இந்தியா

ஒன்று போனால் ஒன்று இலவசம்.ஒரு அமைச்சரோடு இன்னொரு அமைச்சரையும் நீக்கினார் ஜெ.

தமிழக சட்டத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.பரஞ்சோதி. இதையடுத்து அவர் அமைச் சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒன்று போனால் ஒன்று இலவசம் என்பதுமாதிரி சமூக நலத்துறை அமைச்சர் செல்வி. ராமஜெயத்தையும் அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா.

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பே பரஞ்சோதி மீது, திருமணம் செய்தவதாக கூறி ஏமாற்றினார் என்று டாக்டர் ராணி புகார் கூறினார். ஆனாலும் அத்தேர்தலில் வெற்றி பெற்றார் பரஞ்சோதி.

வெற்றி பெற்ற அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவரிடம் சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் ராணி, பரஞ்சோதி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார்.

விசாரணைக்குபின் நீதிமன்ற உத்தரவை அடுத்து பரஞ்சோதி மீது திருச்சி போலீஸ், கொலை முயற்சி மற்றும் பெண்களூக்கு எதிரான வன்கொடுமை சட்டம் என்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து தமிழக அமைச்சரவையில் இருந்து பரஞ்சோதியை நீக்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்தும் பரஞ்சோதி நீக்கப்பட்டார்.

சமூக நலத்துறை அமைச்சர் செல்வி.ராமஜெயமும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பாக சட்டத்துறை அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், சிறைத்துறை பொறுப்பையும் அவரே வகிப்பார்.

சமூக நலத்துறை அமைச்சராக பா.வளர்மதி அறிவிக்கப்பட்டுள்ளார்.சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வானவர் பா.வளர்மதி.

இந்து சமயநிலையத்துறை அமைச்சரானார் எம்.எஸ். எம். ஆனந்தன். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.