சிறிலங்கா

கசிந்தது "நல்லிணக்க" ஆணைக்குழு அறிக்கை?

மகிந்தாவையும் கோத்தாவையும் காப்பாற்ற ஒரு நூறு ‘வீரர்கள்’ சில ‘அதிகாரிகள்’ குற்றம் சாட்டப்படுவர்!

சில மேஜர் தரத்தில் உள்ள அதிகாரிகளையும் நூறு போர்வீரர்கள் அளவிலும் சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறியதாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்படும்.

இதன் மூலம் தனக்கும் தனது சகோதரர் கோத்தா மீதும் உள்ள சர்வதேச அழுத்தம் குறையும் என மகிந்தா நம்புகிறார். இது தமது மேலே விதிக்கப்படக்கூடிய பிரயாணத்தடை, சொத்துக்கள் மீதான உறைநிலை என்பன விதிக்கப்படாது எனவும் நம்புகிறார்கள்.

கோத்தாவின் வலதுகர இராணுவ புலனாய்வு அதிகாரியான கபில ஹெந்தவிதாரண, சனல் நாலு வீடியோ மற்றும் கேணல் இரமேஷ் அவர்களின் கொலைகளின் பின்னல் உள்ள வீரர்களை அடையாளம் காண பணிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வீடுகளும், நிதி உதவியையும் வழங்க இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

குற்றம் சுமத்தப்படாமல் சிறை வைக்கப்பட்டிருக்கும் புலி வீரர்கள் மீது குறம் சுமத்தப்பட்டு வழக்கு நடத்தப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஒரு பகுதியினர் பின்னர் மகிந்தா மூலம் ‘மன்னிக்கப்படுவார்கள்’ எனவும் கூறப்படுகின்றது. இது புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பை குறைக்க உதவும் என மகிந்தா நம்புகிறார்.

அரசு மீது ‘இலேசான’ குற்றச்சாட்டே முன்வைக்கப்பட்டுள்ளது.

கோத்தா ‘சரணடையும் யாவரையும் சுடு’ என்ற ஒலிப்பதிவு அமேரிக்கா இராஜாங்க திணைக்களத்திடம் இருப்பதும், அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளிடம் ஐ.நா. அதிகாரிகளுக்கும் பாலித கொஹன மற்றும் சிலருக்கும் இடையிலான ‘சொல்லுகள் பரிமாற்றமும்’ இருப்பது சிங்கள அரசுக்கு காட்டப்பட்டதை அடுத்தே சிங்களம் இந்தளவுக்கு என்றாலும் இறங்கி வந்துள்ளது.

அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் பெரிய தலையிடியாக உள்ளது என மகிந்தா கூறியுள்ளதுடன் தனது அதிகாரிகளை ‘நட்பு நாடுகளுக்கு’ மட்டுமே பிரயாணத்தை மேற்கொள்ள கேட்டுள்ளார்.
வர இருக்கும் ஐ.நா. மனித உரிமை தொடர், மற்றும் இந்த அறிக்கையை பற்றி ‘நல்ல பெயரை’ வரவைக்க பிரச்சாரத்திற்கு ஒரு மேற்குலக பரப்புரை நிறுவனத்தையும் நாடியுள்ளது சிங்களம்.