விடுதலைப் புலிகளை தவறாக எடைபோட்டது அனைத்துலக சமூகம் – றிச்சர்ட் ஆர்மிரேஜ்

Home » homepage » விடுதலைப் புலிகளை தவறாக எடைபோட்டது அனைத்துலக சமூகம் – றிச்சர்ட் ஆர்மிரேஜ்

சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் நடந்தேறிய சில சம்பவங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் ஆர்மிரேஜ் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சியில் நோர்வேயின் பங்களிப்புத் தொடர்பான மீளாய்வு அறிக்கையை ஒஸ்லோவில் வெளியிடும் நிகழ்வில் பேசும் போதே ஆர்மிரேஜ் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கா, மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் காணப்பட்ட ‘தனிப்பட்ட விரோதப் போக்கு’, புலிகளின் தலைவர் பிரபாகரன் போதிய நுண்திறனற்றிருந்தமை, அவர் சிறந்த தீர்மானம் எடுக்க முடியாதவராக இருந்தமையால் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அன்ரன் பாலசிங்கத்தை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சியில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எவ்வாறு வெற்றியைப் பெற்றுக் கொண்டது போன்ற பல சுவாரசியமான தகவல்களை றிச்சார்ட் ஆர்மிரேஜ் வெளியிட்டுள்ளார். அன்ரன் பாலசிங்கம் பயங்கரவாத அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்த போதும், அமெரிக்காவுக்கு அவரை அழைப்பதில் தனது நற்பெயரைப் பயன்படுத்திக் கொண்டதாக ஆர்மிரேஜ் குறிப்பிட்டுள்ளார்.

“அன்ரன் பாலசிங்கத்தை அமெரிக்காவுக்கு அழைப்பதற்கான அனுமதியை இராஜாங்கத் திணைக்களம் வழங்கியிருந்த போது, சிறிலங்காவில் இராணுவ நிலைகள் தாக்கப்பட்டன.

இதனால் அன்ரன் பாலசிங்கத்தின் அமெரிக்கப் பயணத்துக்கு மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குகள் அத்துடன் முடிவுக்கு வந்தன.

அப்போது சிறிலங்கா அதிபராகக் கடமையாற்றிய சந்திரிகா குமாரதுங்கவுக்கும் , பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் போதிய ஒத்துழைப்பின்மை, தனிப்பட்ட விரோதம் ஆகியன நிலவியதுடன், பிரபாகரன் இந்த விடயத்தில் போதியளவு அறிவைக் கொண்டிராமை, மோசமான தீர்மானம் எடுத்தமை போன்றன சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளுக்குப் பெரிதும் முட்டுக்கட்டையாக அமைந்திருந்தன“ என்று ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார்.

“முன்னரங்க நிலைகளுக்கு என்னை அழைத்துச் சென்ற ஜெனரல் சரத் பொன்சேகா உலங்குவானூர்தி நின்ற இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையிலும், பின்னர் இருவரும் உலங்குவானூர்தியில் பயணித்த போதும், பின்னர் முன்னரங்க நிலையில் நின்றவாறும் ‘அரசியற் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கிடையாது என்றும், ஆனால் இராணுவப் பிரச்சினை ஒன்றுக்கு இராணுவத் தீர்வு உள்ளது’ என்றும் என்னிடம் கூறினார்.

இந்த இருவிடயங்களிலும் உள்ள வித்தியாசத்தைத் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை“ என்றும் ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சமாதான முயற்சிகளை மேற்கொண்ட போது அனைத்துலக சமூகம் கோபத்திற்கும் குழப்பத்திற்கும் உள்ளாகியிருந்தமைக்கு ‘தீவிரவாதம்’ என்ற ஒரேயொரு விடயமே பிரச்சினையாக இருந்தது.

‘அனைத்துலக சமூகத்தின் பெரும்பகுதி தீவிரவாதத்தை முழுமையாக விடுதலைப் புலிகளே பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதியிருந்தனர்’ என்றும் ஆர்மிரேஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவ்வாறான கருத்து நியாயமற்றது – மேலோட்டமானது என்றும் ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சமூகத்தின் மத்தியில் சிறிலங்கா தொடர்பாக மிகவும் குறைந்த அக்கறையும் புரிந்துணர்வுமே இருந்துள்ளன.

சிறிலங்கா விடயத்தில் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதிலும், இங்கு இடம்பெற்ற பிரச்சினைகள், குழப்பங்கள் போன்றவற்றைத் தெளிவுபடுத்துவதிலும் நோர்வே பெரும் பங்காற்றியிருப்பதாகவும் ஆர்மிரேஜ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நோர்வேயின் முயற்சியைத் தான் வியந்து பாராட்டுவதாகவும், ‘மிலிந்த மொறகொட தனக்குள்ள தனிப்பட்ட தகைமையுடன் இங்கிருந்திருந்தால், ஏன் நானும் கூட வேலையற்ற குடிமகனாகவே இருந்திருக்க வேண்டும்’ என ஆர்மிரேஜ் மேலும் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.


%d bloggers like this: