும் பிரேமினியையும் இனங்கண்டு கொடுக்க தென்னிந்தியாவின் “ஜோடி நம்பர் வன்” தேவைப்படுகிறது. யெஜபாலன் எனும் ஓர் ஈழத்துக்கவிஞரை இனங்காண “ஆடுகளம்” எனும் திரைப்படம் துணைபுரிய வேண்டியிருக்கிறது. இவ்வாறு தென்னிந்திய ஊடகங்கள் இனங்கண்டு கொடுத்த பின்னர் “நம்மவர்கள்” என கொண்டாடி எமது ஊடகங்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றன. தென்னிந்தியாவின் திரைப்படங்களை புலம்பெயர் நாடுகளில் சந்தைப்படுத்த பெரும் ஆதரவாய் இருக்கும் எமது ஈழத்தமிழ் சமூகம், £8.50 கொடுத்து ஓர் இந்திய சினிமாவை ரசிக்க தயாராய் இருப்பதும், வெறுமனே £5க்கு விறகப்பட்ட ஈழத்து இசைக்கலைஞன் ஒருவனின் இசைத்தொகுப்பை நூற்றுக்குட்பட்டவர்களே வாங்கத்தலைப்பட்டிருப்பதும், அதை ஊக்குவிக்க வேண்டிய ஊடகங்கள் பாராமுகமாய் இருந்தததும் வேதனைக்குரிய விடயமாகும்.

மேற்படி சம்பவங்களுக்கும் கொத்து ரொட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போதும் கார்த்திகை 27 நெருங்குவதாலும், எழுச்சி நிகழ்வின் முக்கிய அம்சமாய் கொத்து ரொட்டி இருப்பதாலும், நிகழ்வை நடாத்துவதில் சில்லறைத்தனமான பிளவுகள் இருப்பதாலும் கொத்து ரொட்டியை மீளவும் தொட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது..!

கொத்து ரொட்டி அதிகளவில் விற்கப்படும் ஒரு நிகழ்வாக தேசிய நினைவெழிச்சி நாள் பிரித்தானியாவைப் பொறுத்தளவில் இருந்துவருகிறது. இதை கொத்து ரொட்டி விற்கும் நிகழ்வாக காட்டியதில் தவறேதுமில்லை என்பதற்கு இதுவரை நடந்த நிகழ்வுகளே சான்று. தாயக கனவுடன் சாவினை தழுவியவர்களுக்கு, இந்த வெளிநாட்டு கனவுடன் விசாவினை தழுவியவர்கள் எடுக்கும் நினைவு நாள் என்பது, அவர்களை தியாகங்களை கொச்சைப்படுத்தும் கேளிக்கை நிகழ்வு என பல வேளைகளில் நிரூபணமாகிறது.

நிகழ்வின் ஆரம்பத்தில் அனைவரும் கைகளில் தீபமேந்தி அகவணக்கம் செலுத்தும் பொழுதுகளில் அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும் நிகழ்வு அதன் பிற்பாடு ஒரு களியாட்ட மண்டபத்தை நினைவூட்ட தவறுவதில்லை. கொத்து ரொட்டிக்காய் நீண்டிருக்கும் வரிசையின் நீளம் எப்பொழுதுமே மலர்தூவுவதற்காய் நீண்டிருக்கும் வரிசையை விட நீளமாயிருக்கும் என்பதிலும், மேடையில் ஒலிக்கும் உரைகளை விட குசல விசாரிப்புகளின் ஒலி அதிகமாயிருக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.

இப்படி எழுச்சி நிகழ்வு எனும் உணர்வை கொண்டுவர தவறும் வகையில் எற்பாடு செய்யப்பட்டிருப்பினும் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்களை ஒன்று திரண்டு தங்கள் மண்ணுக்காக போராடியவர்களுக்கு மரியாதை செலுத்த ஒரு வாய்ப்பை வழங்கியிருந்தார்கள் இதுவரை காலமும். இம்முறை அது சாத்தியப்பட போவதில்லை என்பது நன்கு தெரிகிறது. இரு சாரார் இரு வேறு இடங்களில் தனித்தனியே எழச்சி நிகழ்வை நடாத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து பொது மக்களுக்கு அறைகூவல் விடுவதுடன், ஒவ்வொரு தரப்பும் மறு தரப்பக்கு துரோகிகள் எனும் பட்டத்தை வழங்க தவறவில்லை.

நினைவெழுச்சி நாள் வெறும் வசூலீட்டும் ஏற்பாடாக கொள்ளப்பட்டு, அந்த வசூலை கைப்பற்ற துடிக்கும் போட்டியில் களமிறங்கியிருக்கின்றன தலைமைச் செயலகமும், அனைத்துலகச் செயலகமும். என்ன செயலகமாய் இருப்பினும் இத்தகைய கட்டமைப்புக்கள் உருவாவதற்கு காரணமாயிருந்த மறவர்களை பூசிக்க வேண்டிய நாளை கூறுபோடுதல் என்பது கேவலமான விடயமே. புலம் பெயர் போராட்டங்கள் அனைத்தும் ஓய்ந்துள்ள நிலையில், இத்தகைய எழுச்சி நிகழ்வுகளில் பெருந்தொகையானோர் ஒன்று திரளகூடிய வாய்ப்புக்களை கூறுபோடுவதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கும் பெரும்பான்மை சமூகத்துக்கும் புலம்பெயர் வாழ் மக்களின் பலத்தை குறைத்துக்காட்டிவிடும் என்பது இந்த தலைமைகளுக்கு புரியாமலிருப்பது வேதனையே..!

வெறும் சுயலாபங்களுக்காகவும், நிகழ்வின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்காகவும் இவர்களுக்குள் உருவாகியுள்ள இந்த போட்டி எந்தவகையிலும் தமிழ் தேசியத்தை ஆரோக்கியமான பாதையில் நடத்திச்செல்லாது. எனினும் சில ஊழல்களை வெளிப்படுத்த உதவிக்கொண்டிருக்கிறது. 35p பெறுமதியா கார்த்திகைப்பூ ஒன்றை 75p என பற்றுச்சீட்டில் குறிப்படிடும்படி விநியோகஸ்தரை நிர்பந்தித்து அவ்வாறே கணக்கு காட்டி கொள்வனவு செய்து வந்துள்ளமை இம்முறை புதிதாக கொள்வனவு செய்ய சென்றவர்களின் கவனத்துக்கு வந்திருக்கிறது. இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் பூ £5க்கு மண்டபவாயிலில் விற்பனையாவது தெரிந்ததே. தங்கள் மதிப்பற்ற இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தூவப்படும் பூக்கள் சுழற்சி முறையில் தூவப்படுகின்றன என்பது இன்னொரு கேவலமான விடயம. ஏனெனில் கடந்தவருடம் 4500 பூக்களே கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் 19000 பூக்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இத்தகைய சில்லறைத்தனமான பணத்தை மட்டுமே நோக்காக கொண்ட ஊழல்கள் பலவும் இப் பிரிவினையின் மூலம் வெளிப்பட்ட வண்ணம் உள்ளன.

மேற்படி ஊழல்களை வெளிக்கொணர்வதற்கும், அதை விமர்சிப்பதற்கும் இது உரிய தருணமல்ல. புலத்திலே துயிலுமில்லங்கள் உருக்குலைக்கப்பட்ட நிலையில் மறவர்களை நினவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு புலம்யெர் மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம். அதை உரியமுறையில் ஒருங்கிணைக்க தவறி நிற்கும் தலைமைகளிற்கு துணைபோவது எழிச்சி நிகழ்வுகள் எனும் வியாபார கொட்டகைகளின் எண்ணிக்கையை வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கச்செய்யும். எனவே இந்த முயற்சிகளை முறியடிக்கும் விதமாக இம்முறை அவரவர் வீடுகளில் இருந்தவாறு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவதை தவிர சிறந்த வழியெதும் இருப்பதாய் தெரியவில்லை.

இது புறக்கணிக்குமாறு கூறும் கோரிக்கையல்ல. வேட்டைக்காரன் பறக்கணிப்பு, அசின் பறக்கணிப்பு என பல புறக்கணிப்பு கூச்சல்கள் காலத்துக்கு காலம் வந்தவண்ணமேயுள்ளன. அனால் தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் பூசிக்கும் இந்த நாளை பறக்கணிக்கவே முடியாது. இதை வியாபாரமாக்க முற்படும் தலைமைகளை புறக்கணித்தல் இங்கே கடமையாகிறது. ஏனெனில் இம்முறை பிரிந்து நின்று வசூலில் வெற்றி கண்டார்களாயின் அடுத்தவருடம் புதிதாக இன்னும் சில பிரிவுகள் உருவாகும். அத்துடன் பிரித்தானியாவில் ஆரம்பித்துள்ள இந்த நோய் எனைய புலம்பெயர் நாடுகளுக்கும் தொற்றிக்கொள்ளும்.

பிரிந்து நிற்கும் தலைமைகள் பிரிந்தே நிற்கட்டும். தங்களை நிலைப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தியாகங்களை கொச்சைப்படுத்தவும் தயங்கவில்லை என்பதை நடந்து முடிந்த தியாக தீபம் திலீபன் அண்ணாவின் வணக்க நிகழ்வு அறிவிப்பு வெளியீட்டில் பிரசரிக்கப்பட்டிருந்த வாசகம் ஒன்று எடுத்துக்காட்டியிருந்தது. “பிரத்தானியாவில் இது தவிர்ந்த வேறு வணக்க நிகழ்வுகளை எற்பாடு செய்பவர்கள் துரோகிகளாக கொள்ளப்படுவர்”..! எனியும் இவ்வாறே நிகழ்வகள் பிளவுபட்டு இடம்பெற போகின்றன. இவற்றுக்கு மதிப்பளித்து இவர்களது செயற்பாடுகளுக்கு துணை போவதன் மூலம் வரலாற்று தவறொன்றுக்கு வழிகோலாமல் தமிழ் தேசியத்தை நெஞ்சில் நிறுத்தி மறவர்களை நினைவுகூரும் இந்த எழுச்சி நாளில் அவரவர் வீடுகளில் இருந்தவாறோ அல்லது பொருத்தமான வெளிப்பாடுகளின் மூலம் அவர்களை நினைகூர்வதே சிறந்த வழிழுறையாயிருக்கும்.

தலைமைகள் தங்கள் சுயலாபங்களுக்காக பிரிந்து நின்று கொண்டு, பிரித்து வைத்த பெருமையை றோவுக்கும் பெரும்பான்மை சக்திகளுக்கும் கொடுப்பதையே காலம் காலமாய் செய்துவருகின்றன. இத்தகைய பிரிவினைகள் எனியும் தொடரும். ஆனால் துணைபோகாமலிருப்பது ஒவ்வோர் தமிழனினதும் கடமையாகிறது. கொத்து ரொட்டி வீட்டிலேயே செய்யக்கூடியதாயிருக்கையில் விற்பனையை ஊக்குவிக்கவேண்டிய அவசியம் இல்லை..!

ஆண்ட இனம் மீளவும் ஆள நினைப்பதில் தவறென்ன எனக்கேட்கும் ஓர் தேசிய இனத்தின் வாரிசுகள் அந்த மண்ணை காக்க புறப்பட்ட மறவர்களை நினைவுகூரும் நிகழ்வை வியாபாரமாக்கிய கேவலத்தை எண்ணி நோகும் அதே வேளையில், ஈழத்து தமிழரின் அடையாளமாய் இந்த கொத்துரொட்டி என்றும் தன்னை நிலைநாட்டிக் கொள்ளும் என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்..!