தமிழீழம்

வீர சபதமெடுக்கும் மதிப்பான நாளை நெருங்கிவிட்டோம்…- அன்புமணி

இவர்களின் வழிகாட்டலிலே…………………

‘கல்லறைத் தெய்வங்கள் கண்ணெதிரே வந்து என்னென்னமோ கதைப்பார்கள்
அந்தப் புண்ணியநேரத்தில் வண்ணங்கள் ஆயிரம் பின்னிடவே சிரிப்பார்கள்…
இது குருதியோடும் நரம்பிலாடும் உணர்வின் தரிசனம்
யாரும் வெளியில் நின்று அறியமுடியா உயரிய தரிசனம்…..’

உயிரை உருக்கும் இந்த உணர்வு வரிகளைக் கேட்கும்போதெல்லாம் நவம்பர் மாதத்து இறுதிப்பகுதிதான் அனைவரின் கண்முன்னே வந்து நிற்கும். நவம்பர் மாதம் தமிழர்களின் எழுச்சிக்குரிய மாதம். விடுதலைக்காய் விதையாகிப்போன வீரமறவர்களின் தியாகங்களை நினைவிருத்தி தொழுதேற்றி அவர்சுமந்த விடுதலைக்கனலை எம்முள்ளே உருவேற்றி வீரவிடுதலைப்போரிற்கு வல்லமை சேர்க்கும் மகத்தான மாதம். தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிக்கொண்ட ஆயிரமாயிரம் வேங்கைகளை ஒருசேர நினைத்து நெக்குருகி கலங்கியழுது பின் தேறி, கல்லறைமேனியர் மீது வீர சபதமெடுத்து, தாயக விடுதலைப்பயணத்தை தொடரும் உணர்ச்சிகரமான நாளிற்குரிய மாதம்…

எமது மாவீரர்களின் வாழ்வும், அவர்களது வீரவிடுதலைப்பயணமும், வரலாறும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. எமது மாவீரர்களின் தியாகத்தின் ஆழத்தை எவராலும் அளவிட முடியாதது. எமது பெருந்தலைவனின் வழிகாட்டலில் களமாடி வீழ்ந்த ஆயிரமாயிரம் மாவீரர்கள் புரிந்த சாதனைகள் எண்ணிலடங்காதது. அடங்கிக் கிடந்த தமிழினத்திற்கு முகவரியளித்த எமது தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து, எமது மாவீரர்கள் புரிந்த ஈகங்களின் அர்த்தபரிமாணங்கள் மானிடகுல வரலாற்றில் என்றுமே நீடித்து நிலைத்து நிற்கும். இத்தகைய புனிதர்கள் உயிர்த்தெழும் நாளான நவம்பர்-27 ஐ நாம் அணுகிக்கொண்டிருக்கிறோம்.

“எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகங்காட்டியே மறுபடி உறங்குங்கள்…”

என்று கல்லறைமுன் நின்று கதறியழுது பின் அங்கு சுடர்விடும் தீப ஒளியில் அவர் திருமுகங்கண்டு அவர்கள் உறங்கும் கல்லறைமீது வீர சபதமேற்று அவர்கள் எமக்கு தோன்றாத்துணையாக நின்று வழிகாட்டுவார்கள் என்ற தைரியத்தில் மீண்டும் பணிக்குச்சென்ற நாட்களை நினைக்கின்றேன்…..

தாயகத்திலிருந்த எல்லாத்துயிலுமில்லங்களிற்கும் சென்றிருக்கிறேன். ஆனாலும் மாவீரர் நாளன்று நான் சென்றதென்பது மிகவும் அரிது. அப்போது யாழ்ப்பாணப்பகுதியில் எங்களுடைய ஒரு அணிநின்றிருந்தது. 2000ம் ஆண்டு, யுத்தம் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதி. நேரம் நள்ளிரவு 12.00 ஐ எட்டிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலுமில்லத்துக்கருகில் தயாராய்; நின்றுகொண்டிருந்தோம். எதிரி அப்பகுதியைச் சூழ பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தான். எங்கள் சந்தனமேனியர் உறங்கிக்கொண்டிருந்த கல்லறைகள் அனைத்தும் சிதைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் எப்படியாவது தீபமேற்றுவதென்ற உறுதியுடன் அங்குசென்றோம். சரியாக 12.00 மணி. நாம் தீபம் ஏற்றும் நேரம் எதிரி சுடத்தொடங்கிவிட்டான.; அதுவும் எமக்கு மிக அருகிலிருந்து. சண்டை தொடங்கிவிட்டது. என்னுடன் நின்ற இரண்டுதோழர்களும் காயப்பட்டு வீழ்ந்தனர். எனக்கும் காயம் ஆனாலும் ஓரளவிற்கு ஓடக்கூடியதாக இருந்து. இறுதிநேரத்திலும் அவர்களுடைய முகத்தில் ஒருவித புன்னகை பெருமிதம் எம்மை ஓடச்சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் இறுதிவரை சண்டைபிடித்தார்கள்…இறுதியில் இயக்கமரபுக்கேற்ப தங்கள் முடிவை எடுத்துக்கொண்டார்கள்..ஆனாலும் அவர்கள் உயிர்கொடுத்து ஏற்றிய தீபச்சுடர் அந்தப்பிரதேசமெங்கும் நீண்டநேரம் பிரகாசித்துக்கொண்டிருந்தது.

2002ம் ஆண்டு. அப்போது போர் ஓய்வுக்காலம். எப்படியாவது இந்தமுறை விசுவமடு துயிலும்மில்லத்திற்கு போக வேண்டும் என்ற ஆதங்கத்தில் புறப்பட்டேன். என்னுடன் களமாடிய எத்தனையோ கிழக்குமாகாண மாவீரர்கள் அங்கே விதைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருமுறை என்னுடைய நண்பன் ஒருவனை விதைப்பதற்காக அங்குபோனபோது அவனது பெற்றோர்கள் வரவில்லை. அவர்கள்; இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். அதனால் நாங்களே அவனுடைய இறுதிச்சடங்கைச் செய்தோம். இவனுக்குப்பக்கத்திலதான் நானும் இருக்கவேணும் என கல்லறைக்கு இடம்பார்த்த இவனுடைய உயிர்நண்பன் ஒருவன் மறுநாள் நடந்த சண்டையில் வீரமரணமடைந்து இவனுக்கு அருகிலேயே அவனையும் விதைக்கவேண்டிய சூழல் எமக்கு ஏற்பட்டது.

என்னுடைய தோழர்கள் பலர் தாங்கள் வீரச்சாவடைந்தால் தங்களுடைய கல்லறைக்கு வந்து தீபமேற்றும்படி என்னிடம் சொல்லியிருந்தார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் கிழக்குமாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் இருந்தார்கள். சிலர் உயிருடன் இல்லை. அந்தநாள் புல்லரிக்கும் அனுபவம். சாரைசாரையாக மக்கள் உணர்வுமயமாக புடை சூழ மெல்லிரவில் குளிரான தென்றலில்; மிகவும் அமைதியாக கல்லறைகளிற்கு நெய்விளக்கேற்றி சுடர்விடும் தீப ஒளியில் வீரமுகங்கண்டு அவர்விட்டுச்சென்ற பணிமுடித்ததிருப்தியில் அவர்களுடன் நீளக்கதைபேசும் உணர்வுமயமான பொழுது.

ஆனால் இன்று எங்கள் செல்வங்களை கண்முன்னே பறிகொடுத்த பாவிகளாக மனதிலும், உடலிலும் அந்த வடுக்களைச் சுமந்து நடைப்பிணங்களாக நிற்கின்றோம். ஊரையிழந்தோம். உறவுகளைப் பிரிந்தோம். நீளத்திரிந்த எங்கள் வீதிகளைப் பறிகொடுத்தோம். எல்லாவற்றையும் விட கல்லறைக்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த எங்கள் கண்மணியரைக்கூட இழந்தோம்.

“தாயகக் கனவுடன் சாவினைத்தழுவிய சந்தனப்பேழைகளே
இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா குழியினுள் வாழ்பவரே…”

மாவீரர்களின் பெற்றோர,; உறவுகள், சகோதரர்கள் கல்லறைகளை அணைத்துக் கதறுகின்றபோது மனது பிழியும். கண்களில் நீர்கோர்க்கும். மெதுவாக அவர்களை அணைத்து ஆறுதல் சொல்லும்போது.. களத்தில்நின்று எம் தோழர்கள் … “அம்மா கவனம். தங்கச்சியை அழவிடாதை” என்று அடிக்கடி கூறும் வசனங்கள் நினைவிற்குள் வரும்…

அவர்கள் ஈழம் வருமென நீள்துயில்கொண்ட கல்லறை முற்றங்கள் அடையாளமே இல்லாமல் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன….நினைக்கவே இதயம் வெடித்துப்பிளக்கிறது. நெஞ்சுபிழிந்து விம்முகிறது. எல்லாவற்றையும் பறிகொடுத்தோம். எங்கள் வீரவிழுதுகளை சந்தனப்பேழைகளிலிட்டு அடைகாக்க வைத்துவிட்டு நாங்கள் மட்டும் தனியர்களாய் அலைகின்றோம்.

“உங்களைப்பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே உங்களேடாடிய தோழர்கள் வந்துள்ளோம்…
வல்லமைதாரும் என்றுங்களின் வாசலிலில் வந்துமே வணங்குகிறோம்
உங்கள் கல்லறைமீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கிறோம்..”

மனது கதறியழும.; ஆனால் கத்தமுடியாது. கண்ணீரை மெதுவாய்த் துடைக்க ஒன்றாய் நின்று, உண்டு, படுத்து, உறவாடிக் களத்திலே மடியிலே உயிர்பிரிந்த மறவர்களின் நினைவையிட்டு மனங்கனக்கும்…எத்தனை சண்டைகளிற்கு ஒன்றாய் அணிதிரண்டு சென்றிருக்கின்றோம். காடுகள், மேடுகள், குளங்கள் என சுற்றியிருக்கின்றோம். சாப்பாட்டுக்குக் கூடச்சண்டைபிடித்திருக்கின்றோம். ஒருகூட்டுக்கிளிகளாய் வசந்தகாலப்பறவைகளாய் வாழ்ந்து விடுதலைக்காக ஒவ்வொருவராய் வீழ்ந்துமடிகின்றபோதும் அவர்களை எம்கைகளாலேயே விதைக்கின்றபோதும் எமக்குள்ளே உறுதிபெற்றுக்கொண்டிருக்கின்றோம்.

களமாடிய நினைவுகள் மீண்டும் சுழலும் காலக் கண்ணாடியில் எதிர்காலம் பிரதிபலிக்கும்… எம்முன்னே ஆயிரம் சுமைகள் தாண்டவேண்டிய தூரம் வெகுவாய் விரியும். மனம் சோரும். உடல் களைக்கும். ஆனாலும் கார்த்திகை தீபங்களில் தெரியும் எம் வீரவிழுதுகளின் விரியும் நினைவுகளில் அவர்களுடன் ஆடிய களங்களில் பேசிய மொழிகளில், சிந்திய குருதியில், அவர்களின் பற்றற்ற வாழ்க்கையில் விரியும் வீரம் எமக்கு உறுதிதரும். அவர்கள் தீபச்சுடர்களாய் எமக்குள் பேசும் மொழிகளில் ஆயிரம் சேதிகள் காதடையும். அவர்கள் கல்லறை மேனியைத் தழுவும் காற்று எமக்குள் புகுந்து வீரஉணர்வேற்றும்..ஆனால் எல்லாம் இன்று சூனியமாய்…

“சாவரும் போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது…
உயிர்விடும்வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்
அதைநிரைநிரையாகவே நின்றினிவிரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்..”

எத்தனைபேரை விலையாய்க்கொடுத்தோம் எத்தனை துயரம் சுமந்து நடந்தோம்.அக்கினி பிரவாகம் என்றுதெரிந்தும் விடுதலைக்காய் தீக்குளித்தோம். பாரம் என்று தெரிந்தும் தேசத்திற்காய் சிலுவைசுமந்தோம்…ஈழம் என்ற உயரிய கொள்கைக்காக நாம்கொடுத்தவிலை கணக்கற்றது…களத்திலே ஒவ்வொரு வீரனும் விழுகின்ற போதெல்லாம், தம் சாவுத்தேதி குறித்து கரும்புலிகள் பகைவீடு புகுகின்ற போதெல்லாம,; ஊரறியாமல் பேரறியாமல் அந்நியத்தெருக்களில் அனாதைகளாக மறைமுகக் கரும்புலிகள் வெடிக்கின்றபோதெல்லாம் அவர்கள் உச்சரிப்பது ‘புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்’என்ற தாரக மந்திரத்தை தவிர வேறெதுவுமில்லை..

எங்கள் தாய் மண் இன்று சின்னா பின்னமாய் போன நிலையிலும் .. எம் வீரத்தின் சிகரங்கள் வாழ்ந்த மண் இன்று அந்நியனின் காலில் விழுந்து கிடக்கின்றன ..

இந்நிலையில் எம் மக்களின் உதிரம் இன்றும் நிலத்தில் விழுந்த வண்ணமதான் இருக்கின்றன ..

எம் மண்ணுக்காய் …
மக்களுக்காய் ..
தேச விடுதலைக்காய் ..

தம்முயிரை துச்சம் என மதித்து மடிந்த மாவீரச் செல்வங்களின் சிதைக்கப்பட்ட கல்லறைகளை நினைத்து அதன் திசைநோக்கி சிரம் தாழ்த்தி …மலர் தூவி… தீபம் ஏற்றி உறுதியெடுக்கும் நாளை நெருங்கிவிட்டோம் ….

இது வரை நாம் இழந்த எம் மாவீரச் செல்வங்களை நினைத்து, தேசவிடுதலைப்பயணத்தில் மரணித்த ஆயிரமாயிரம் மக்களை நினைத்து, அவர்கள் இறுதிவரை சுமந்த இலட்சியங்களை நிறைவேற்றுவோம் என்று உறுதி கூரும் வீரநாளை நெருங்கிவிட்டோம் …….

 “தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம்
எந்த நிலைவரும்போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்…”

என்று வீர சபதமெடுக்கும் மதிப்பான நாளை நெருங்கிவிட்டோம்…

நாம் அனைவரும் மீண்டும் புயலாய் தாயக விடுதலை நோக்கிப் பயணிப்போம். இந்த நவம்பர் மாதம் எங்கள் விடுதலைப்போருக்கு புதிய பாதையில் புதியவேகம் கொடுத்ததாய் வரலாற்றை மாற்றி அமைப்போம். தாயக விடுதலைக்காக இன்னுயிர்களைத் தந்த மாவீரர் பாதம் தொட்டு அவர்கள் விழித்தெழும் திருநாளில் வீரசபதமேற்று விடுதலைக்காய் பயணிப்போம்….

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
அன்புமணி.