சுயநலத்தின் எல்லை எங்குவரை செல்லும்? -தாயகத்திலிருந்து ஒரு மடல்

Home » homepage » சுயநலத்தின் எல்லை எங்குவரை செல்லும்? -தாயகத்திலிருந்து ஒரு மடல்

 ( நன்றி : TamilCNN ) உலகத்தில் எந்த இனமும் அனுபவிக்காத அழிவுகளையும் இன்னல்களையும் அனுபவித்தும் இதுவரை அதற்கான பதில்கள் கிடைக்காத நிலையிலும் எமது தியாகம் ஒரு நாளும் வீணாகாது எனும் ஒரே நம்பிக்கையுடன் இன்றும் ஈழ மண்ணில் தமிழ் தேசிய உறுதியுடன் மனதை திடமாக்கிக்கொண்டு தாயக மண்ணில் வாழும் எங்களுக்கு புலத்தில் நடக்கும் பல்வேறு செயற்பாடுகள் எங்களை மீண்டுமொருமுறை உயிருடன் புதைப்பது போன்றே உள்ளது.

எந்தச் சுயநலமும் எதிர்பார்ப்பும் இல்லாது இன விடுதலையை மட்டுமே இலக்காகக் கொண்டு வீரகாவியமான எமது மாவீரச் செல்வங்களை நினைவு கூறும் தினத்தை அனுஷ்டிக்கும் நிகழ்வுக்கு யார் தலைமை தாங்குவது என்பதிலையே ஒற்றுமையில்லாது புலத்தில் இன்று இதிலுமா பிரிவு என்ற கேள்விகேட்கும் நிலையில் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு ஏட்டிக்கு போட்டியாக நிற்பதை பார்க்கும் போது உண்மையில் இத்தனை இழப்புக்கு மத்தியிலும் மனஉறுதியுடன் இருக்கும் எங்களுக்கு மனச்சோர்வையும் சலிப்பையுமே ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான சுயநலங்களுக்காக பிரிந்து பிரிந்து செயற்படும் உங்களின் செயல்கள் எமது உறவுகளின் விலைமதிக்கமுடியாத உயிர்தியாகங்களில் குளிர்காய்வதாகவே உள்ளது.

எமது மாவீரர்களை கார்திகை 27 இல் மட்டுமல்ல ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் எமது நெஞ்சுக்குள் உச்சரிக்க வேண்டும். எமது போராட்டத்தின் தியாகத்துக்கு எமக்கு எப்போவோ பதில் கிடைத்திருக்கவேண்டும். ஆனால் எமது ஒற்றுமையீனமே இவ்வளவு காலதாமதத்துக்கும் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஈழ மண்ணில் சிந்திய இரத்ததிலும் இழந்த உறவுகளின் தியாகத்தினாலும் எமது போராட்டம் இன்று சர்வதேச ரீதியாக வியாபித்து எமக்கான சாதகமான நிலைமை அதனால் உருவாகிவரும் வேளையில் எமது சர்வதேச ரீதியிலான போராட்டத்தை நாம் அனைவரும் குறிப்பாக புலத்திலுள்ள எம் உறவுகள் ஒற்றுமையுடன் மிகநுணுக்கமாக நகர்த்த வேண்டிய காலப்பொழுதில் சுய நலங்களுக்காகவும் பதவிகளுக்காகவும் நாம் பிரிந்து பிரிந்து நிற்பது எமது சாபமா? அல்லது சதியா? இதனை எம்மக்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

எமது மாவீரச் செல்வங்கள் அவர்களை எதற்காக மாய்த்துக் கொண்டார்களோ அந்த இலட்சியத்தை வெல்ல ஒற்றுமையுடன் நாம் பயணிக்க உறுதியெடுக்க வேண்டிய நாளில் அவர்களின் பெயரால் பிழைப்பு நடத்த எத்தனிக்கும் எவரையும் வரலாறும் எமது மக்களும் மன்னிக்கமாட்டார்கள்.
.
கடந்த காலங்களில் களத்தில் ஆயுதம் மௌனிக்காதவரை புலத்தில் எந்த குழப்பமும் இல்லாமல் நிகழ்ந்தன. ஆனால் முள்ளிவாய்க்காலில் ஆயுதம் மௌனிக்கப்பட்டதும் புலத்தில் ஒவ்வொரு நிகழ்வின்போதும் எம்மவர்களுக்குள் ஏற்படும் பிளவுள் பலரின் சுயநலங்களையும் அவர்களின் உள்நோக்கங்களையுமே கோடிட்டு காட்டுகிறது.

எமக்காக விலைமதிக்க முடியாத உயிரை தியகம் செய்த எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூறுவதிலையே ஒற்றுமையில்லாது புலத்தில் சிலர் குறுக்கிட்டு பிரிவுகளாக போட்டிபோட்டுக்குகொண்டு குழப்பத்தில் நிற்பதால் எமது மாவீரர்களின் ஆத்மா நிச்சயம் சாந்திபெறாது.

இதுவரை காலமும் மாவீரர் நிகழ்வு இடம் பெற்றதைப்போன்று இம்முறையும் நிகழ்வை ஒற்றுமையாக நடத்துவதில் என்ன குழப்பம். அவர்களில் ஏதும் குறைகள் இருந்தால் குறிப்பிட்டவர்களை மாற்றம் செய்துவிட்டு எல்லோரும் ஒற்றுமையாக இந்நிகழ்வை நடத்த வேண்டியதுதானே?

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து உற்றுநோக்கும் இந்நிகழ்வை நடத்துவதால் தாங்கள் பெருமை தேடிக்கொள்வதற்காகவா புதிதுபுதிதாக பிரிந்து பிரிந்து இந்கிழ்வுகளை நடத்த முயற்சிக்கின்றீர்கள்?

முட்டிமோதும் நீங்கள் தற்போதைய சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டடத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலத்தில் இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், சிறிலங்கா அரசின் அநியாயங்களுக்கெதிராக இடம்பெறும் போராட்டங்களை ஏன் போட்டி போட்டுக் கொண்டு நடத்த முன்வரமுடியவில்லை. முதலில் அதனைச் செய்யுங்கள்.

தாயக விடுதலைப்போராட்டம் புலம்பெயர்ந்த எமது உறவுகளினால் இன்று முன்னெடுக்கப்பட்டாலும் புலத்தில் வாழும் எம்மவர்கள் பலர் ஐரோப்பிய நாடுகளில் யூரோக்களையும் டொலர்களையும் சொகுசு வாகனங்களையும் ஆடம்பர வாழ்க்கையையும் அனுபவிப்பது எதனால் என்பதை மறந்து செயற்படுகின்றார்கள்.

ஈழத்தில் சிந்தப்பட்ட குருதியாலும் உயிர்த் தியாகத்தாலுமே தாங்கள் இவற்றை அனுபவிக்கின்றார்கள் என்பதனை மறந்துவிட்டு அங்கிருந்துகொண்டு வீர வசனம் பேசுவதும் சுயநலங்களுக்குகாக முகம்காட்டி புகழ்சேர்ப்பதற்காக முட்டிமோதுவது சரிதானா என்பதை உங்களின் உள்ளத்தைத் தொட்டு கேளுங்கள்.

தாயக மண்ணில் எத்தனையோ குடும்பங்கள் யுத்தத்தின் கோரத்தால் தாயை, தந்தையை, அண்ணனை, தம்பியை, அக்காவை இழந்து அவயவங்களை இழந்து தவித்துத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர். இவர்களின் வாழ்வுக்கும் ஒரு வேளை உணவுக்கும் வழி செய்வதற்கு நீங்கள் போட்டிபோடுங்கள். எமது மாவீர் செல்வங்களின் ஆத்மா நிச்சயம் சாந்தியடையும்.

அதைவிடுத்து சுயலாபங்களுக்காக இன்னும் இன்னும் பல பிரிவுகளாக பிரிந்து நின்று செயற்படுவதால் எமது மக்களின் ஒற்றுமையை நிலை நாட்டி இலக்கை எப்படி அடைவது?

எமக்குள் ஊடுருவி எம்மை பலகோணங்களில் குழப்பி எமக்குள் ஒற்றுமையீனத்தை ஏற்படுத்தி எமது மக்களை குழப்பி எங்களின் தற்போதைய சர்வதேச அரசியலை சின்னாபின்னமாக்க முனையும் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவின் சதிவேலைத்திட்டத்துக்கு வலுச்சேர்த்துவிடாமல் இருக்க எமது மக்கள் தெளிவாக இருந்து செயற்பட்டு சுயநலவாதிகள் யார் யார் என்பதை இனம் கண்டு செயற்படவேண்டியது கட்டாயமாகும்.

எனவே இதுவரை இழந்த இழப்புக்காக பதிலை எமது ஒற்றுமையூடாகவே நாம் பெறவேண்டும். தாயக மண்ணில் மாவீரர் நிகழ்வுகளை முற்றத்தில் கூட நடத்த முடியாக நிலையில் நாங்கள் மனதுக்குள் அனுஷ்டிக்கின்றோம்.

ஆனால் நீங்கள் அங்கு அதனை பொதுவாக செய்வதிலேயே உங்களின் சுயநலங்களுக்காக பிரிந்து நிற்கின்றீர்கள் என்பதே எமது பெருங்கவலை.

இவ்வண்ணம்
தாயகத்திலிருந்து
எம்.பரணி


%d bloggers like this: