அனைத்துலகம்

ஈரானின் மர்மத் தாக்குதல்: திக்குத் தடுமாறியுள்ள அமெரிக்கா !

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவு பார்க்கும் விமானமான (RQ – 170) ஈரான் நாட்டு இராணுவத்தால் சுட்டி வீழ்த்தப்பட்டது யாவரும் அறிந்ததே. முதலில் அது தமது விமானம் இல்லை எனத் தெரிவித்த அமெரிக்கா பின்னர் அது தம்முடைய விமானம் தான் என ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.-யின் மிகத் துல்லியமான, மற்ரும் அதிக பெறுமதிமிக்க இந்த விமானத்தை ஈரானிடம் எவ்வாறு அமெரிக்கா இழந்தது ? அதி நவீன தொழில் நுட்ப்பம் கொண்ட இந்த விமானம் உருமறைப்பு மற்றும் தான் பறக்கும் இடத்தை ராடர் திரைகளில் வேறு இடத்தில் பறப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா இழந்துள்ள RQ- 170 மாடல் விமானம், வெளிநாடுகளை உளவு பார்ப்பதற்காக சி.ஐ.ஏ. ரகசியமாக உபயோகித்த விமானம். பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்திருந்த கம்பவுண்டை வானில் இருந்து மாதக் கணக்கில் உளவு பார்த்து தகவல் கொடுத்த விமானமும் இதுவே. இந்த விமானத்தில் இருந்து கிடைத்த லைவ் வீடியோ ட்ரான்ஸ்மிஷனை வைத்தே, பின்லேடனின் நடமாட்டம் அந்த கம்பவுண்டுக்குள் உள்ளது என்பதை சி.ஐ.ஏ. உறுதி செய்து கொண்டது. பின்லேடன் கொல்லப்பட்டு ஒரு மாதத்தின் பின்னரே, அந்த ஆபரேஷனுக்கு RQ-170 உளவு விமானம் உபயோகிக்கப்பட்ட தகவலை சி.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் ஒரு தொழில்நுட்ப தந்திரம் செய்யப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. குறிப்பிட்ட விமானத்தில் இருந்து வருவது போன்ற போலியான சிக்னல்களை சி.ஐ.ஏ. ஏற்படுத்தியதாகவும், அந்த சிக்னல்களின்படி விமானம் ஆப்கானிஸ்தானுக்கு மேலாக அமெரிக்க ராணுவ நடவடிக்கை ஒன்றுக்காக பறந்து கொண்டிருப்பது போன்ற செயற்கைத் தோற்றம் ஏற்படுத்தப் பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள். அடிக்கடி இந்த விமானம் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதும் யாவரும் அறிந்த ஒன்றே. இதனை ஈரானிய ராடர்களும் கண்டறிய முடியாது. ஏன் எனில் ஈரான் நாட்டு ராடர் திரைகளில் அது ஆப்கானிஸ்தானுக்கு மேலாக பறப்பது போலவே தோன்றியிருக்கும். ஆனால் இதனை ஈரான் எவ்வாறு கண்டறிந்தது ? அதுமட்டுமல்லாது துல்லியமாக அதனை சுட்டு பாரிய சேதம் எதுவும் இன்றி அதனைக் கைப்பற்றியும் உள்ளது .

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.எஸ்.ஏ.எஃப் (International Security Assistance Force), இதே விமானம் பற்றி தமது செய்திக் குறிப்பில் ஒரு தகவல் வெளியிட்டிருந்தது. மேற்கு ஆப்கான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ற்Q௧70, காலநிலை காரணமாக திசைமாறிச் சென்றுவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் குறிப்பு வெளியாவதற்கு முன்னரே, விமானம் ஈரானால் கைப்பற்றப்பட்டதாக இப்போது தெரிய வருகின்றது. இந்தத் திசைதிருப்பலை ஈரான் எப்படிக் கண்டுபிடித்தது என்பதும், பறந்து கொண்டிருந்த விமானத்தை எப்படி தரைக்கு கொண்டு வந்தது என்பதும் இந்த நிமிடம்வரை மர்மமாகவே உள்ளது ! அமெரிக்கா நினைப்பது போல ஈரான் நாடு இல்லை என்பது மட்டும் தற்போது புரிந்திருக்கும் !